Saturday, May 16, 2020

இறைசிந்தனை


பாப் எனும் வாசலிலே!
பக்தி பரவச நிலையிலே!
பார்ப்பேனே ரப்பே!
புனித நாளோ சென்று
கொண்டிருக்க!
புண்ணியம் தேடி
கதறுகிறேனே!
புன்னகைக்கும் பூமானே!
புவியாலும் கோமானே!

லைலதுல் கத்ரினை எம்முள்ளே!
லாவகமாய் அடைந்திட
இரவு,பகல் நினைவலையில்
நீந்துகிறேனே!
இருள் சூழ்ந்த கல்பு
ஒளி கொடுப்பாயென்றே!


நித்திரை கொள்ளா
கண்ணும்,கல்புமே!
நீதி கேட்டு தவித்தே
நிமலோனே உன்னிலே!
இஸ்திஃபாரினையே
இஷ்கோடு கண்ணீர் மல்க!
இஃதிகாஃப் நிலையில்
இருகரமேந்துகிறேனே!

எனை ஆதரிக்கவிலையெனில்,
எங்கே செல்வேன் ரஹீமே!
எனக்கென யாருண்டு
என்னை ஏற்றிடு ரஹ்மானே!
ஏற்கவில்லை என்றால்
நஷ்டவாளியாகிடுவேனே!
என் பாவம் மன்னித்திடு!
என் பிழைகள் பொறுத்திடு!

குறை யாவும் மறைத்திடு!
குற்றங்களை அழித்திடு!
கொடுத்த நாள் இதுவரை
கோமானே செய்த அமல்கள்!
கிருபை பார்வையில்
நனைந்ததாக்கிடு,ரஹீமே!
கருணை உள்ளமான என்
கோமானே,என் சீமானே!
கரத்தை நிரப்பியே,கரையை அகற்றிடு, அல்லாஹ்வே!

ரஹ்மத்தான நாளாய்!
ராஹத்தாக்கி தந்தாய்!
ராஹதுல் ஆஷிகினிலே
ரஹ்மத்தாக்கினாய்!
ரப்புலாலமீனே நிஃமத்தாய்
ரப்போடு ரசிக்க வைத்தாய்!

ருசி,பசி,தாகம்,என உன்னுள்
ரசிக்கும் நாளாக்கினாய்!
ரஜபிலிருந்தே கல்பினை
ரசனையாய் மறையினிலே!
ராஜ்யமாய் திழைக்க வைத்தாயே!

ஷஃபானில் அவ்ராதுகள்
அமைப்பில் அமல்களாக்கினாய்!
சீரிய குர்ஆனோடு எம்மை
சிறப்படைய செய்தாய்!
சிற்றின்பத்தோடு உன்
பேரின்பம் அமைத்தாய்!

ரமழானிலே சூராக்களின்
சூட்சும ஆன்மீக பாணியிலே அமர்களமாக்கியே!
ரப்பே, அகமிய சொல்,
செயல்களோடு தேர்ந்தெடுத்தாய்!
ரஹ்மானின் அருட்கொடையின்
அருகினிலேயே நுகர,
ரசூலின் நுண்ணிய கருத்துகள் தெளிவாக
விளங்க வழிகாட்டினாய்!

எத்தனையோ நிஃமத்தோடு!
எத்தி வைத்தும்,
வைக்கவும்,ஏடுகளாக,
எழுதும் கலமாகியே!
எம்முள் ப்ரவேசித்து
கொண்டே,
எண்ணத்தின் உச்சமாய்
எழுதுகோலாயாக்கினாய்!

சுபுஹானல்லாஹ்!

இனி வரும் நாளினையும்
இன்பமெனும் உன் ரஹ்மத்!
இதயத்தில் இன்னா அன்
ஜல் னா_ சூரா_வின்
இரகசிய தார்ப்பரியத்தின்
இறை கமழம் விரிந்தேகியே!

ஆனந்த களியாட்டமாகியே!
ஆயிரம் தாழ்மலர் எம்முள்!
அழகாய் விரிந்தே
பிரபஞ்சத்தோடு!
அகிலமும் ஏகியே, சுற்றும்
பூமியின் நல்சுவை யாவுமே!
அமுதமான தேனெனும்
அருமை தீன்சுவை
அரும்பியே!
அல்லாஹ்வின் அருள் இறங்கும் ரஹ்மத்தினை, அள்ளி தரும் மலக்குகளின்,
வாச சுவாசத்திலேகியே!

புனித லைலதுல் கத்ர் எனும்
பசுமையை அடைவோமே!
புண்ணிய கதவினை
திறப்போமே!
பிடித்த ரமழானின் பிரதிபலனாக
ப்ரியமாய் பேரின்ப ரைய்யான் வாசல்
திறப்போமே!
படைப்பின் அர்த்தம் நாம்
படைத்தவனிடம்
சொல்வோமே!

கிடைத்த நாளினை ஒரு
நிமிடமும் விடாது!
கிடைத்த வாய்ப்பாய் விடாது
துதிப்போமே!
கிட்டேயே இருக்கும் ரப்பை
கிரங்க வைக்குமளவுக்கே!
கல்புருகி தவ்பாவிலேயே
கருணை
பார்வையாக்குவோமே!
கிருபையாளனோ நம்மீது
இரக்கமுள்ளவனே!

தவ்பாவின் வாசலையும்
திறந்து ரட்சித்தருள்வாயே!
தார்ப்பரியம் என்னவோ
தரஜா நிலை இம்மை
மறுமையில் உயர்த்திடவே!
தந்து அமல்கள் செவ்வனே
செய்ய நிம்மதி அளிக்கவே!

மஹ்ஷரின் நிலையிலே
மஹ்மூதரின் கரம்பிடித்து!
மன்னானில் ஐயமிலா
மகிழ்ச்சியில் ஆழ்த்திடவே!
மறைந்த,மறையாத
பாவத்தை
மன்னிக்க
வேண்டுகிறேனே!

மன்னித்தால் அனைத்துமே
முன்னோனருளாலேயே!
முன்னால் வந்து எம்மிலே
மண்டியிடுமே மாநபியே!
மனதார ஏற்றிடு ரஹ்மானே!

சகலமும் தந்ததற்க்கே
சப்தமிலா திக்ருபோலவே
சன்னதியில் துதிபாடி
சரணாகதி என!
சரண் சரணே சகலமுமே!

அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!

ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!

ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹிவ
வஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா
Noor Saffiya

No comments: