Sunday, October 30, 2022

வாழ்க அனுதினம்...!

 

1969-1970-ஆண்டுகளில் அண்ணாமலைப் பல் கலைக் கழக வாழ்வின் காலத்துக் கவிதைகள்!

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்திலேயே வாழ்ந்த நேரமது!

வாழ்க அனுதினம்...!

நெற்றிப்  பக்கம்  காற்றில்  மிதக்கும்

         நெளிசுருள் முடியோ  வஞ்சம்!

சுற்றித் தொங்கும்  ஜடையின்  அசைவில்

         சுழலும்  நெஞ்சம்  தஞ்சம்!

சற்றே  மார்பு  குலுங்க  நடக்கும்

         சதிக்கோ  என்னுயிர் அஞ்சும்!

உற்றுப்  பார்த்தால்  பின்புறம்  தேவ

          ஊஞ்சல்!  என்விழி  மஞ்சம்!


விழிகள்  மதன   விபரம்   பேசி

          வியக்கச் செய்யும்  மொழித்தடம்!

துளியெனப்  பூக்கும்  வியர்வை  முத்து

          சொக்க  வைக்கும்   மதுக்குடம்!

தளிரென  ஒருநிறம்  தழுவிய   மேனி

           சதிவலை பின்னும்  ஒளிப்படம்!

பளிங்கென மின்னும்  கண்ணும்  முகமும்

             பனிமலர் குலாவும் எழில்மடம்!

பூவால்  செதுக்கிப்  பொருத்திய இதழ்கள்

             புரியும்  புன்னகை  தேன்பலா!

தூவா  மழையின்  தூய்மை அவள்மனச்

             சுடரில் அலையும்  ஒளியுலா!

போர்வாள்  இரண்டைப்  புருவம்  தாங்கிப்

              புதுமை  விதைக்கும்  வான்நிலா!

கார்வான்  இருளைக் கூந்தல்  வாங்கிக்

               கட்டி  முடித்த  பால்நிலா!

என்விழி உன்னுடல் படுமிடம் எல்லாம்

               இன்ப  நதியலை  தவழும்

தன்வழித்  தப்பித்   தரைக்கு   வந்த

                தாரகை  உன்விழி  புரளும்!

உன்குரல் செவியில் புகுந்ததும் அங்கே

                புல்லாங்  குழலாய்  உருளும்!

மின்னொளி இறங்கி  மென்பதம் தங்கி

               மெல்லடி  எடுத்து  நழுவும்!

இடையைச்   சுற்றி   என்விழி   ஊர

           இமைக்குள் எத்தனை ஊர்கோலம்!

தொடையைப்  பற்றித் தொடரும் சேலை

            ராஜ   யோக   அநுகூலம்!

நடையைச்  சற்றே  நகர்த்த   நகர்த்த

            நாடக  மேடை  அடையாளம்!

படையல்  சாத்தி  அவள்மடி  சாயப்

            பாக்கியம்  வேண்டும் பலகாலம்!

இரவு    வானின்    வர்ண   ஜாலம்

         என்னவள்  முன்னே  தலைகுனியும்!

பரவும்   தென்றல்    பையவே   வந்து

          பணிவாய்   நிற்கும்  நிலைதெரியும்!

துறவு வேண்டித் தொலைந்தார்  தமையும்

          துளைக்கும்  சாயல்  சுடரொளியும்!

உறவு    நாடி    ஆன்மா    கூட

          ஒருநாள்  அவளிடம் இடம்தேடும்!

சின்னச்  சிரிப்புத்   தெறிக்கும்   நேரம்

    சிலையிலும் உயர்ப்பசை முறுக்கேறும்!

முன்னம்   வந்தே   மெல்ல    அணைக்க

      மூச்சில்       எங்கும்       சூடேறும்!

கன்னம்   ஓரம்    செல்லக்     கடியில்

        காயம்     பதிக்க   வெறியேறும்!

இன்னும்   காலம்    விரைய   மானால்

         என்னுயிர்  முழுதும்  வெளியேறும்!

பவள     மல்லிப்     பூமர       நிழலில்

          படுக்கை   ஒன்றை   இடவேண்டும்!

தவழ     வருகிற     புன்னகை      அம்பைத்

           தனியே   என்மேல்    விடவேண்டும்!

கவள    நிலவுக்     குள்ளே       இருந்து

           கன்னி    அருகே  வரவேண்டும்!

அவளை  இறுக்கி  அணைத்துச் சுவைக்க

           அனுமதி  அவள்விழி  தரவேண்டும்!

தூறல்  மண்ணைத்  தொடுகிற  வேளைத்

       துளிர்க்கும்    தரையின்  நறுமணம்!

சாரல்   மலரின்   தலைதனைத்  தடவச்

        "சரி"யான   வழங்கும்   சம்மதம்!

ஏற     இறங்க     இழுபறிக்     காட்டி

       இறுதியில்   இணங்கும்  அணிலினம்!

தூரத்    தொலைவில்   நீயிருந்   தாலும்

        தூயவள்   வாழ்க   அனுதினம்!



Hilal Musthafa

No comments: