Thursday, October 20, 2022

மயிலாடுதுறைக்கு பயணம் பயணங்கள் முடிவதில்லை!

 சிவா வாசிங்டன் (Sivaa Washington)

மயிலாடுதுறைக்கு பயணம்



6 மாதங்கள் 6 நாடுகள்

கடந்த 6 மாதங்களில் 6 நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிட்டியது. [துபாய், அமெரிக்கா, காஸ்டாரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ்(பாரீஸ்)] -

புதிய நிலப்பரப்பு, புதிய கடற்கரைகள், புதிய மலைகள், புதிய மக்கள், ஆங்கிலம் பேசாத நாடுகள் என பயணப் பட்டேன். என் வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

புத்தகத்தில் படிப்பதற்கும், நேரில் சென்று அந்த அந்நாட்டு மக்களை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாக லண்டன், பாரீஸ், காஸ்டாரிக்கா போன்ற நாடுகள் பெரும் அனுபவத்தை கொடுத்தது. இந்த நாடுகளின் அனுபவத்தை பற்றி தனி தனி பதிவாக இடவேண்டும்.

என்னதான் சில நாடுகள் சென்றாலும், நம்ம சொந்த ஊருக்கு செல்வது போல் ஆகுமா? அதுவும் தீபாவளிக்கு சொந்த ஊரில் இருப்பது என்பது ஒரு தனி சுகம். மணிக்கூண்டை சுற்றி இருக்கும் கடைத் தெருக்கள், கடைகள், நண்பர்கள், நம்ம ஊர் மக்கள், நம்ம ஊர் அன்னை மெஸ் சாப்பாடு என்று எதையும் விட மனமில்லை.

வாழ்க்கை இணையருக்கு என் மேல் கோபம் - அமெரிக்காவில் இருந்து சில நாடுகள் சென்ற பொழுதும் எதையும் கண்டுகொள்ளவில்லை! ஆனால் மயிலாடுதுறை செல்லுகிறேன் அதுவும் கடைத் தெருவில் மூன்று நாட்கள் குடி இருக்க போகிறேன் என்றதும், என் மீது கோபம் 😉ஊர் பாசத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள் 😉

மயிலாடுதுறை செல்வதற்கு ரயிலில், பேருந்தில் செல்ல முன்பதிவு செய்ய மறந்துவிட்டேன். கடுமையான கூட்டம், நல்ல மழை வேறு - எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். எது எப்படியோ இன்று இரவு மயிலாடுதுறை நண்பர்களோடு அன்னை மெஸ்ஸில் சாப்பிட்டு ஆக வேண்டும்.

நாளை காலை ராஜன் தோட்டத்தில் உள்ள மைதானத்தில் நடைப் பயிற்சி சென்றாக வேண்டும். அங்கு பலரும் அப்பாவின் நண்பர்கள் - அப்பா இல்லாமல் முதன் முறையாக மயிலாடுதுறை செல்கிறேன். எல்லாம் புது அனுபவமாகவே இருக்கிறது!

பயணங்கள் முடிவதில்லை!



சிவா வாசிங்டன் (Sivaa Washington)

No comments: