Tuesday, July 10, 2012

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)


அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)

by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி

அரபிக் கல்லூரி வளம் பெறுதல்
மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதா, ஹாஜியார் அவர்களின் (இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) அரவணைப்பில் சீரிய கவனம் பெறத்தலைப்பட்டது. அதனைப்  பெருக்கி வலுவும், விரிவும்  அடையச் செய்வதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார்கள். மதரஸாவின் நாஜிராக விளங்கி புகழ் பெற்ற அல்ஹாஜ் மௌலானா மௌலவி நா.ப. முஹம்மது இபுராஹீம் சாஹிப் அவர்கள், ஒவ்வொரு துறையிலும்  மதரஸாவின்  வளர்ச்சிக்கு ஹாஜியார் அவர்களுடனே தோள் கொடுத்து நின்றார்கள். மதரஸாவின் சேவையும்,வளர்ச்சியும் விண்முட்டுவதைக் காண்பதே தமது இலட்சியமாகக் கொண்டு உழைத்தார்கள்.  ஹாஜியார் அவர்கள் கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்காக யார் என்ன நல யோசனைகள் சொன்னாலும் கவனமுடன் கேட்பார்கள். பல பெரியோர்களின் யோசனைகளையும் நாடிச் செல்வார்கள். நீடூர்பிரபா வர்த்தகர் அல்ஹாஜ்  T.S. ராஜா முகம்மது அவர்களும் அவ்வொப்போது நல்கருத்துகள் சொல்லியும் கலந்துரையாடியும் ஊக்குவித்தார்கள்.   ஹாஜியார் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுப்ஹூ  தொழுகைக்குப்பின் நீண்ட நேரம் நண்பர்களுடன், மதரஸாவின் நேசர்களுடனும் அதனுடைய அபிவிருத்திக்காகவும் அழகிய வளர்ச்சிக்காகவும் கலந்தோலோசிப்பார்கள். பின்  மதரஸா மாணவர்கள் திருக் குர்ஆன் ஓதும் தேன்மழையில் நனைந்து உள்ளமும் உணர்ச்சியும் சிலிர்க்க மெய் மறந்திருப்பார்கள். அதன் பிறகே  தன் சொந்த அலுவல்களை கவனிக்கச் செல்வார்கள். திட்டமும் ,திண்ணிய எண்ணங்களும் செயல்படத் துவங்கின. பக்கத்து நாடான சிலோனில் வாழும் முஸ்லீம்கள் மார்க்கப் பட்றையும் இஸ்லாமியக் கல்வியின் இன்றியமையாதத் தன்மையையும் நன்குணர்ந்தவர்கள். அவைகளை செயல்படுத்த துணியும் செந்நேறியாளர்களை இருகரங்கள் நீட்டி வரவேற்க துடித்துக் கொண்டிருந்தார்கள்.மனிதகுல தந்தையான ஹஸ்ரத் ஆதம் (அலை)அவர்கள் தோன்றிய திருத்தலத்தை கொண்ட நாடல்லவா மார்க்கப் பற்று பீரிட்டெழுவதில் ஆச்சரியமில்லை. அவ்வுணர்வு அவர்களோடு ஊனோடும், உணர்வோடும் கலந்தது. நாடிப்பிடித்தறியும் சமுதாயத்தின் நல்வைத்தியரான ஹாஜியார் அவர்கள் நன்குணர்ந்தவர்கள். மதரஸாவின் வளர்ச்சியையே முழு மூச்சைக் கொண்ட தலைவர் அவர்கள் நாஜிர் அவர்களை சிலோனுக்கு அனுப்பினார்கள். செயலாற்றலும், சுவையான சொல்வளமும் கொண்ட  நாஜிர் நா.ப. அவர்கள் சிலோன் சென்றார்கள் அவர்கள் சுமந்து சென்ற நன்னோக்கையும் தலைவர் அவர்கள் வேண்டுகோளையும் கேட்ட அந்நாட்டுப்  பெருமக்கள்  உளமார வரவேற்று உபசரித்தார்கள். எடுத்த எடுப்பிலே புரவலர் சிலர் ரூபாய்  இருபத்து  ஏழாயிரதுக்கு மேல் தந்து மதரஸாவிற்கு நிலம் வாங்கி வைக்க முன் வந்தனர்.

 ஐவர் அடங்கிய  குழு  ஒன்றை  1945-ம் ஆண்டு  நீடூருக்கு அனுப்பி வைத்தார்கள். சிலோனிலிருந்து வந்த
செந்நெறியாளர்கள் தொகையை தலைவரான ஹாஜியார் அவர்களிடம் ஒப்புவித்து வேறு எந்த உதவி அவர்களால் செய்ய இயலும் என்று செப்பி நின்றனர். அப்பணத்தைக் கொண்டு கீழ்மராந்தூர்  என்னும் ஊரில்மதரஸாவிறகாக ஐந்து வெளி நிலம் வாங்கப்பட்டது.   ஹாஜியார் அவர்கள் அக்குழுவினருடன் கலந்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், கட்டிடத்தை விரிவுபடுத்த எண்ணினார்கள். அப்போது அறை ஒன்றிற்கு  ஐந்நூறு  ரூபாய் அளிப்பது என்ற திட்டம் உருவானது. சிலோனிலிருந்து வந்த சீலர்கள் உடனே அத்திட்டத்திற்கு ஆதரவு தந்தனர்.ஹாஜியார் அவர்கள் தமக்காகவும் தம் குடும்பத்தினருக்காகவும், ஐந்து அறைகளுக்கு பதிவு செய்துக் கொண்டார்கள். இத்திட்டத்தின் மூலம் 17 அறைகள் அறைகள் கொண்டிருந்த மதரஸா  1948-ல்  ஐம்பது அறைகளாக வளர்ச்சி பெற்று மாணவர்கள் எண்ணிக்கையும் நூறாக உயர்ந்தது. நவீன வசதிகளும் கட்டிடத்தில் அமைக்கப்பட்டன.  

1948-ம் ஆண்டு மதரஸாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஹாஜியார் அவர்கள்  ஏற்படுத்தினார்கள். நடுத்தர பள்ளியாக ஆலிம் ஸனது  மட்டும் வழங்கிக்கொண்டிருந்த  மதரஸா கல்லூரியாக உயர்த்தப்பட்டது.  அதே ஆண்டு முதல் பட்டமளிப்பு விழாவை மிகப் பெரிய அளவிலும் சிறந்த முறையிலும் செய்து வைத்தார்கள். அத்தகைய ஒரு விழாவிற்கு நாடெங்கினுமிருந்து நல்லடியார்கள் திரண்டு வந்தார்கள்

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே மேலும் பல வசதிகள் எற்படுத்தவும், திறமைமிக்க ஆசிரியர் குழு ஒன்று அமைக்கவும்,மதரஸாவிற்கு நிரந்தரமான  வருவாய் தேவைப்பட்டது. போதுமான சொதில்லாமல் செம்மையாக  நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்கள். மீண்டும் நாஜிர் மௌலவி நா.ப. முஹம்மது இபுராஹீம் அவர்களையும், சிறந்த பேச்சாளரான மௌலாபுலாலோ ஹஜ்ரத் அவர்களையும் கீழ்திசை நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள்  இருவரும்  1951-ம் ஆண்டு மலேசிய, சிங்கப்பூர், தெற்கு வியட்நாம், வடக்கு  வியட்நாம், முதலியநாடுகளில் விரிவாகப் பயணம் செய்தார்கள். சென்ற இடங்களிலெல்லாம் இந்தியர் பலர் வணிக மன்னர்களாகத் திகழ்ந்ததை கண்டு களிப்புற்றனர். பொருளீட்ட  பல ஆயிரங்கள் கடந்து சென்றாலும் பொன்னூர்ந்த மார்க்கப்பற்று அவர்கள்  உள்ளங்களில் இன்னும் பொங்கி வழிந்துக் கொண்டேயிருக்கிறது. அறச் செயல்களுக்கும் அறங்காக்கும் கல்விக் கூடங்களுக்கும் அவர்கள் தரும் ஆதரவும்,அரவணைப்பும் புகழ்மிக்கது. ஹாஜியார் அவர்கள் கீழ்திசை நாடுகளிலுள்ள அணைத்து முஸ்லீம் வியாபாரிக்களிடையேயும் நாக்கு அறிமுகமானவர்கள். தம்முடைய சீரிய செயல்களால் செம்மலேன போற்றப்பட்டார்கள். ஹாஜியார் அரபிக்கல்லூரிக்கு  தலைமையேற்றுள்ளார்கள் என்று  அறிந்ந்ததுமே புளகாங்கிதமடைந்திருக்கிரார்கள். ஹாஜியார் அவர்கள் கீழ்திசை நாடுகளிலுள்ள அணைத்து நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் ,பிரமுகர்களுக்கும் இரண்டு உளமா பெருமக்கள் வரும் நோக்கத்தி நேரிடையே எழுதினார்கள். தென்னகத்திலேயே சிறந்த கலைதீபத்தை உருவாக்க நினைக்கும் தமது சீரிய எண்ணத்தை வெளியிட்டார்கள். இஸ்லாமிய கலாசாரத்திற்கும்  அதை உலகெங்கும் பரப்பும் தூதர்களான உலமாக்களை உருவாக்கும் சிறப்புமிகு பணிக்கும், வாரி வசங்க முன் வந்தனர். சென்ற இடங்கள் தோறும் இரண்டு மௌலவிகளுக்கும்இரத்தினக் கம்பளம் விரிதாற்போன்று வரவேற்பு  நல்கப்பட்டது. கை நிறைய மனங்குளிர அள்ளித்தந்தார்கள். ரூபாய்  ஒரு லட்சத்திற்கு மேல் திரட்டிக் கொண்டு ஊர் திரும்பினார்கள். அந்த தொகையைக் கொண்டு மதரஸாவிற்கும்  பதினாறு வேலி நஞ்சை நிலம் வாங்கி வைத்தார்கள்.  கல்லூரி கட்டிடத்தை மேலும் புதுப்பித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வசதி செய்து தந்தார்கள். மதரஸா பணத்திலேயே அதற்கு  முன்னால் ஏட்டாவது வகுப்பு வரையிலான நடுத்தரப் பள்ளியையும் பெண்களுக்கு ஆரம்பப் பள்ளியோன்றையும் கட்டித்தந்தார்கள். தற்போது மதரஸாவின் முன்னால் கட்டப்பட்ட நடுதரப்பள்ளி இடிக்கப்பட்டு    ஜாமியா  மிஸ்பாஹுல்  ஹுதா பள்ளிவாசல் விரிவாக்கம் செயப்படுள்ளது.


Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)

இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்)அடுத்த பகுதியில் தொடரும் .....         
Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  

No comments: