Sunday, July 23, 2017

நினைவுகளைப் பகிர்ந்தபோது.

என்னுடைய ஊர் கடலூர் முதுநகர். அதாவது கடலூர் ஓ.டி. நான் கடலூரில் 1933-ல் பிறந்தேன். எங்கள் தெரு வுக்கு மோகன்சிங் வீதி என்று பெயர். எங்கள் ஊரில் ஒரு அக்ரஹாரம் உண்டு. இப்போது எல்லா சாதியினரும் குடியிருக்கும் அந்த அக்ரஹாரத்தில், அப்போது பார்ப்பனர்கள் மட்டுமே குடி யிருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வர்ணத்தக்கா என்கிற ஒருவரிடம்தான் நான் இரண்டாம் வகுப்பு வரை பயின்றேன். அவர்கள் வீட்டின் திண்ணையிலேயே பள்ளிக்கூடம் நடக்கும். நான் படித்த அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்தை நடத்திய சொர்ணத்தக்கா, என் அருமை நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தனின் அத்தைதான். அப்போது ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். நாங்கள் இருவரும் அதன்பின் இப்போது செயின்ட் டேவிட் பள்ளி என்று அழைக்கப்படுகிற எஸ்.பி.ஜி. பள்ளியில் சேர்ந்தோம்.

எங்கள் ஊர் துறைமுக நகரம் என்பதால் வாணிபம் அதிகமாக நடக்கும் பகுதியாக இருந்தது. கடலுக்குச் சென்று கப்பலில் பணி யாற்றுபவர்கள் அதிகம். எங்கள் ஊரின் ஒரு பகுதி மாலுமியார் பேட்டை என்றே அழைக்கப்பட்டது. ஊரில் மீன்பிடித் தொழில் பிரதானம். கராச்சி போன்ற நகரங்களில் இருந்து எல்லாம் கிளை நிறுவனங்கள் எங்கள் ஊரில் அமைக்கப்பட்டு இருக்கும். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வரலாற்று உணர்வுகொண்டவர்கள் கடலூர்க்காரர்கள். இதற்கு எடுத்துக்காட்டு எங்கள் ஊரில் உள்ள ஒரு தெருவின் பெயர் 'இஸ்லாமானவர்கள்’ தெரு. இஸ்லாமியர் தெரு அல்ல... இது இஸ்லாமானவர் தெரு. அப்படி என்றால் இவர்களின் மூதாதையர் இஸ்லாமியர்களாக மதம் மாறி இருக்கிறார்கள் என்பதைப் பெயரைவைத்தே விளங்கிக்கொள்ளலாம். மதங்கள் பலவாகவும், பல்வேறு சாதியினரும் வாழ்ந்து வந்தாலும், கடலூரில் பெரிய அளவில் சாதிய பேதங்கள் இருக்காது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் , தன் ஊரான கடலூர் முதுநகர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபோது.

தகவல் தந்த 
அப்துல் கையூம்  அவர்களுக்கு நன்றி 

No comments: