Tuesday, July 25, 2017

விவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

விவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். எட்டு நாளாயிற்று. அதில் பங்கேற்க வந்த ஒருவர், ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர். அவர் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம்.
நான்கைந்து நாட்களுக்கு முன்னால் போன் செய்தார். அவசரமாக ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது, ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டும், நீங்கள் வந்து எடுத்துத்தர முடியுமா என்று கேட்டார். வேலை நிறைய இருக்கிறது, வர இயலாது, நீங்களே போய் எடுத்துக்கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு எழுதப்படிக்க தெரியாது என்றார். (போனமுறை ஒருவன் டிக்கெட் எடுப்பதாகச் சொல்லி பலரையும் ஏமாற்றிவிட்டு 20 ஆயிரம் ரூபாயுடன் ஓடிவிட்டது நினைவு வந்தது.) யாரையாவது துணைக்கு அழைத்துச்சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.

அடுத்தநாள் மீண்டும் போன் செய்தார். உங்ககிட்டே சொன்னா கம்ப்யூட்டரிலேயே எடுத்துடுவீங்களாமில்லே... ஒரு டிக்கெட் எடுத்துக் குடுத்துடுங்களேன் என்றார். (யாரோ போட்டுக்கொடுத்திருக்கிறார்கள்!) அவரிடம் ஐடி கார்டு இருக்கிறதா என்று தெரியாத காரணத்தால்தான் ஈ-டிக்கெட் பற்றி நான் முதலில் பேசவில்லை. ஐடி கார்டு இருக்கா என்று கேட்டேன். இருக்கிறது என்றார். அந்த நிமிடமே அவர் பெயரில் ஈடிக்கெட் பதிவு செய்து, ஐஆர்சிடிசி அனுப்பிய குறுஞ்சேதியை அவருக்கு அனுப்பி விட்டேன்.
சற்றுநேரத்தில் மீண்டும் போன் செய்தார். டிக்கெட்டை பிரின்ட் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். பிரின்ட் ஏதும் தேவையில்லை. எஸ்எம்எஸ் வந்திருக்கு இல்லையா... அதைக் காட்டினால் போதும் என்றேன். போன் ஆப் ஆயிடுச்சுன்னா தகராறு. அது மட்டுமில்ல... எனக்கு மெசேஸ் எல்லாம் பாக்கத் தெரியாது என்றார். இன்று பிரின்ட் எடுத்து நண்பர் மூலம் அனுப்பி வைத்தேன்.
தில்லி வந்திருக்கும் நண்பர் பாரதி சுப்பராயனை சந்திக்க இன்று கனாட் பிளேஸ் சென்றபோது, அப்படியே அவரையும் சந்திக்கச் சென்றேன். அவருடைய போனிலிருந்து ஒரு தொலைபேசி எண் எடுக்க வேண்டியிருந்தது. அந்த பேசிக் மாடல் போனில் அந்த எண்ணை அவர் அழுத்திப்பிடித்துக்கொள்ள, நான் நம்பரை என் செல்போனில் உள்ளிட்டவாறே, நைன், செவன், நைன், ஃபைவ் (9795).... என்று சொல்லி, அடுத்த எண் என்ன என்று கேட்க, இங்கிலீஷ் எல்லாம் வராது சார் என்றார் அவர். அப்புறம் ஒம்பது ஏழு, ஒம்பது அஞ்சு ... ... ... ... என்று அவர் தமிழில் சொல்ல, நான் குறித்துக் கொண்டேன்.
வங்கி, எரிவாயு, ரயில்வே, அரசுத் துறைகள், சில செல்போன் கம்பெனிகள் என பலவற்றிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஐவிஆர்எஸ் ஒலிக்கிறது. எஸ்எம்எஸ் பார்க்கத் தெரியாத, ஆங்கிலத்தில் எண்களைக்கூட கூற முடியாத, முருகனைப்போன்ற கோடிக்கணக்கானவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா விளம்பரங்களில் மோடி வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கிறார். ஸ்மார்ட் போன் வைத்துக் கொள்ளாமல் இன்னுமா பேசிக் போன் வைத்திருக்கிறார்கள் என்று நிர்மலாக்கள் கேட்கக்கூடும்.

Shahjahan R

No comments: