Friday, May 8, 2020

நோன்புக் கஞ்சி / நிஷா மன்சூர்

நோன்புக் கஞ்சி தொடர்பாக அண்ணன் கோம்பை அன்வர் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் உரையாடியிருந்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமான வழமைகள்,உணவு வகைகள் இருக்கின்றன. எங்கள் கொங்கு பகுதிகளில் ஊறவைக்கப்பட்ட சப்ஜா விதை வித் நன்னாரி சர்பத்,ரூஹப்ஜா சர்பத் இல்லாத கஞ்சி வடை காம்போவை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.

2004 வாக்கில் ஒருமுறை உடன்குடியில் நோன்பு திறக்க நேர்ந்தது. ஊருக்குள் ஒரு பள்ளி இருப்பதாக வழி சொல்லியிருந்தார் அங்கிருந்த வணிக நண்பர். ஒருபக்கமும் திண்ணைகள் கொண்ட பெரிய தெருவின் இடதுபுற இறுதியில் பள்ளி இருந்தது. நான் அருகில் செல்லச்செல்ல தொழுகைக்கான பாங்கு அழைப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. நோன்பு திறக்கும் நேரம் கடந்துவிட்டது என்பதால் காரிலேயே தண்ணீர் குடித்து நோன்பைத் துறந்துவிட்டு பள்ளிக்குள் நுழைந்தால் ஒருத்தரையும் காணோம்.


உள்ளெ ஒரு சிறு அறையில் பள்ளியின் இமாம் அமர்ந்து கொண்டிருந்தார்.அங்கே சென்று முகமன் கூறிப் பின்னர் கேட்டேன்,"இங்கே நோன்பு துறக்க ஏற்பாடு இல்லையா மெளலானா" என்று.
அதற்கு அவர், "இருக்கே,நீங்க இன்னும் நோன்பு துறக்கலையா" என்றார். நான் தண்ணீர் மட்டும் அருந்தி நோன்பு துறந்து விட்டேன்.ஆனால் கஞ்சி இல்லாமல் அது பூர்த்தியுறாது அல்லவா."இல்லையே " என்றேன்.

உடனே ஒரு பேரிச்சம் பழத்தையும் ஒரு டம்ளர் தண்ணீரையும் கொடுத்து "நோன்பு துறங்க முதல்ல" என்றார். தமிழ்நாட்டுல கஞ்சிகூட இல்லாமல் நோன்பு திறப்பா என்று அதிர்ச்சியுடன் அவற்றை வாங்கி இன்னொரு முறை நோன்பு துறந்தேன். முடிந்ததும் "தொழுதுடுவோம்" என்று கிளம்பினார். கஞ்சி இல்லாத வறட்சியான நோன்பு என்கிற ஏக்கத்துடன் தொழச் சென்றால் அங்கே பள்ளியில் ஒரே ஒரு முதியவர் மட்டும் அமர்ந்திருந்தார். தொழுகை ஆரம்பித்ததும் இன்னும் இருவர் வந்து இணைந்து கொண்டனர்.

தொழுகை முடிந்து பார்த்தால் மொத்தமாக பள்ளியில் இருந்தது இமாம் உட்பட ஐந்தே ஐந்து நபர்கள். சரியென்று இமாமிடம் விடைபெற்றுக் கிளம்பப்போனால் "இருங்க,கஞ்சி குடிச்சுட்டு போலாம்" என்றார். அப்படியே காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. முன் வளாகத்தில் அமர வைக்கப்பட்டு ஐவருக்கும் கஞ்சியுடன் வடையும் புதினா சட்னியும் வழங்கப்பட்டது. வயிறாரக் குடித்துவிட்டு விடைபெறும்போது இமாமிடம் கேட்டேன்," அஞ்சு பேர்தாம் நோன்பு துறக்க இருக்கோம். தராவிஹ் இரவுத் தொழுகைக்கு எத்தனை பேர் வருவாங்க" என்று.
"பத்துப் பதினைந்து பேர் வருவாங்க.எங்க ஊர் ஆட்கள் எல்லாம் பெரும்பாலும் வெளியூர்,வெளிநாட்டுலதான் இருக்காங்க. படிக்கற பிள்ளைகளும் வயசாளிகளும்தான் ஊர்ல இருப்பாங்க.அதான் கூட்டம் குறைவு " என்று பதிலளித்தார்.

"சரி சரி நல்லது" என்று கிளம்பினேன்.
தமிழ்நாடு முழுவதும் நோன்பு துறப்பதும் கஞ்சி வழங்குவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கோவை மாவட்டத்தில் ஒரு வழமை என்றால் திருநெல்வேலியில் ஒரு வழமை என்று மண்ணுக்கேற்ற தனித்துவத்துடன் அமைந்துள்ளன. அதன்பின்னர் வள்ளியூர் நாகர்கோவில் பகுதிகளிலும் பேரித்தம் பழம்,தண்ணீருடன் நோன்பு துறந்துவிட்டு தொழுகையை பூர்த்தியாக்கிய பின்னர் கஞ்சி அருந்துவது வழக்கமாக இருப்பதையும் கண்டேன். அதேபோல கஞ்சியுடன் தொட்டுக்கொள்ள வழங்கப்படும் "தொட்டுக்க" வும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கன்னியாகுமரி பகுதிகளில் நோன்புக் கஞ்சியுடன் தொட்டுக்க கொடுக்கப்படும் கிழங்கு அபாரமான சுவை கொண்டது. சில இடங்களில் கத்தரிக்காய் கூட்டும் தக்காளி சட்னியும் உண்டு. கோவை அத்தர் ஜமாத் பள்ளியில் கஞ்சியுடன் பரோட்டா குருமா சப்பாத்தி குருமா என்று இரவு உணவையே தடபுடலாக அளித்து விடுவார்கள்.

இன்னும் மதுரை,மணப்பாறை,திருச்சி,வட ஆற்காடு மாவட்டங்கள் என்று எல்லா ஊர்களுக்கும் தனித்துவமான நோன்பு துறப்பு ஏற்பாடுகளும் உணவு வகைகளும் உள்ளன. அதிலும் அந்த காயல்பட்டிணம் கஞ்சி தனிச்சுவை.ஒவ்வொரு ஊர்க் கஞ்சிக்கும் தனி செய்முறை,பிரத்யேகமான ருசி.அவ்வப்போது எழுதுவேன்.

நிஷா மன்சூர் 

No comments: