Friday, October 14, 2022

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

 


Fakhrudeen Ibnu Hamdun


  ·


ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும்

உலகளாவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

 *இதனால் சகலமானவர்களுக்கும்...*

உலகெலாம் வாழும் அன்புத் தமிழ் இதயங்களே

வணக்கம்.

எழுதுகிறேன் ஒரு கடிதம்போட்டி அறிவித்தபோது, சிறுகதைக்கும் ஒரு போட்டி வையுங்கள் என்று பலர் உரிமையுடன் உள்பெட்டியை உலுக்கிவிட்டார்கள். எங்களுக்கும் சிறுகதைப் போட்டி நடத்த ஆசைதான். காரணம், இன்றைய காலத்தில் கடிதங்களைப் போலவே சிறுகதையும் அருகிப்போய்க் கொண்டிருக்கும் ஒரு வடிவமாக மாறிக் கொண்டிருப்பதுதான்.

கதைகளால் உருவானவை நம் சமுதாய நியாயங்கள். நம்மை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும் கதைகளை ஓர் உபாயமாய்ப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். பஞ்ச தந்திரக்கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால், முல்லாக்கதைகள் என்று எவ்வளவோ கதைகள் நமது வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் பாய்ச்சின. அதன் பிறகு, பத்திரிகை யுகத்தில் புத்தகங்களில்  கதைகளைப் படித்துப் படித்து வளர்ந்தோம். பலர் நூலகமே கதியாய்க் கிடந்தோம்.

இன்றோ பத்திரிகைகளில் கட்டுரைகளே அதிகம் இடம் பிடிக்கின்றன. அத்திப்பூத்தாற்போல் ஒரே ஒரு கதை மட்டுமே இதழ்களில் இடம்பிடிக்கின்றது. அவற்றிலும் மசாலா வாடைதான் தூக்கலாய் உள்ளது. அதைத்தாண்டி சமூகத்துக்கான செய்திகள் ஏதும் அந்தக் கதைகளில் பார்ப்பது அரிதாகவே உள்ளது.

போதும் போதாததற்கு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒருவரி, இருவரிக்கதைகள் வேறு வந்துவிட்டன. மேலும் கடந்த தலைமுறையினருக்கு வகுப்பறைகளில் நீதிபோதனை என்றே வகுப்புகளுண்டு. அவற்றில் நல்ல நல்ல நீதி போதிக்கும் கதைகள் சொல்லப்படும். வகுப்பில் நான் டீட்டெய்ல் என்றே தனிப்புத்தகம் உண்டு. அவை அனைத்தும் அற்புதமான கதைப்புத்தகங்கள். பாடப்புத்தகத்தை வெறுக்கும்  மாணவன் கூட  நான் டீட்டெய்ல் புத்தகத்தை நேசிப்பவனாகவே இருப்பான். ஆனால், இன்று நிலை அப்படியல்ல. மதிப்பெண் எடுக்க மட்டுமே மாணவன் பிறந்திருப்பதான ஒரு மாயையை அவன் மனதில் உருவாக்கிவிட்டோம்.

தவிர, கடந்த தலைமுறையில் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தார்கள்.  இன்றோ கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் அருகில் இல்லை. அவர்கள் கிராமத்தில் தனித்திருக்க பஞ்சம் பிழைக்க பொருள்வயிற்பிரிந்த தந்தையுடன் குழந்தைகள் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் தனிமையில் உழன்று கணினி, மொபைல் போன்ற இயந்திரங்களுடன் நட்பாகி, கம்ப்யூட்டர் கேம்களில் துப்பாக்கியைப் பயன்படுத்தி மனத்தளவில் வன்முறையாளர்களாகவே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இன்று வன்முறைகள் அதிகரிக்க இத்தகைய மாற்றங்களும் ஒரு காரணம் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.  கதைகளைப் பரவலாக்கினால் எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கவில்லை.  அதேநேரம் நல்ல கருத்துகளைப் போதிக்கும் கதைகள் இளைய தலைமுறையின் இத்தகைய மனப்போக்கில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே நம்புகிறோம். இத்தகைய எண்ணங்கள் சிறுகதைப் போட்டி வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தீ மூட்டவே செய்தன.

ஒரேமாதிரியான எண்ணங்கள் ஒன்றுசேரும் என்பதற்கேற்ப,

எங்கள் எண்ணத்தை அறிந்தாற்போல்,

ரியாத் தமிழ்ச்சங்க உயர்நிலைக்குழு இந்தப் போட்டியை நடத்துவதற்கு எங்களைக் கேட்டுக்கொண்டது. மேலும் கடிதப் போட்டியை நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவே இந்தப் போட்டியையும் நடத்தித்தரவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தது. மகிழ்வுடன் சம்மதித்தோம்.

சிறுகதைப் போட்டி நடத்த ஒப்புதல் அளித்த ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி போட்டி பற்றிய அறிவிப்பு...

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு எந்தவொரு நிபந்தனையும் இல்லை. *தமிழில் கதை எழுதத் தெரிந்த யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம்* படைப்பாளர்கள் தங்கள் சிறுகதையை மின்னஞ்சல் மூலம் சேர்ப்பித்தால் போதும். 

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு - ₹ 10,000

இரண்டாம் பரிசு -  ₹ 5000

மூன்றாம் பரிசு - ₹ 3,000

ஆறுதல் பரிசுகள் -  ₹ 5000 ( ₹ 1000 வீதம் ஐவருக்கு)

சிறப்புப் பரிசுகள் - ₹ 5000 (₹ 500 வீதம் பத்துப் பேருக்கு)

மொத்தப் பரிசுத்தொகை ரூ.40,000 (சான்றிதழ் + பரிசுக்கேடயங்கள் உட்பட)

#போட்டியின்_விதிமுறைகள் :  

1.சிறுகதை இந்தப் போட்டிக்காகப் புதிதாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். இணையத்திலோ அல்லது வேறு அச்சு வடிவத்திலோ இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது.  ஒருங்குறி எழுத்துருவில் மட்டுமே கதைகள் அனுப்பப்பட வேண்டும். எழுதி ஸ்கேன் செய்து அனுப்பப்படும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது.

2.சிறுகதைகள்  1200 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். கதையின் கரு எது பற்றியதாகவும் இருக்கலாம். நவரசங்களில் எந்த ரசத்தை வேண்டுமானாலும்  எடுத்துக்கொண்டு கதை எழுதலாம். அவை நேர்ச் சிந்தனையுடன் அமைந்தால், இந்தச் சிறுகதைப் போட்டி வைக்கப்படுவதற்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாய் அமையும்.

3.ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம். இரண்டாவது சிறுகதை அனுப்பினால் முதல் சிறுகதை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும். நீங்கள் எழுதிய சிறுகதைகளில் எது சிறந்தது என்று நீங்களே நடுவராய் இருந்து அதைத் தேர்வு செய்து அனுப்புங்கள். 

4.ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவினர் அவர்தம் குடும்பத்தினர்  போட்டியில் கலந்துகொள்ள அனுமதியில்லை

5.போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை சிறுகதையை முகநூல் உள்ளிட்ட வேறு ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது. பரிசு பெறும் சிறுகதைகளை தனிப்புத்தகமாக வெளியிடும் உரிமை ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு உண்டு.

6. இப்போட்டி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கவும், போட்டி விதிமுறைகளை சூழலுக்கேற்ப மாற்றவும் ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கு உரிமை உண்டு.

7.போட்டிக்கான சிறுகதைகளை rtsstorycontest2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறுகதை, போட்டியில் ஏற்கப்பட்டதற்கான ஒப்புதல் மின்னஞ்சல் வழியே அனுப்பி வைக்கப்படும். 

மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல்: rtsstorycontest2022@gmail.com

8.சிறுகதைப் போட்டி அக்டோபர்15 அன்று இரவு இந்திய நேரம் 21 : 00 மணிக்கு ஆரம்பித்து, நவம்பர் 15 நள்ளிரவு  00 : 00 மணியுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் அனுப்பும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது.

இனிய நண்பர்களுக்கு, இந்தப் போட்டி பற்றிய விவரங்களை  உலகெங்கும் வாழும் தமிழ்கூறும் நல்லுலக மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பை உங்கள் வாட்ஸ் ஆப் நண்பர்களுக்கு அனுப்புங்கள். குழுக்களில் பகிருங்கள். மின்னஞ்சலில் நண்பர்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.

 பகிருங்கள். பரப்புங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது தொடர்பான ஐயங்களையும் இப்பதிவின் பின்னூட்டத்திலேயே கேட்கலாம்.  உள்பெட்டியைத் தவிர்க்க வேண்டும்

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

வழிகாட்டுநர்: பெ. கருணாகரன்

நெறியாள்கை: ஷேக் முஹமது

                             Fakhrudeen Ibnu Hamdun

ஆகியோருடன்

     Jiyavudeen Mohamed  - செயலாளர், ரியாத் தமிழ்ச் சங்கம்

உயர்நிலைக் குழுவினர்.

Sheik Dawood Syed Mohammed

Aravind Sankaranarayanan

Ahamed Kabeer V P

& Nazeer Ahmed

No comments: