Thursday, July 6, 2017

வித்வான் அபூபக்கர்

Vavar F Habibullah
வித்வான் அபூபக்கர்    
சமீபத்தில் சென்னையில் எனது நண்பர் முன்னாள் ஏடிஜிபி சந்திர கிஷோர் IPS அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றியவர்.குமரி மாவட்ட சம்பவங்களை என்னிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்த போது திடீரென்று
உங்க ஊர் வாத்தியார்....அவர் பெயர் மிஸ்டர் அபுபக்கர் சார் எப்படி இருக்கிறார் என்று கேட் டார்.நான் அவர் மறைந்து விட்ட செய்தியை சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனார்.
அவர் சொன்னார்
அந்த நாட்களில் அபுபக்கர் தான் நாகர்கோவில் முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரட்சனைகளுக்காக என்னிடம் வருவார்.பொதுவாகவே குமரி மாவட்ட காவல் துறைக்கு ஒரு சிறந்த நண்பராக அவர் திகழ்ந்தார்.மிகவும் நல்ல மனிதர்.
சொன்னவர் காவல் துறையின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
வித்வான் அபுபக்கர்
மிகச் சிறந்த தமிழ் அறிஞர் நாஞ்சில் நாட்டில் அந்த நாட்களில் இவர் சொற்பொழிவாற்றாத தமிழ் மேடைகள் இல்லை.இந்துக் கல்லூரியின் தமிழ் மன்றங்களில் இவர் தமிழ் மணம் வீசும்.தமிழில் முதுநிலை பட்டம் தமிழில் வித்வான் பட்டம்.அந்த நாட்களில் பனாரஸ் பல்கலை கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த தமிழ் மாணவர்.
பண்டித சாஸ்தான் குட்டி பிள்ளை தமிழ் அறிஞர் வானமாமலை வித்வான் ஆறுமுகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர் குழாம் ஒன்று இவரை சுற்றி எப்போதும் இருக்கும்.அவர்களின் தமிழ் விவாதங்களில் புதிய தகவல்கள் புதைந்து கிடக்கும்.சேக்ஸ்பியர் கூட ஜெகப்பியர் என்ற தமிழர் தான் என இவர்கள் எழுப்பும் வாதம் கண்டு சில நேரங்களில் நான் மலைத்ததுண்டு.திருக்குறளை படித்து விடலாம் பரிமேலழகர் உரையை படிப்பது கடினம்.தமிழை விட சமஸ்கிருதம் முந்திய மொழி என்று வாதிடும் சக தமிழ் அறிஞர்களை வாதத்தில் கலந்து எதிர் கொள்ள இந்த தமிழர் குழு சவால் விடுக்கும்.

நாகர்கோவில் நகரில் அன்று பிரபலமாக விளங்கிய STC கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இவர் இருந்தார்.அரசு கல்லூரி களில் பணிபுரிய வந்த வாய்ப்புகளை எல்லாம் இவர் அந்த நாட்களில் உதறி தள்ளினார்.திருச்சி ஜமால் முகமது கல்லூரி இவரை வற்புறுத்தி அழைத்தும் இவர் அதை விரும்பவில்லை.காரணம் தன் தாயின் மீது அளவற்ற பாசம்.தாயை பிரிந்து வெளி ஊரில் அல்லது வெளி நாட்டில் வேலை செய்ய இவர் விரும்பவில்லை.பெற்ற தாயின் மீது இவர் கொண்டிருந்த பாசத்தை போன்று நான் எவரையும் என் வாழ்நாளில் கண்டதில்லை
இவரது தாயாரை அம்மாள் என்றே கோட்டார் சமுதாய மக்கள் அழைப்பார்கள்.யார் வீட்டுக்கு மகனை பார்க்க வந்தாலும் அவர்களை அன்போடு உபசரித்து சில நேரங்களில் அறுசுவை உணவை முக மலர்ச்சியுடன் பரிமாறி வழியனுப்பி வைப்பதை ஒரு கடமையாக கொண்டிருந்தார் அவரின் அன்புத் தாயார்.
அபுபக்கரை கோட்டாறு ஊர் மக்கள் செல்லமாக சார் அல்லது வாத்தியார் என்றே அழைப்பர்.பல கொள்கைகளை கொண்ட அந்த ஊரில் இவரது சொல்லுக்கு விலை அதிகம்.பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் ஊர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் இவரது உற்ற நண்பர்கள்.பேச்சுக்கலையில் வித்தகர் இவர்.எழுத்தாற்றலிலும் வல்லவர்.
நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாச்சாரக் கழகம் அமைய காரணமாய் அமைந்த தூண்களில் ஒருவர்.
கலாச்சாரம் என்ற மாத பத்திரிகையின் அந்த நாள் ஆசிரிரியர் இவர்.சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் பீர் முகமது MLA இவரது உற்ற நண்பர்.கழக மற்றும் முஸ்லிம் லீக் அரசியல் பிரமுகர்கள் பலர் அழைத்தும் இவர் ஏனோ அரசியலில் நாட்டம் கொள்ளவில்லை.
இவரது நண்பர்கள் நாஞ்சில் ஆரிது எம்எம் கண்ணு போன்றோர் திமுக விலும் காஜா மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் செய்கு தம்பி தமிழ் நாடு முஸ்லிம் லீக் தலைவராகவும் பவனி வந்த போதும் இவர் அரசியலில் நாட்டம் கொள்ள வில்லை.
நான் நல்ல தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற் கும் இவர் தான் காரணம் என்பது முழு உண்மை.கோட்டாரில் கர்பலா தினம் நபிதின விழா போன்ற இஸ்லாமிய கல்வி கலாச்சார விழாக்களை தான் வாழ்ந்த வரை மாவட்ட அளவில் நடத்தி மாற்று மத அறிஞர் பெரு மக்களையும் அழைத்து வந்து மேடையில் அமர வைத்து அவர்களை பேச வைத்து மத நல்லிணக்கத்துக்கு அடிகோலிய சமூக பெருந்தகை இவர்.
இவரின் தமிழ் எழுத்து நடையை மாணவ பருவத்தில் அருகிலிருந்து ரசித்தவன் நான்.
ஒரு நெருங்கிய நண்பர் இவரோடு சில நாட்க ளாக பேசவில்லையாம். வாத்தியார் நண்பருக்கு ஒரு மடல் எழுதுகிறார்.
ஒரு கை ஓசையால் என்ன பயன்
இது தான் நண்பருக்கு அவர் வரைந்த கடிதம்
நபி தின விழாவில் வாத்தியார் ஒரு முறை பேசினார்.அது அப்படியே எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது.
காடுகளில் மேடுகளில்
பனி படர்ந்த நாடுகளில்
பாலைகளில் சோலைகளில்
புகழ் வளர்த்த நாயகமே
என்று தேன் தமிழில் வார்த்தைகளை குழைத்து ஊட்டும் பண்பு கண்டு நான் பலமுறை வியந்து இருக்கிறேன்
பின்னாளில் இவர் பேசிய இந்த தமிழ் வசனங்களை பிறர் தங்கள் கவிதைகளில் புனைந்து அதை தங்கள் கவிதை ஆக்கிய போதும் அதை பிறரை பாட வைத்து ஒலிப் பதிவு செய்து ஊரெல்லாம் விளம்பரம் !!!...
இவர் அதை சட்டை செய்யவில்லை.
பெரிய மனிதர்கள் என் எழுத்துக்களை தன் எழுத்துக்களாக கொள்வது கூட எனக்கு பெருமை தான் என்று பெருந்தன்மையுடன் என்னிடம் கூறியதை என்னால் இன்றும் மறக்க இயலவில்லை.
சூபிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இவர் திகழ்ந்தார்.எனது தாயாரை சிகிச்சைக் காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த நேரம்...
நான் சென்னையில் இருந்தேன்.தகவல் அறிந்ததும் நாகர்கோவில் வந்தேன்.பெருநாள் தினம் அது.இரவு நேரம் தாயாரின் உடல் நிலையை மருத்துவரிடம் கேட்டறிந்த பின்னர் வெளியே வந்தேன்.
வாத்தியார் வராந்தாவில் கண்ணயர்ந்த நிலையில் ஒரு வித மயக்கத்தில் இருந்தார்.
நான் அவர் அயர்ந்து உறங்குகிறார் என்று எண்ணிணேன். என் குரலை கேட்ட அவர் சற்றென்று உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தார்.நடு நிசி தாண்டிய நேரம்.என் பெயர் சொல்லி அழைத்த அவர் என் கைகளை இறுக பற்றினார்.அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
நான் இப்போது கனவில் என் தாயாரைக் கண்டேன்.என் மகளை அழைத்து செல்ல நான் வந்து விட்டேன் என்று ஒரு ரகசிய செய்தியை என் காதில் சொன்னார்.மனதை திடப்படுத்திக் கொள் இன்னும் சற்று நேரத்தில் உன் தாயார் இல்லை என் அக்கா இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.
டாக்டர் என்ற முறையில் அவர் பேச்சை நான் சட்டை செய்யவில்லை.என்றாலும் அவர் அன்று சொல்லி சென்ற செய்தி என் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.
வித்வான்.ந அபூபக்கர் எனக்கு தாய் மாமன் முறை.என் தாயாரின் கடைசி தம்பி அவர்.

(படத்தில் இடது மர்ஹூம் Vidwan N Aboobacker மற்றும் Dr.Vavar F Habibullah)
Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails