Tuesday, July 4, 2017

ரசனையும் ரசிப்பும்...!

ஒரு ஆற்றின் படித்துறை அங்கே ஒரு சிற்பி வருகிறார்! கூடவே ஒரு சலவை தொழிலாளியும் வருகிறார்! வந்த இருவரும் படித்துறையில் உள்ள ஒரு படியை நோக்குகின்றனர்! அது உண்மையில் சொல்லப்போனால் கல் அல்ல! அது ஒரு பெண் உருவ சிற்பம்.
அதன் தலைப்பகுதி சிறு சிதிலம் கண்டதால் அதை அப்புறப்படுத்தி கொண்டு வந்து படித்துறைக்கு கல்லாக்கி விட்டனர்! இப்போது அந்த சலவை தொழிலாளி அந்த சிற்பத்தை பார்த்து.. இந்த கற்சிலையை இங்கு கொண்டு ஏன் போட்டனர்! இது சமதளம் இல்லாது மேடும் பள்ளமும் கொண்டு இருப்பதால் துணி துவைக்க கூட முடியாமல் போய்விட்டதே என்று கூறி மிகவும் வருத்தப்பட்டவராக சொன்னார்.
இதைக்கேட்ட சிற்பி.. என்ன இப்படி கற்சிலை என்று வெறுமனே கூறிவிட்டீர்களே! கொஞ்சம் கூட இதன் அழகின் ரசனையை நீங்கள் உணரவில்லையா...? அந்த ரசனையை உணர்ந்து ரசிக்க உங்களுக்கு மனம் வரவில்லையா...?

இதன் அமைப்பும் இதை செதுக்கிய விதமும் இதன் அழகிய பெண் உருவமும் என்னை எத்தனையோ காலகட்டத்திற்கு அப்பால் பின்னோக்கி இழுத்து செல்கிறது! நிச்சயம் இதை வடித்து செதுக்கியவர் ஒரு சாதாரண சிற்பியாக இருக்க வாய்ப்பில்லை! காரணம் இதில் அவ்வளவு தத்ரூபம் இருக்கிறது என கூற!
அதற்கு அந்த சலவை தொழிலாளி சொன்னார் ஐயா...! நீங்களோ சிற்பி! நானோ ஒரு சலவை தொழிலாளி! ஆதலால் நீங்கள் சிற்பி என்கிற அடிப்படையில் சிந்தித்து அதன் ரசனையை உணர்ந்து ரசிக்கிறீர்கள்! ஆனால் நான்... நான் கொண்ட தொழிலின் அடிப்படையில் மட்டுமே இதை பார்க்கிறேன் வேறெதுவும் என் கண்களுக்கு தெரியவில்லை!

நீங்கள் கலைக்கண் கொண்டு பார்த்ததை நான் தொழில் கண் கொண்டு பார்க்கிறேன்! ஆகவே அதன் அடிப்படை காரணமே நம் இருவரின் ரசனையையும் ரசிப்பையும் வேறுபடுத்தி காட்டுகிறது என்று சொன்னார்.
நியதி:- ஒரு மாதிரி இருப்பவை எல்லோர் கண்களுக்கும் ஒரே மாதிரியாக தெரிவதில்லை!

Samsul Hameed Saleem Mohamed

No comments: