Wednesday, October 12, 2022

என் தந்தை உளுந்தூர்பேட்டை_சண்முகம் பி.எச்.டி., எம்.லிட்.,பற்றி அவரது ரசிகர் ஒருவர் எழுதியது/

 


உளுந்தூர்பேட்டை_சண்முகம் பி.எச்.டி.,  எம்.லிட்.

என் தந்தையாரை பற்றி அவரது ரசிகர் Elango Shanmugam எழுதியது 

 Thentamil Shanmugam எனக்கு Forwarded Message ஆக வந்தது. அதை தங்களுக்கும் பகிர்கிறேன்.இன்றும் அவர் பலரின் நினைவுகளில் வாழ்கிறார் என்பதை எண்ணி நெகிழ்கிறேன்.

24-08-2020

-------------------



#உளுந்தூர்பேட்டை_சண்முகம் பி.எச்.டி.,  எம்.லிட்.,

பேராசிரியர், பாடலாசிரியர், எழுத்தாளர்

இன்று பக்திப்பாடல்கள் இயற்றியவரும், திரைப்படங்களில் பாடல்களை எழுதியவரும் பேராசிரியருமான "கலைமாமணி" மறைந்த திரு.#உளுந்தூர்பேட்டை_சண்முகம் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள். (24-08-2003)

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை இவரது பூர்வீகம். பிறந்த வருடம்: 10-04-1933.

1960 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதுகலைப் பட்டம் (எம்.) பெற்றார்.  1971 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நற்றிணை - ஓர் இலக்கித ஆய்வு செய்து அதில் முதுகலைப் பட்டம் (எம்.லிட்) பெற்றார்.  1978 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற ஆய்வில் முனைவர் பட்டம் (பி.எச்.டி) பெற்றார்.


1960 முதல் 1972 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.  1972 முதல் 1974 ஆம் ஆண்டு வரை சென்னை S.I.V.E.T கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

1975 முதல் 1978 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறை உதவி இயக்குனராகப் பொறுப்பு வகித்தார்.   மேலும், தமிழ்நாட்டின் தன்னிகரற்ற கவிஞர், உலகளாவியப் புகழ்பெற்றவர்.  சமுதாயம், சான்றோர் தமிழ்மொழி, நாடு, தமிழ் இலக்கியம் போன்ற பல தலைப்புகளில் தமிழ் கவிதைகள் மற்றும் பக்திப்பாடல்கள் ஏறத்தாழ 4000 பாடல்கள் அவரால் இயற்றப்பட்டு ஒலிப்பேழைகளாகவும் குறுந்தகடுகளாகவும் பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

தேச ஒற்றுமைக்காகப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.  தேசப்பற்று பாடல்களின் தொகுப்பான "செக்கர்வானம்" என்ற புத்தகத்தை இந்திய அரசு நூலாக வெளியிட்டுள்ளது.  புகழ்பெற்ற தமிழ் திரைப்படப் பாடல்கள் மற்றும் நாட்டிய நாடகங்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார்.  பல கவியரங்கங்களிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார்.  வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.  அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

தேவி மஹாத்மியம் - ஓர் நாட்டிய நாடகம், ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் திருமதி. பம்பாய் சகோதரிகளால் பாடப்பட்டு சுமார் 1 லட்சம் ஒலிப்பேழைகளுக்கு மேல் வெளியிடப்பட்டது.  ஸ்ரீசுப்பிரமண்ய புஜங்கம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் - ஸ்ரீஆதிசங்கரர்,  ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், பஜ கோவிந்தம், ஆதித்யஹ்ருதயம், ஸ்ரீலட்சுமி நரசிம்ஹ கராவலம்பம், ஸ்ரீமஹாகணபதி சஹஸ்ரநாமம், ஸ்ரீசாரதா சஹஸ்ரநாமம், ஸ்ரீதுர்கா திரிசதி, ஸ்ரீஸ்துதி, சிவ ஸ்தோத்திரங்கள், ஸ்ரீதுர்கா ஸ்தோத்திரங்கள், ஸ்ரீஸ்கந்தலஹரி, சௌந்தர்யலஹரி, ஸ்ரீஹனுமான் சாலீசா, மஹிசாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், ஸ்ரீமஹாலட்சுமி ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்தோத்திரங்கள், ஸ்ரீதுர்கா சஹஸ்ரநாமம் போன்றவைகளை எல்லோர்க்கும் பயனுள்ள வகையில் மொழிபெயர்த்துள்ளார். 

சென்னை Spiritual Study Circle 1971 ஆம் ஆண்டு இவருக்கு "பக்த சிகாமணி" என்ற விருது வழங்கி கௌரவித்தது.

திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம் 1972 ஆம் ஆண்டு இவருக்கு "இசைக்கவி அரசு" என்ற பட்டத்தைப் பாவலர் மன்றம் வழங்கி சிறப்பித்தது.

1975 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி" விருது வழங்கி கௌரவித்தது.

சென்னை உலக சமுதாய மையம் 1984 ஆம் ஆண்டு இவருக்கு "அருட்செல்வர்" பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

சென்னை ஸ்ரீலட்சுமி நாராயணா குரூப் ஆப் கம்பெனி 1989 ஆம் ஆண்டு இவருக்கு "தெய்வீகக் கவிஞர்" பட்டம் வழங்கி கௌரவித்தது.

கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள் எழுதிய பல பக்திப்பாடல்களை இசைமாமணி திரு.சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், ஐயப்ப பக்தர் திரு.கே.வீரமணி, "பாடும் நிலா" எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளது. 

இவர் எழுதிய பக்திப்பாடல்களில் ஒரு சில:

1. ஆனை முகத்தான் அவன் ஐந்து முகத்தான்

2. வாக்கு தரும் நல்வாழ்வு தரும்

3. ஒரு மணிக்கொரு மணி எதிரெதிர் ஒலித்திட ஓங்காரம் ரீங்காரம் சங்கீதம் இசைத்திட

4. முன்னை முழு முதலே மூத்த கணபதியே

5. ஞால முதல்வனே,

6. வெற்றி முகம் தரும் வேழ முகம் வரும்

7. விநாயகனே வினை தீர்ப்பவனே

8. சுழி போட்டு செயலெதுவும் தொடங்கு

9. நீயல்லால் தெய்வமில்லை

10. சின்னஞ்சிறு பெண் போலே சித்தாடையிடை உடுத்தி

11. கணபதியே வருவாய் அருள்வாய்

12. கண்ணபுரம் செல்வேன் என் கவலையெல்லாம் மறப்பேன் - இசைமாமணி திரு.சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் பாடியவை.

13. நாற்பது நாட்கள், சத்திய ஒளி, சபரிகிரி வாசனே, புலிமேல், முதற் கோட்டை, ஜாதியில்லை, சாமி திந்தக்கத்தோம் ( ஐயப்பன் பாடல்கள் 1 & 2)

14. அன்பே சிவம்

15. கண்ணா கார்மேகவண்ணா

16. நவகோள் நாயகர்

17. ஸ்ரீராம் ஜெயராம்

18. ஸ்ரீசக்கர நாயகி

19. என் தாயே ஈஸ்வரியே

20. மாரி மகமாயி

21. அம்மன் பாமாலைகள்

22. ஷீரடி செல்வம்

23. ஜெய ஜெய சங்கர

24. ஞாலம் போற்றிய ஞானியர்

25. மாசிலா ஏசு

26. மாதாவே மரியே

27. எண்ணிப் பார்க்கிறேன்

28. தமிழ் மொழிபெயர்ப்புகள் (மூன்று பாகங்கள்)

29. நவராத்திரி நாயகியர்

கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஒருசில:

1. "அகத்தியர்" திரைப்படத்தில்:

 வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன், உலகம் சமநிலை பெற வேண்டும்

2. "திருமலை தென்குமரி" திரைப்படத்தில்:

திருப்பதிமலை வாழும் வெங்கடேசா, மதுரை அரசாளும் மீனாட்சி

3. "திருமலை தெய்வம்" திரைப்படத்தில்:

எழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

4. "கண்காட்சி" திரைப்படத்தில்:

குருவார் குலம் காக்கும்

5. "மேல்நாட்டு மருமகள்" திரைப்படத்தில்:

How Wonderful.... How Beautiful...

6. "குமாஸ்தாவின் மகள்" திரைப்படத்தில்:

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா

இவைகள் தவிர "வா ராஜா வா" திரைப்படத்திலும் மற்றும்  இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தில்:

பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தீதே என்ற பாடலையும் எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர்கள் டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், டி.பி.ராமச்சந்திரன், இளையராஜா ஆகியோர் மெட்டுகளுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நாளில் தமிழ்த்தொண்டு ஆற்றிய தமிழை எளிய முறையில் மக்களைச் சென்றடையச் செய்த முனைவர், கலைமாமணி உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களைப் போற்றுவோம்.

தமிழ் உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். 🙏 🙏



 Elango Shanmugam


No comments: