Saturday, May 16, 2020

உப்புமா

அப்துல்கையூம்

உலகத்திலேயே உப்புமாவுக்குத்தான் சத்ருகள் அதிகம். பவர் ஸ்டாருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதைப்போல உப்புமாவுக்கும் என் நண்பர் Ravichandran P Selvam போன்று ஒரு சில சில மித்ருகள் - அதாவது அதிதீவிர ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தன் நண்பர் Ruthra Moorthy போன்ற உப்புமா ஆர்வலர்களுடன் இணைந்து “உப்புமா ரசிகர் மன்றம்” என அவர் தனியாக தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது.

உப்பு + மாவு – இதன் கலவையே உப்புமா ஆகும். கன்னடத்தில் `உப்பிட்டு’, எனவும், தெலுங்கில் `உப்பிண்டி’எனவும், மலையாளத்தில் `உப்புமாவு’எனவும், மராத்தியில் `உப்பீட்’ எனவும் பாவப்பட்ட பயனாளிகளை படுபயங்கரமாக பயமுறுத்தும் பண்டம்தான் இந்த உப்புமா.


உப்புமா பதிவர், உப்புமா பேச்சாளர், உப்புமா கம்பேனி என்றெல்லாம் அடைமொழி வழங்கி உப்புமாவுக்கு மரணபங்கம் ஏற்படுத்துவதற்காகவே ஆறுமுகம் வெங்கடேஷ் போன்ற சிலர் இரவும் பகலுமாக சதித்திட்டம் தீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகத்திலேயே எந்த பண்டத்திற்கு அதிகமான ஜோக் எழுதப்பட்டிருக்கிறது என்று கேட்டால் அது உப்புமாவாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. “உப்புமா மீது இப்படியொரு கொலைவெறி மிகவும் தப்புமா” என்று அறிவுரை வழங்க சுதர்சனம் போன்றவர்கள் தயாராகவே இல்லை என்பதுதான் நிதர்சனம். (யாரந்த சுதர்சனம்? என்று கேட்காதீர்கள். ஒரு ரைமிங் வேண்டாமா அதற்குத்தான்)

ஆங்கிலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஃபோபியாக்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் உப்புமா ஃபோபியா என்று இதுவரை பட்டியலில் ஏறவில்லை. இவ்விஷயத்தில் விக்கிப்பீடியாகாரன் விடாப்பிடியாக இருக்கிறான் போலும்.

என் பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் எங்களிடம் கடிவினா கேட்பார். “உப்புமாவு ஊசிப் போச்சு – இதை ஆங்கிலத்தில் சொல்லு” என்பார். நாங்கள் பேந்த பேந்த முழிப்போம். பிறகு அவரே “SALT FLOUR NEEDLE GONE” என்று புதிரையும் அவிழ்த்துவிட்டு ஹா..ஹா.. ஹா என சிரிப்பார். அந்தக்காலத்தில் இந்த படுமொக்கை ஜோக்கை கேட்டுவிட்டு நாங்களும் பரிதாபமாய் விழுந்து விழுந்து சிரிப்போம்.

இப்போதெல்லாம் இணையத்தை மேய்ந்தாலே ஒரே உப்புமா கடிஜோக்ஸ்தான். ரூம் போட்டு அல்ல பங்களா போட்டு யோசித்து எழுதுகிறார்கள்.

மனைவி: ஏங்க இன்னிக்கு டிபன் மேகி பண்ணட்டுமா?
கணவன்: ஐய்யய்யோ வேணாம்மா... மேகி ரொம்ப டேஞ்சர்னு சொல்றாங்க... நீ பேப்பர் படிக்கிறதே இல்லையா ?
மனைவி: அப்ப உப்புமா பண்ணட்டுமாங்க ?
கணவர்: பரவாயில்லை டார்லிங். மேகியே பண்ணிடு.போற உசிரு எதுல போனா என்ன.?

இப்படியெல்லாம் உப்புமாவை கலாய்ச்சு எடுக்கிறார்கள். R.I.P.

"ஒன்பதுலயும் சனி உச்சம் பெற்ற ஒருவருக்குத்தான் கோயிலுக்குப் போனாலும் பிரசாதமாக உப்புமாவை கடவுள் தருவார்" என்றெல்லாம் வேறு QUOTE OF THE DAY எனக்கு அனுப்புகிறார்கள்.

பிச்சைக்கரன்: சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு தாயி...
பெண்மணி; இருப்பா உப்புமா எடுத்துட்டு வரேன்..
பிச்சைக்காரன் : உங்களுக்கு சிரமம் வேணா தாயி.. மூணாவது நாளா நான் பட்டினி கிடந்துட்டுப்போறேன்...

உப்புமாவுக்கு மட்டும் வாயிருந்தால் “வேணாம்… நான் அழுதுடுவேன்” என்ற வடிவேலுவின் பன்ச் டயலாக்கை திருவாய் மலர்ந்தருளும்.

எனக்குப் புரியாத புதிர் இது. எப்படி உப்புமாவுக்கு மாத்திரம் இத்தனை HATE MONGERS இந்த பூமிப்பந்திலிருந்து புறப்பட்டார்கள் என்று. அப்படியென்றால் எந்த அளவுக்கு அவர்களை இந்த உப்புமா சத்தியசோதனை செய்திருக்கிறது என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.

ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் திடீர் விருந்தாளிகள் படையெடுத்து வரும்போது கைகொடுத்து காப்பாற்றுவது இந்த FAST FOOD தான். Instant உணவாக மேகியை கண்டுபிடிப்பதற்கு முன்னரே உப்புமாவைக் கண்டுபிடித்தவன் தமிழன், (அதுக்காக நீ உண்மையான தமிழனாக இருந்தால் உடனே இதனை ஷேர் பண்ணு என்றெல்லாம் கூறி உங்களை படுத்த மாட்டேன்)

சிலசமயம் என் வீட்டில் காலைச் சிற்றுண்டியின்போது குசினியிலிருந்து கடுகு தாளிக்கும் சத்தம் வந்தாலே எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் “செத்தாண்டா சேகர்” என்று. அந்த சேகர் எஸ்.வி.சேகர் அல்ல. சாட்சாத் நானேதான்

என் டெலிபதி உணர்த்தியது போலவே என் மனைவி உப்புமாவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு “ஜீனி போடாதீங்க. உங்களுக்கு சுகர் இருக்கு . அப்படியே சாப்பிடுங்க’ என்று எச்சரிக்கை வேறு கொடுப்பார்.. இதைக் கேட்டுவிட்டு நான் புன்னகைப்பேன். வேறு வழி? வள்ளுவர் பெருமான் சொல்லியிருக்காரே “துன்பம் வரும் வேளையிலே சிரிங்க” என்று.

உப்புமா என்றாலே பெரும்பான்மை மக்களுக்கு பேதி, பீதி எல்லாமே வந்துவிடும். என் நண்பர் ரவிச்சந்திரன் போன்ற உப்புமா பிரியர்களுக்கு அன்றலர்ந்த தாமரைபோல் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசிக்கும்.

என்னைபோன்ற ஹாஸ்டலில் படித்தவர்களுக்குத்தான் அந்தக் கொடுமையின் வலி புரியும்.

#அப்துல்கையூம்

No comments: