Monday, July 3, 2017

கவியரங்கம் - கனடா 150

கவியரங்கம் - கனடா 150

கிழக்கே சில்லென்று அட்லாண்டிக்
மேற்கே சிலுசிலுப்பாய் பசிபிக்
இருபெருங் கடல்களுக்கு இடையில்
வடதுருவத்தின் மடியில்
அமெரிக்காவின் தலையில்
விண்வெள்ளி மகுடமாய்
ஜொலிஜொலிக்கும் வனப்பே

நுங்கும் நுரையும் பொங்கும்
நூற்றைம்பதே வருட இளமையே



உனக்குள்தான் எத்தனை எத்தனைச்
செழுமை வளமை இனிமை

வரம் தரும் தேவதை வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்கள்
வசந்தங்கள் தாலாட்ட யொவனம் ததும்ப
நனைந்து நனைந்து மிதக்கும் நந்தவனங்கள்

இலங்கைத் தீவையே
ஒரு கைக் குழந்தையாய் அள்ளி
கனடிய ஏரிக்குள் அப்படியே அமர்த்தி
தலையில் எண்ணையும் தேய்த்து
கொஞ்சம் நீச்சலும் அடிக்க வைத்து
குளிப்பாட்டி மகிழலாமோ என்பதுபோன்ற
மாபெரும் நன்னீர் ஏரிகள்

இவையெல்லாம் வெறும் புற அழகுகள்தாம்
கனடாவின் அக அழகோ
அந்த ஆகாயத்தையே
ஆகச் சிறியதாக்கும் பேரழகு

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை
உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே
எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே
மண்ணே புகலிடமே
என்றன் மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே
நன்றி ஊற்றே உயிர்தனிலே

என்று பாடுகிறான்
ஓர் அகதியென்றால்
அது
கனடாவின்
ஆன்ம அழகினாலல்லவா?

தேம்பியழும் விழிகளில்
ஒரு பழைய போர்வையைத்தானே
கேட்டு வருகிறான் ஓர் அகதி
ஆனால் மாளிகையின் மத்தியில்
ஓராயிரம் தங்க நாற்காலிகளையல்லவா
போட்டுத்தருகிறது கனடா

உலகைக் கருணையால் நிறைத்துக்
கம்பீரமாய் இதழ் அவிழ்க்கும்
புன்னகையின் பெயர் தெரியுமா?

உல்லாச நிகழ்ச்சிகளையும்
உலகுக்கே அள்ளித்தரும்
தொண்டு நிகழ்ச்சியாய் மாற்றும்
மகத்துவம் பெற்ற
எங்கள் பேரன்புக் கனடா

*
கனடா ஒரு கிருத்தவ நாடு
கனடா ஒரு முஸ்லிம் நாடு
கனடா ஒரு இந்து நாடு
கனடா ஒரு சீக்கிய நாடு
கனடா ஒரு பௌத்த நாடு
கனடா ஒரு மதமற்றோர் நாடு
கனடா ஒரு சிறுபான்மையினர் நாடு
கனடா ஒரு பெரும்பான்மையினர் நாடு

யார் எங்கே அச்சமற்று வாழ்கிறாரோ
அதுதானே அவர்களின் நாடு
அது மட்டுமல்லவா அவர்களின் வீடு?

ஆம்...
மற்றன யாவும் நாடு நாடு
எங்கள் கனடா ஒன்றே வீடு கூடு

பிள்ளைக்குப் பிள்ளை
தாய்கூட மாறுசெய்வாள்
தத்துப் பிள்ளைக்கும் மாற்றுச் செய்யா
உத்தமத் தாய் எங்கள் கனடா

இவ்வுலகின்...

முட்காடுகளின் மேலே
பூத்திருக்கும் பனிரோஜா

வர்த்தகப் பந்தல்களின் மேலே
படர்ந்திருக்கும் இதயக்கொடி

புதைமணற் தடாகங்களின் மேலே
நீந்திக்கிடக்கும் ஆகாயத் தாமரை

பேரிடி மேகங்களின் மேலே
சமாதானமாய் உலவும் சமத்துவ நிலா

போர்முரசுக் கோட்டைகளின் மேலே
நல்லிணக்கம்பாடிப் பறக்கும் வெள்ளைப் புறா

*
ஓ மானிடா... இது கனடா

எச்சபை நின்றாலும் உன் கருத்தை நீ பேசு
எவ்வாலயம் சென்றாலும் உன் வழியில் நீ வணங்கு
சரியெனப் பட்டதைச் சங்கடமின்றிச் செய்
தவறெனக் கண்டதை தயக்கமின்றிச் சொல்

இங்கே
இனவெறி பழக்கமில்லை
மதவெறி வழக்கமில்லை
நிறவெறி புரிந்ததில்லை
சாதிவெறி அறிந்ததே இல்லை

வெறிகளெல்லாம் எரிந்து விழ
தெய்வநிலை விரிந்து எழ

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

நடுக்கத்தை் வென்று நம்பிக்கை
பிரிவினையைக் கொன்று  இணக்கம்
வக்கிரத்தை எரித்துக் கருணை
வன்முறையைத் துறந்து அமைதி

கற்றுத்தரும் கனடாவின்
காற்றில் அடர்ந்த ஆக்சிசன்
இன்னும் ஆயிரம் உலகங்களுக்குப்
போதும் தாராளம்

*
ஓர் இந்திய மணமகன்
ஸ்காட்லாந்தி மணப்பெண்
பங்களாதேசி மச்சான்
பாகிஸ்தானி மாமன்
இத்தாலி மைத்துனி
இந்தோநேசிய சகலை
ஆப்ரிக்க நாத்தனார்
சீன மாமியார்

ஆம்
இங்கேதான் இங்கேதான்
எல்லோரும் ஓர்குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் கனடா மக்கள்

*
தமிழா
இன்றுதானே
நீ கனடாவைக் கண்டாய்

ஆனால்
சங்ககாலத் தமிழ்ப்புலவனின்
ஞானக் கண் கப்பல்
என்றோ கனடாவின் கரை தொட்டு
நங்கூரம் இட்டுவிட்டதே அறிவாயா?

அதனால்தான்
அவன் அன்றே பாடிவைத்தான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

வேறு எங்கு கண்டாய்
இப்படி ஆரத்தழுவி அள்ளி முத்தாடும்
மெய்யிலும் மெய்யான கேளிரை

ஈரேழு பதினாலு லோகத்திலும்
எவரேனும் காணமுடியுமா?

சோத்துக்கடையின்
அடுக்களைக்குள்ளேயே வந்து
தமிழனுக்குக்
கொத்துரொட்டி கொத்தித்தரும்
வேற்றுமொழிப் பிரதமரை

வெள்ளைக் குர்த்தாவுக்குள்
அச்சு அசல் பஞ்சாபியாய்
பாங்குரா நடனம் ஆடும்
வேற்றுக்கலைப் பிரதமரை

பள்ளிவாசல் சென்று
நோன்பு திறக்கப் பரிமாறி
துவாக்கள் கேட்கும்
வேற்றுமதப் பிரதமரை

ஈரேழு பதினாலு லோகத்திலும்
எவரேனும் காணமுடியுமா?

*
இரண்டாம் தாயகமல்ல
கனடா எங்கள் முதலாம் தாயகம்
அதிலும் முதன்மைத் தாயகமென்றே
தழுதழுக்கும் குரல்கள்தாம்
இங்கே எத்தனை எத்தனை

*
நூறு நூறு மொழிகள் வேறு வேறு இனங்கள்
ஊரு ஊராய்த் தேடு ஒன்றாய் இங்கே பாரு
அது கனடா என்றே கூறு

காற்றில் மூச்சில் கருணை கனடா மண்ணின் மகிமை
கோடி அன்னை தெரிசா கூடிச் சேர்ந்த அங்கம்
எங்கள் கனடா என்னும் தங்கம்

*
கறை ரத்தக் காலடிகளையே
பதித்துவரும் உலகிற்குப்
பொற் பூப் பாதம் பதிக்கப்
பாடம் எடுக்கும் கனடாவே

உன்னை வாழ்த்துவதென்பது
பெற்ற தாயை வாழ்த்துவதல்லவா?

உன்னைப் பாராட்டுவதென்பது
அந்த சொர்க்கத்தையே பாராட்டுவதல்லவா?

அன்புடன் புகாரி
ஜூலை 2017


* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

 அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி

No comments: