Tuesday, January 1, 2013

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


 'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?
    நோக்கம்
    பிரச்சினைகள்
    எழுவதின் செயல்முறைகள்
    திட்டமிடல் (Planning)
    முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
    மீள் பரிசீலனை செய்தல் (Revising)
    எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
    எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
    உதவிக் குறிப்புகள்


கற்பதின் நோக்கங்கள்
(இவ்வத்தியாயத்தைக் கற்று முடித்த பின்னர் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

1.சிறந்த முறையில் எழுதுவதற்குரிய அடிப்படை அம்சங்களை அடையாளம் காண்பது.

2. மேலும் பயன்மிக்கதாக எழுதுதல்

3.பிறரது எழுத்தாக்கங்களை,பதிவுகளை விமர்சன ரீதியாகத் திறனாய்வு செய்தல் )

1.நோக்கம்

எழுதுதல் என்பது ஒரு பன்முகத்தனமை கொண்ட ஒரு கருவியாகும். பிறருக்கு தகவல் வழங்கவும், அவர்களை அறிவுறுத்தி இணங்கச் செய்வதற்கும்,உற்சாகமூட்டி உணர்வூட்டுவதற்கும்- ஏன் மற்றவர்களைப் பயமுறுத்துவதற்கும்கூட- நாம் எழுத்தைப் பயன்படுத்துகிறோம்.நன்றாக எழுதுவது முக்கியமானதாகும் ஏனெனில், எழுத்துக்களுக்கு பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு.

1. எண்ணங்களுக்கும் தகவல்களுக்கும் நிரந்தர வடிவம் தருகிறது. இதனால் அவற்றை உசாத்துணைக்காகவும் பிரதியெடுப்பதற்காகவும் எளிதில் பயன்படுத்தலாம்.

2. அதனுள் அடங்கியுள்ள செய்திக்கு ஏற்ப பிறரைச் செயலாற்ற செய்கிறது.

3. எழுத்தாளரின் சிந்தனைகளைப் பிரதியெடுக்கவும்,அதிகமானோருக்குப் பரப்பவும் முடியும் என்பதால் அவரது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

4.புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகளைத் திருத்தமான விதத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்போரை வழிநடத்தி நெறிப்படுத்துகிறது.

5.வாசகருக்கு செவிவழிச் செய்திகளாக இல்லாமல் எழுத்தாளரை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையும் ஆதாரப்பூர்வத் தன்மையும் ஏற்படச் செய்கிறது.

6.தெரிவுகளை அல்லது செயற்பாட்டுக்கான வழிமுறைகளைத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் எடுத்துரைப்பதனால் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

7. ஒரு விடயத்தை பிரச்சாரம் செய்ய பயன்மிக்க வழிமுறையொன்றாக திகழ்கின்றது.

பிறருடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான கருவி என்கிற முறையில் எழுத்தாற்றலானது பயிற்சியின் மூலம் கூர்மையடைய செய்ய வேண்டும். நமது எழுத்தாக்கங்கள்,பதிவுகள் தெளிவானதாகவும் திருத்தமானவையாகவும் மட்டுமின்றி,விளங்கக் கூடியவைகளாகவும் விருப்பத்திற்குரியவைகளாகவும் அமைய வேண்டுமாயின் சரியான பொருளடக்கத்தையும், சொற்களையும் நாம் தெரிவு செய்து கொள்வது முக்கியமாகும்.

(இறைவன் நாடினால் அடுத்த தொடரில் பிரச்சினைகளும், எழுதுவதின் செயல்முறைகள் இவைகளை பார்ப்போம் தொடரும் )
Source : http://www.valaiyugam.com/

3 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
ஆக்கப்பூர்வமான விடாய்ங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் சமூக அக்கறைக்கு என் வாழ்த்துகள்.

கூடுதலான அந்த கணொளி மிக அருமை

mohamedali jinnah said...

JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً)
நன்றி

சேக்கனா M. நிஜாம் said...

ஆக்கப்பூர்வமான விடயங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் சமூக அக்கறைக்கு என் வாழ்த்துகள்.