Saturday, May 30, 2020

என் வாழ்வின் மிகு மோசமான காலக் கட்டம்.

Hilal Musthafa
( 1992--ஆம் ஆண்டு பிற்பகுதியாக இருக்கலாம்.
என் வாழ்வின் மிகு மோசமான காலக் கட்டம்.

தினம் தினம் மூன்று வேளை உணவைத் தொடர்ந்து நான் உண்ணாத வறிய காலம்.

அந்த நேரம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி யிடமிருந்து என் நண்பர் நாகப்பட்டினம் மறைந்த சலாஹுத்தீன் வழி அழைப்பு வந்தது.

நானும் சலாஹுதீனும் பட்டினப் பக்கம்
எம்.எஸ்.வி.,இல்லம் சென்றோம்.

"ஏம்பா கவிஞனே!
தம்பி எஸ்.பி.பி. முதல் தடவையாக இஸ்லாமியக் கேசட் பாடப் போகிறார்.
நான்தான் இசையமைக்கிறேன்.
நீதான் பாடல்.

நீ எழுதத்தான் வேண்டும். உன் நிலைக்காக இதைத்தான் இப்போது நான் செய்ய முடியும்.


பாடல் மு. மேத்தாவிடம் கேட்கச் சொன்னார்கள்.
நான் தடுத்து, உனக்கு இந்த வாய்ப்பை வாங்கி வந்தேன்.

மேத்தாவிடம் இதைச்சொல்ல அவரை அழைத்தேன்.

சொன்னேன். உன் பெயரையும் சொன்னேன்."

அடுத்த வினாடி.
மேத்தா சொன்னது எனக்கு ஆனந்தமாக இருந்தது.

"ஹிலாலா?
அய்யா என்னை விட அற்புதமாக இந்தப் பணியை அவர் செய்வார் .மிகுந்த ஆனந்தமடைகிறேன் .
எனக்கும் நெருங்கிய நண்பர்தான்.
கொஞ்சம் ஏடாகூடமானப் பாசக்கார நண்பர்"

என்றாரப்பா என எம்.எஸ்.வி.என்னிடம் சொன்னார்.

ஒரு பாடலுக்கு ரூபாய் 500 தந்தார்.

பாடல்கள் எழுதினேன். இரண்டு மாதங்கள் என் குடும்பப்பசிக் கொஞ்சம் தீர்ந்தது.

பாடல்கள் பதிகிறேன் .
பின்னர் சுவைச் செய்திகள் இறுதியில் பதிகிறேன்.

கலிமா கேசட்.

இரு பாடல்கள் தயாரிப்பாளர் உறவினர் எழுதினார். மீதி நான் எழுதினேன்.)

கேசட் பாடல் 1

அழகுத் திருமுகம் ஆயிரம் நிலவு
அங்கம் முழுவதும் கஸ்தூரிக் கனவு
அமுத மொழிகளோ திருமறை உறவு
அண்ணல் நபியே ஆனந்த நினைவு!

மதினத்து நகரில் மன்னவர் தர்பார்
மாமறைப் போரொளி அன்னவர் க்ரீடம்
பதிபல கடந்து வருபவர் கூட்டம்
பார்த்திட ஏங்கி வாசலைப் பார்க்கும்!

பூக்களைத் திரட்டித் தூவிய சிரிப்புப்
புரிவதைக் காண எத்தனைத் தவிப்பு
பார்க்கிற இடமெலாம் இறையருள்
இருக்கும்
படைத்தவன் நபியை விழிதொடத்
துடிக்கும்!

அமுதினைக் குழைத்துத் தேனினைத்
தடவிச்
சமுத்திர ஒலியை நயம்படத் தழுவி

( பாங்கின் இருவரிகளை இசைப்பார்)

எழுகிற பாங்கொலி பிலால்இதழ்
வடிக்கும்
தொழுகிற மனதில் நிறைவினைக்
கொடுக்கும்!

Hilal Musthafa

No comments: