Saturday, May 9, 2020

பத்ர் களம் ஈந்த பாக்கியம்...!

பத்ர் களம் ஈந்த பாக்கியம்...!
Hilal Musthafa

ஆண்டு நினைவில் இல்லை. சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகள் கடந்திருக்கலாம்.

பட்டுக்கோட்டையில் பிரம்மாண்டமான மீலாது பொதுக் கூட்டம். தமிழ்மாநில முஸ்லீம் லீகினுடைய தலைவர் சொல்லேர் உழவர் சிராஜுல் மில்லத் அப்துலஸ் ஸமது சாஹிப் பங்கேற்கிறார்.

அந்த மீலாது பெருவிழாவில் கவிஞர் தா.காசிம், மச்சான் இஜட் . ஜபருல்லாஹ், அ.ஹிலால் முஸ்தபா பங்கேற்கின்றனர்.

சென்னையில் இருந்து ஸமது சாஹிப், ஜபருல்லாஹ், நான் மூவரும் தலைவர் காரில் பயணமாகிப் பட்டுக்கோட்டைக்கு வருகிறோம்.

அந்தக் காலக் கட்டங்களில் இப்படி தலைவரோடு கார்ப் பயணம், மாதத்தில் 15-20 நாட்கள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

கவிஞர்.தா.காசிம் எப்போதுமே தலைவர் காரில் பயணத்திற்குச் சம்மதிக்க மாட்டார். லட்ச ரூபாய் கொடுத்தாலும் மறுத்துவிட்டு ரயிலிலோ பஸ்ஸிலோ பயணமாகி விடுவார்.


நான்கு பேருமே பட்டுக்கோட்டை வந்து சேர்ந்து விட்டோம். மீலாது சிறப்பாக நிறைவேறியது.

அன்றிரவே தலைவருடன் மதுரைக்கு நாங்கள் புறப்பட வேண்டும். வழக்கம் போல் தலைவர் காரில் நாங்கள் ஏறிக்கொண்டோம் .

பழக்கம் போல் கவிஞர் தா.காசிம் பட்டுக்கோட்டையில் தான் தங்கிவிட்டு காலையில் பஸ்ஸில் வருவதாகச் சொல்லி விட்டார்.

இரவு கூட்டம் முடிந்து பட்டுக்கோட்டையில் இருந்து மதுரை ரோட்டில் எங்கள் கார் பயணப்படுகிறது.

ரோட்டில் வாகன ஓட்டத்தையும் காணோம், ஆள் நடமாட்டமும் இல்லை.

நள்ளிரவு. பனி மென்திரையாக எங்களைத் தொடர்ந்து படர்ந்து கொண்டே வருகிறது.

பால் நிலாக் காலம் என இலக்கியம் சொல்லும். ஆனால், அன்று பால் நிலா ஒளிதான் எங்களின் நடைமுறையாகவே இருந்தது.

டிரைவர் அப்பாஸ் பாய் ஆனந்தப் படுகிறார் என்பதற்கு அடையாளம் கார் "நளன் தேராகப்" பாயும்.

நடுநடுவே ஸ்பீட் பிரேக்கர் விரிந்து கிடக்கிறது. அது அறுவடைக்காலம்.

வைக்கோலை அங்கங்கே விரித்துப் போட்டு இருக்கிறார்கள். இந்த ஸ்பீட் பிரேக்கரை அப்பாஸ் பாய் சட்டை பண்ணவில்லை.

ஏதோ ஒரு கிராமம்,
வைக்கோல் கொழுத்து அகலமாக விரிக்கப்பட்டு இருக்கிறது.

அப்பாஸ் பாய் ஜம்பம் அந்த வைக்கோலிடம் பலிக்கவில்லை.

ஐந்தடி தூரம் கார் வைக்கோலில் பாய்ந்தது. அதோடு நின்றுவிட்டது. காருக்குக் கீழே எல்லா பாகங்களிலும் சுற்றி சுருண்டு சூழ்ந்து கொண்டன வைக்கோல்.

என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை.

எங்கள் எவரிடமும் செல்போனும் கிடையாது. அது செல்போன் காலமும் அல்ல.

அப்பாஸ் பாய், நான், ஜபாருல்லாஹ் வைக்கோலில் இறங்கி தெரு ஓரத்திற்கு வந்தோம். தலைவர் காருக்குள்ளேயே இருக்கிறார்.

எங்கள் மூவருக்கும் இப்போது முக்கியத் தேவை அப்பாஸ் பாய்க்குப் பீடி, ஜபாருல்லாஹ்விற்கு வில்ஸ் பில்டர், எனக்குக் கோல்ட் பிளாக் கிங். இவைகள் எங்களிடமே கைவசம் இருக்கின்றன.

காருக்குப் பின்னால் தள்ளி ஒதுங்கி வந்து நாங்கள் எங்கள் சிந்தனை ஆயுதங்களில் தீப்பற்றினோம்.

காருக்குள் கண்ணாடி இந்தத் தீ வெளிச்சத்தைக் காட்சியாக்கி விட்டது.

தலைவர் "தம்பி ஹிலால்", சப்தமாக அழைத்தார். என் சிகரெட்டை ஜபாருல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு நான் ஓடினேன்.

"தம்பி எதுவும் தப்பில்ல, கிராமம் அதிகாலையில் விழித்துக் கொள்ளும். ஆள் நடமாட்டம் வந்துவிடும்.

அவர்கள் உதவி கொண்டு காலையிலேயே மதுரைக்குச் சென்றுவிடலாம்.

ஏனென்றால் காருக்குள்ளே நான், காருக்குள்ளே பெட்ரோல் , தார் ரோட்டில் வைக்கோல், மூவர் கையில் தீப்பந்தம்" என்றார்.

நாங்கள் மூவரும் சற்று தள்ளி புகைத்துவிட்டு சிகரெட்டை அணைத்துவிட்டு வந்துவிட்டோம்.

அப்பாஸ் பாய்க்கு ஒரு யோசனை வந்தது. காருக்குக் கீழ் படுத்து உருண்டு சுற்றி இருக்கும் வைக்கோலை உருவி விடலாமா? என்று யோசனை வந்து விட்டது. அவர் காருக்கடியில் குனிந்துவிட்டார். நுழைந்து விட்டார்.

முடியவே முடியாது. வைக்கோல் பலமாக சுற்றிக் கொண்டது. அரிவாளால்தான் வெட்டி எடுக்க வேண்டும் என்று வெளியே வந்துவிட்டார்.

தெருவில் சற்றுத் தள்ளி பக்கத்தில் சில குடிசைகள் இருந்தன. நாங்கள் மூவரும் ஒரு முடிவோடு குடிசைகள் நோக்கி நடந்தோம்.

அது நள்ளிரவுதான். அங்குள்ள நாய்கள் கோரஸாக குலைக்க ஆரம்பித்து விட்டன. நாங்களும் அய்யா, அய்யா என்று சப்திக்க ஆரம்பித்தோம்.

சில குடிசை கதவுப் படல்கள் திறந்தன. நாலைந்து மனிதர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் எங்கள் நிலைமையைச் சொன்னோம். எங்களோடு கார் பக்கம் வந்தார்கள்.

அந்த நல்ல மனிதர்களில் ஒருவர் காருக்குக் கீழே புகுந்து நிலைமையைப் பார்த்து விடலாம் என்றார்.

அவர் ஆலோசைப் படி அவர்களில் ஒருவர் காருக்குக் கீழே நுழையத் தயாரானார். வந்த தோழர்கள் அனைவர் கையிலும் ஒரு நீளக் கொம்பும் அரிவாளும் இருந்தன.

ஒருவர் தன் கையினுடைய நீண்ட கொம்பை காருக்குக் கீழ் வைக்கோலில் வைத்து அங்கும் இங்கும் அலம்பினார். நான்கு டயர்களிலும் இன்னொரு கொம்பினால் சடார் சடாரென்று வேறொருவர் அடித்தார்.

ஜபாருல்லாஹ் கேட்டே விட்டான். "ஏன் இப்படி செய்கிறீர்கள் அய்யா?" என்று.

ஒருவர் பதில் எங்களின் தண்டுவடத்திலேயே தீ வைத்தது மாதிரி இருந்தது.

"அய்யா, இந்தப் பகுதிகளில் பாம்புகள் அதிகம். இது பனிக் காலம். வைக்கோல் சூட்டிற்கு இங்கே வந்து சுருண்டு படுத்துக் கொள்ளும். அதை ஓட்டத்தான் இப்படி என்றார்".

அப்பாஸ் பாய்க்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அதிர்ந்துவிட்டது.

கடைசியாக அந்தக் கிராம தோழர்களே உள்ளே புகுந்து கத்தியால் பற்றி இருந்த வைக்கோல்களை அறுத்து, அவர்கள் கைவசம் வைத்து இருந்த டார்ச் லைட் உதவியால் இதை நிவேற்றித் தந்தார்கள்.

கார் செல்ல வைக்கோலை விலக்கி பாதையும் தந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி சொன்னோம். சன்மானம் கொடுத்தோம். அத்தோழர்கள் வாங்க மறுத்தே விட்டார்கள். வற்புறுத்தினோம். அதை எங்களுக்கே திரும்பத் தந்துவிட்டார்கள்.

அப்பாஸ் பாய் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார். தடை இல்லாமல் இனி கார் புறப்படும். அதே பால்நிலா, பனி படரல், வெளிச்ச விரிப்பு பயணம் தொடர்கிறது.

இது நடந்தது, 35-40 வருடங்களுக்கு முன்னால்.

தலைவருக்கு இந்தப் பயணம் வேறொரு பயணத்தை அவர் நினைவின்
உள்ளிருந்து கொண்டுவந்து விட்டது.

"தம்பி, பத்தாண்டுகளுக்கு முன், இதே போல் நிலா, பனி, கார் பயணம் எனக்குக் கிடைத்தது. அது ஒரு அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த பயணம். ஆசிர்வதிக்கப்பட்ட இறையருளின் பாக்கியப் பயணம்.

அந்தக் கால கட்டம் நான் மாநிலத்து தலைமைக்கு வரவில்லை. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மட்டும்தான். அப்போது நமது அப்துல் வஹாப் ஜானி பாய் தலைவர். ரிபாயீ அண்ணன் பொதுச்செயலாளர்.

எனக்குத் தொழிலிலும், என் குடும்பங்கள் மத்தியிலும் கடுமையானப் பிரச்சனை நேரம். சிந்தித்தெல்லாம் செயல்பட்டு முடிவெடுக்க முடியாத நெருக்கடிகளின் தருணம்.

இந்த மாதிரி வேளைகளில் நான் போய் சரணடையும் இடம் ஒன்று உண்டு. உங்களுக்கெல்லாம் கூட அது தெரியும்.

மதினா மாநகருக்கு அண்ணலார் ரவுலா ஷரீபில் சென்று சேர்ந்துவிடுவேன்.

அப்படியெல்லாம் போகக்கூடிய பொருளாதாரப் பலம் எனக்குக் கிடையாது. நிய்யத்து வைப்பேன். அதுதான் என் பொருளாதாரப் பலம்.

எப்படியோ அந்தத் தேவைக்குள்ள பொருளாதாரம் என்னிடம் வந்து சேர்ந்துவிடும். அப்படி வளம் வந்து என்னிடம் சேர்ந்துவிட்டது.

உடனே மதின மாநகருக்குப் புறப்பட்டுவிட்டேன். அது ஒரு புதன் கிழமை. அண்ணலார் ரவுலா ஷரீபில் கண் மூடியவாறு கண்களில் நீர்வழிய மனம் உருகி அண்ணலெம்பெருமானார் அவர்களோடு ஆழ்மனதில் கரைந்து கொண்டு இருந்தேன்.

எனக்குள் ஒரு நிறைவு கிடைத்தது. வியாழன் மாலை வரை அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தேன்.

திடீரென்று ரவுலா ஷரீபில் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. நாளை ஜுமுஆ தொழுகையை கஅபத்துல்லாவில் நிறைவேற்றினால் என்ன?, இந்த உணர்வோடு நான் தங்கி இருக்கும் லாட்ஜ்க்கு வந்துவிட்டேன்.

எட்டு மணிக்கு மேல் என் கஅபத்துல்லாவின் தேடல் அதிகரித்துவிட்டது. என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. எப்படியும் என்னை கஅபத்துல்லா தன் எல்லைக்குள் ஈர்த்துக் கொண்டுவிடும் என்ற நம்பிக்கைப் பிறந்தது.

லாட்ஜில் பதிவு செய்யும் கவுண்ட்டருக்குச் சென்றேன். என்னுடைய நிலையைச் சொன்னேன்.

நான் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினன். நான் மக்க மாநகருக்குச் செல்ல வேண்டும்.

இங்கிருந்து யாரவது இப்போது மக்க மாநகருக்குச் செல்வார்களானால், அவர்கள் காரில் எனக்கு இடம் வாங்கித் தாருங்கள் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்றேன்.

என் பக்கத்தில் ஒரு ஆஜானுபாகுவான மனிதர், அந்த லாட்ஜைக் காலி செய்து மக்காவிற்குப் புறப்படத் தயாராக நிற்கிறார்.

என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், என் அருகில் வந்து," நண்பரே! நான் கஅபத்துல்லாஹ்விற்குத்தான் புறப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். என் காரில் நான் மட்டும்தான் போகிறேன். நீங்களும் வரலாம். பஜ்ர் வக்தை நாம் கஅபத்துல்லாவிலேயே இன்ஷா அல்லாஹ் தொழலாம்", என்றார்.

"இந்தியர்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் நீங்கள் மெம்பர் ஆப் த பார்லிமென்ட். இந்திய அரசியல் பேசிக்கொண்டே போகலாம் வாருங்கள்", என்றார்.

அடுத்த கணம் அவரோடு காரில் இருந்தேன். கார் புறப்பட்டது. அவர் ஒரு ஈராக்காரர்.

காரின் வேகம் 150-160 கிலோ மீட்டரில் செல்கிறது.

இதே போல் நிலா வெளிச்சம். இதைவிட சில மடங்கு அதிகமான பனிப்பொழிவு.

நானும் அவரும் இந்திய அரசியல் பேசிக்கொண்டு போகிறோம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பாலை வெளியில் எங்கள் காருக்கு முன்னாலே இரண்டு மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள், அந்த நள்ளிரவில்.

அதிசயம் தாள முடியாமல் அவரிடமே கேட்டேன்.

"இந்த நள்ளிரவில், கொடூரமானப் பனியில் இந்த மனிதர்கள் நடந்து போகிறார்களே", என்றேன்.

அவர் திரும்பிப் பார்த்து, "எங்கே போகிறார்கள்? " எனத் திரும்ப என்னிடம் கேட்டார்.

அவர் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டார்.

"நீங்கள் உள்ளபடியே பார்த்தீர்களா?" என்று பிரமிப்போடு கேட்டார்.

"ஆமாம் சார், நன்றாகப் பார்த்தேன்" என்றேன் நான்.

"நம் கார் 160 கிமீ வேகத்தில் போகிறது. இந்த வேகத்தில் நமக்கு முன்னால் சிலர் நடந்து போக முடியுமா?" என்று கேட்டார்.

எனக்கு அப்போதுதான் பொறி கலங்கியது.

மேலும் கார் நிறுத்தியவுடன் அவர்களைக் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த நண்பர், "நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். நீங்கள் இறைக்கிருபையால் பாக்கியவான்தான். இந்த இடம் எது தெரியுமா? இதன் பக்கத்தில்தான் பத்ர் போர்க்களம்" என்றார்.

"நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த இடத்தில் சிலர் கண்களுக்கு ஷகீதான (உயிர்த்தியாகம்) சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) காட்சி தருகிறார்கள்.

அப்படி அவர்களைக் கண்டவர்கள் வாழ்வின் உன்னத இடத்திற்குச் சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது, நடைமுறையும் இருக்கிறது", என்று அந்த ஈராக்கிய நண்பர் சொன்னார்.

காரைவிட்டு கீழே இறங்கினார். நானும் இறங்கினேன். பனி ஒவ்வொரு மயிர்க்காலையும் துளைத்து வாட்டியது.

இருவரும் மணலில் தயம்மம் செய்தோம். அந்தத் தியாகிகளுக்கு ஸலாம் சொன்னோம்.

இரண்டு ரக்-அத் நபீல் தொழுது காரில் ஏறி பயணம் துவங்கிவிட்டோம்.

"நண்பரே! நீங்கள் இந்திய அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். இன்று கிடைத்த பாக்கியப் பலன் இறைவன் நாடினால் உங்களுக்குத் தலைமைப் பொறுப்பு வந்து சேர்ந்து விடும்" என்றார்.

என் ஆழ் மனம் ஆமீன் சொன்னது.

காலையில் கஅபத்துல்லாஹ்வில் பஜ்ர் தொழுதேன். மதியம் அங்கேயே ஜுமுஆ தொழுதேன்.

பின்னர் சில தினங்களில்சென்னை வந்துவிட்டேன்.

நான்கு மாதத்தில் தமிழ் மாநிலத் தலைவர் தேர்வு நடக்க இருக்கிறது.

அப்போது ரிபாயீ அண்ணனும் எம்.பி., காஜாமொய்தீனும் எம்.பி.,

ரிபாயீ அண்ணன் டில்லியில் என்னைச் சந்தித்தார்கள்,

" சமது பாய்! வருகிற தலைவர் தேர்தலில் நீங்கள்தான் தலைவர் கேண்டிடேட். நான் செயற்குழுவில் உங்கள் பெயரை முன்மொழிகிறேன்.

ஜானி பாயிடமும் இதைச் சென்னை சென்றவுடன் சொல்லி விடுகிறேன்".

நான் ஒரு அதிர்ச்சியுடன் ஆமீன் சொன்னேன்.

ரிபாயீ அண்ணனிடம் நீங்கள்தான் பொதுச் செயலாளர் என்றேன்.

இல்லை,வாவா நகரம் சென்று இரண்டு மூன்று ஆண்டுகள் ஓய்வெடுக்கப் போகிறேன் என ரிபாயீ அண்ணன் சொன்னார்கள்.

சரி, அப்படியானால் காஜாமொய்தீனைப் பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்றேன்.

ரிபாயீ அண்ணன் உறுதியாக மறுத்துவிட்டார்கள்.

என்னுடைய பொதுச்செயலாளர் கேண்டிடேட் அப்துல் லத்தீப்தான் என்றார்கள்.

காஜாமொய்தீன், "சென்னை மாவட்ட தலைவர் தேர்தலிலே என்னிடம் போட்டி இட்டுத் தோற்றுப் போனவர் அப்துல் லத்தீப்.

அவரையா மாநிலப் பொதுச்செயலாளர் ஆக்குகிறீர்கள்",? என ரிபாயீ அண்ணனிடம் கேட்டார்.

"ஆம், அவர்தான்", ரிபாயீ அண்ணன் அழுத்தமாகச் சொன்னார்கள்.

நானும் ரிபாயீ அண்ணனிடம் அழுத்தமாகச் சொன்னேன்," அப்படியானால், நீங்கள்தான் மாநிலப் பொருளாளர்",என்று.

இப்படியே எல்லாம் நடந்து முடிந்தது.

பத்ரின் தியாகத் தோழர்களைத் தரிசித்த விழிகளுக்கு இறைவன் வழங்கிய பாக்கியங்கள் இவை.

Hilal Musthafa

No comments: