Saturday, July 7, 2012

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)

(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)

  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின்  பொற்காலமான 1945 முதல் 1955 வரை  நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத்  துறையிலும் அப்பெருந்தொகை  ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும்  பாடுபட்டார்கள் என்று  சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும்    மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும்  ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்துணரத்தக்கது. அவர்களது செயலும், செந்நெறியும்  எல்லோருக்கும்  வழி காட்டக் கூடியன. தலைவனுக்கேற்ற பெருந்தன்மையும் ஒரு சமூகத்தை நடத்திச் செல்லத் தக்க நிர்வாகத் திறமையும், தீயவைகளை துணிந்தெதிர்க்கும்  தறுகண்மையும் அல்லவை துடைத்து நல்லவை செய்யும்   நற்பண்பும், வரையாது வழங்கும் அக் வள்ளற்றன்மையும், ஒருங்கே பெற்றவர்களாதலால், இன்றைய தலைமுறையினருக்கு  அவர்களது வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்களது வாழ்க்கை வரலாற்றினைக் காண்போம். இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்.
தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள்


இளமைப் பருவம்:



 (அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் தன் சகோதரர் ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹிமான் சாஹிப்)

 ஹாஜியார் அவர்கள் 1895 -ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள நீடூரில் ஈசுப் சாஹிபிற்கு இரண்டாவது குமாரராகப் பிறந்தார்கள். ஹாஜியார் அவர்களின் மூத்த சகோதரர் பெரிய முதலாளி  என்ற மரியாதையாக அனைத்த மக்களாலும் அழைக்கப்பட்ட ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹிமான் சாஹிப் ஆவார்கள். ஹாஜியார் அவர்கள் சின்னமுதலாளி என்று எல்லோராலும் அன்போடும் கண்ணியத்தோடும் அழைக்கப் பட்டார்கள்.  நீடூரில் பெண் குலத்திற்கு திருமறை கற்றுக் கொடுத்தவரும், ஒதுரம்மா என்ற அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்ட ஜுலைகா அம்மா அவர்களது சகோதரியாவார். ஹாஜியார் அவர்கள் அக்காலவழக்கப்படி ஏற்றபருவம் எய்தியவுடன் திண்ணை பள்ளிக்கூடத்தில்  சேர்ந்து பள்ளி வாழ்க்கையை தொடங்கினார்கள். தாய்மொழியான தமிழ்க் கல்வியுடன் மார்க்கக் கல்வியையும் கற்றார்கள். பிறகு மாயூரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து 1910 -ம் ஆண்டு  7-ம் படிவத்தில் தேர்ச்சி பெற்றார்கள். பாலகனுக்கு இஸ்லாமியக் கல்வியில் உயர் படிப்பு கற்பிக்க எண்ணிய  தந்தை ஈசுப் சாஹிப் அவர்கள் மகன் அப்துல் காதரை  புகழ் பெற்ற வேலூர் பாக்கியாதுஸ்ஸாலி ஹாத் மத்ரஹா வில் சேர்ப்பித்தார்கள். அண்டை வீட்டு ம.அ. பக்கீர் முகம்மது அவர்களும் உடன் சேர்ந்தார்கள். 

     அங்கு இருவரும் சம்சுல் உளமாய 'செய்குள் ஹிந்த்',மொவ்லானா மொலவி  அப்துல் வஹாப் பானியே மதரசா அவர்களிடம் நேரிடையே கல்வி பயிலும் பேறு பெற்றனர். சிறாத்துல் இஸ்லாம்,சிறாத்துன் னஜாத், தவாரீஹ் ஹபீபே போன்ற பாடங்களை இயற்றிய பானி ஹஜ்ரத்  அவர்களிடமே மாணவர்களாக இருந்து அப்பாடங்களைப்  கற்றனர்.புத்தகங்களை இயற்றிய ஆசிரியர்களிடமே  அப்பாடங்களை கற்கும் பேறு சிலருக்கே கிடைக்கிறது.அப்பேற்றினை அடைந்தவர்களில் ஹாஜியார் அவர்களும் ஒருவராவார்கள் என  அறிந்து மகிழ்கிறோம்.ஹாஜியார்அங்கு மார்க்க சட்ட திட்டங்களையும் குர்ஆன், ஹதீது முதலியவைகளையும் ஐயந்திரிபுற  கற்றார்கள். அங்கு அவர்கள் பெற்ற இஸ்லாமிய ஞானம் பிற்காலத்தில் இஸ்லாமிய கல்விக்காகவும் ,தூய சாந்தி மார்க்கத்தில் நிற்பதற்கு வித்தாகவும் இருந்தது எனலாம்.  வெளிநாட்டுப் பயணம்

 நண்பர்களும் உறவினர்களும் கீழ்திசை நாடுகளுக்கு சென்று பொருளீட்டி வந்தனர்.  ஹாஜியார் அவர்ககள் தானும்  விருப்பங்கொண்டு  1912 -ம் ஆண்டில் பினாங்கு, சிங்கப்பூர், சைகோன்,ஹன்னோய்  முதலிய இடங்களுக்குச் சென்று வியாபார நுணுக்கங்களைக் கடு கற்று வாணிபத்தில்  தேர்ச்சி பெற்று  1914-ம் ஆண்டு தாய்நாடு திரும்பினார்கள். நீடூரில் உள்ள குடும்பத்திற்குச் சொந்தமான மளிகை வியாபாரத்தை ஏற்று எல்லோரும் போற்றும் வண்ணம் அதை நடத்தி வந்தார்கள்.

திருமணம்.

வாலிபப் பருவம் எய்தினார்கள். அவர்களின் சுறுசுறுப்பும் கொடுத்த காரியத்தை எடுத்து  முடிக்கும் செயல்திறனும் வாணிபத் துறையில் கண்ட வெற்றிகளும் அனைவரையும் வசீகரித்தன.எல்லாவற்றிற்கும் மேலாக கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்தாகள்.பலர் தங்கள் பெண்களை மணமுடிக்க முன்வந்தனர்.ஆனால் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவரும்  மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  ஸ்தாபித்து ஒளியேற்றிவைத்து அங்கேயே ஆசிரியராகவும், இயக்கினராகவும் இருந்து அருஞ்செயல் புரிந்த மௌலானா மௌலவி ஹாஜி அப்துல் கரீம் கிப்லா அவர்களின் இளைய சகோதரியான உம்முசல்மா பீவியை  1917-ம் ஆண்டு மணமுடித்தார்கள்.அம்மாதரசியும் தன் வாழ்நாள் முழுவதும்,தன் பர்தாவின் ஒவ்வொரு செயலுக்கும் உறுதுணையாக நின்று அவர்களை ஊக்குவித்தார்கள். இத்தொடர்பின் மூலம் ஹாஜியார் அவர்கள் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவின் நிர்வாகத்தில் முழுபங்கு ஏற்று அதைத் தலைசிறந்த கலைத்தீபமாக அமர்த்தி வைக்க இறைவன் எண்ணினான் போலும். (உங்களின் மனைவியாகிய)அவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள். (பகறா 2:187) என்ற இறைவசனதிற்க்கொப்ப அவர்களது தூய  வாழ்கை அமைந்திருந்தது.

 வணிகம்
 தந்தை யூசுப் சாஹிப்  அவர்கள் தன் சகோதரர் கலந்தார் சாஹிப் அவர்களுடன் கூட்டுக் குடும்பம் நடத்தி வந்தார்கள்.குடும்பம் பெரிதாக விரிவடையவே, 1918-ம் ஆண்டு  நிடூரிலுள்ள வியாபாரத்தையும் , பழைய வீட்டையும் சகோதரர் கலந்தார் சாஹிப் அவர்களுக்கு கொடுத்து விட்டு வேறு புதிய வீடு ஒன்று தன் குடும்பத்திற்கு அமைத்துக் கொண்டார்கள். மாயூரத்தில் மளிகை கடை ஒன்றை நிறுவினார்கள். அதனை மகனார்  அப்துல் காதர் அவர்கள் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வந்தார்கள்.

 பொதுநலத் தொண்டு

அனுபவமும் ஆற்றலும் அவர்களுக்கு பெருகத்தலைப்பட்டன. அவற்றினூடே அன்பும், அறவழியும் இணைந்து வளர்ந்தன. சமூக  சேவை, சமுதாய சேவை ஆகியவற்றின் பக்கம் அவர்கள் நாட்டம் சென்றது. முதலில் பிறந்த ஊர்  பக்கம் கவனம் செலுத்தினார்கள். நீடூர்  ஒரு  சிற்றூராக பள்ளிவாசல் தெரு, மேலத்தெரு, கீழத் தெரு,  என்ற  மூன்று  தெருக்களுக்குள்  முடங்கிக் கிடந்தது. அஞ்சல் நிலையம் இல்லாமலும், ஊருக்கு அருகில் இரயில் பாதை இருந்தும் ஒரு  இரயில் நிலையம் இல்லாமலும் இருந்தது. 1918-ல் ஒரு கிளை அஞ்சல் நிலையம் நீடூரில் அமைப்பதற்கு அவர்கள் முன்னோடியாக இருந்தார்கள். தற்போது நீடூரில் இரயில் நிலையம் அமைந்திருக்கும் இடம் ஹாஜியார் அவர்களின் சொந்த இடமாகும். அந்த இடத்தை இனாமாக கொடுத்தது மட்டுமல்லாமல் அக்காலத்திலேயே ருபாய் ஆயிரத்திற்கு மேல் செலவு  செய்து இரயில் நிலையம் ஏற்படுவதற்கு மூல புருஷராக இருந்தார்கள்.நீடூரை  விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம்  அப்பொழுதே வேரூன்றலாயிற்று சமூகத்தில் அவர்கள் பெற்ற மதிப்பாலும்,ஆற்றலாலும் பல்வேறு கெளரவ பதவிகள் அவர்களை நாடி வந்தன. 1927 -ம் ஆண்டு முதல் 927 - 1935-வரை ஒன்பது ஆண்டுகள்  மாயூரத்தில் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியை  வகித்து வந்தார்கள். ஆங்கில கல்வியை அவர்கள் அதிகம் கற்கவில்லையாயினும் கற்றவர்களைவிட தம்முடைய கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் தூதூய இஸ்லாமிய நன்னெறியில் மிகைத்து நின்றார்கள். இளமைப் பருவத்திலிருந்தே நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அந்த நாட்குறிப்பே அவர்களுடைய அவர்களுடைய ஒவ்வொரு சேவையும், நிகழ்ச்சிகளையும் விரிவாக அறிய உதவுகிறது.

 1932-ல் தமது சகோதரர் ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹ்மான் சாஹிப்அவர்களிடம் மளிகைக் கடையை ஒப்புவித்துவிட்டு,தனியாக பாத்திரக்கடை ஒன்றைத் துவங்கினார்கள். தமக்கு உதவியாக அந்த வியாபாரத்தில் கருப்பூர்  ஹாஜி இ.பக்கீர் முகம்மது அவர்களை அமர்த்திக் கொண்டார்கள். தனித்த தொழிலும் ஹாஜி இ.பக்கீர் முகம்மது அவர்களின் ஒத்துழைப்பும் ஹாஜியார் அவர்களுக்கு சமுதாயச் சேவையில் பெருமளவு தம்மை  ஆட்படுத்திக் கொள்ள வசதியாயிருந்தது.  ஹாஜியார் அவர்கள் காலைப்பொழுதில் மட்டும்தான் கடையில் பார்க்கலாம். மாலைபொழுதில் அவர்களைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளின் பாதிப் பொழுதை சமுதாய சமூக சேவைக்கே ஒதுக்கியிருந்தார்கள். அவர்கள் எண்ணியிருந்தால் கோடி கோடியாகப் பணத்தை குவித்து பார்த்து ரசித்து இருக்கலாம். அதுவல்லவோ ஓர் இலட்சிய புருஷரின் இலக்கணம். இஸ்லாமிய பண்பில் ஊறியவர்கள், ஓர் உண்மை இஸ்லாமியனாகவே வாழ விரும்பினார்கள். நற்செயல்களில் ஒருவரை யொருவர் மிகைக்க மிகைக்க செய்யுங்கள் என்ற இறை வசனத்திற்கு ஒப்ப தலைப்பட்டார்கள்.
  நீடூருக்கு ஏழுகல் வடக்கே இருக்கிறது திருவாளப்புத்தூர் என்னும்  சிற்றுர். அங்கு முஸ்லிம், மக்கள் குடியிருப்பதற்கு மனைகளில்லாமல் அல்லற்பட்டு வந்தனர். இது நமது ஹாஜியார் கவனத்திற்கு வந்தது. வாளாவிருப்பார்களா! முழு முயற்சி செய்து ஜில்லா போர்டு மூலமாக   திருவாளப்புத்தூரில் 24  குடியிருப்புகள்  மனைகளுக்கு எற்பாடு செய்தார்கள். இவ்வாறு ஹாஜியார் அவர்களது சேவையின்  பலனை பிற ஊர் மக்களும் நுகரத் தலைப்பட்டனர்.

 ஹாஜியார் அவர்களது சகலரும், வட வியட்நாம்  ஹன்னேய் நகரில் பிரபல வியாபாரியாகத் திகழ்ந்தவருமான அல்ஹாஜ் பா. முகம்மது கனி அவர்கள்  நீடூரில் ஒரு பள்ளிவாசல் கட்ட விரும்பினார்கள்.  1934-ம் ஆண்டு ஹாஜியார் அவர்கள் தாம் முன்னின்று ரூபாய் பன்னிரண்டாயிரம்  செலவில் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவின் முன்னே அழகிய பள்ளிவாசலைத் தமது சகலருக்காகக் கட்டினார்கள்.

ஹஜ் யாத்திரை

  1937 -ம் வருடம் தாமும், தம் மனைவி, சகோதரி, ஆகியோரும் மற்றும் உறவினர்களும், நண்பர்களும் 20 பேர் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றப் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அல்லாஹ்வின் நல்லருளால் அனைவரும் ஹஜ்ஜை முடித்துத் திரும்பினார்கள்.

தொடரும்...

Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்   
 ------------------------------------------------------------------------------------------------------------
 நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal

 ஊருக்குப் பெருமை « SEASONSNIDUR
 அப்துல் காதர் தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழ்ந்தைகள் பிறந்தார்கள் 
7 ஆண்கள், 2 பெண்கள்.(ரகமத் உன்னிசா, பாத்திமாஜின்னா)
 ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது சயீது.B.A,.B.L.,. முகம்மதுஅலி ஜின்னா.B.A,.B.L.  
இரு சகோதரர்கள் அப்துல் அமீது, ஜக்கரியா இளம் வயதில் இறந்து விட்டார்கள்.  சபீர் அகமது,கமத் உன்னிசா,அப்துல் லத்தீப் முகம்மது சயீது.ஆகியோரும் இப்போது இல்லை.Inna Lilaahi Wa Inna Ilayhi Raajioon


——————————————————————————————–










“சிந்தனைக் களஞ்சியம்" என்ற தனது முதல் நூலை, தந்தை அப்துல் ஹாஜியார், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.
“எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.
“தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்" என்று திருக்குரான் கூறுகிறது.
நீடூரில் தான் வசித்த வீட்டுக்கு “சல்மா இல்லம்” என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார்

No comments: