Thursday, January 17, 2013

தலைமகன்

அப்பாவின் போனஸ் காசோலையாய் வந்தது
அம்மாவின் நகைகளோ கரன்சியாக மாறியது
வீட்டுப்பத்திரமோ வங்கியில் சரணம்
அம்மாவுக்கு தந்த சீதனக் காணி
சடுதியில் கைகள் மாறி
காந்தி தாத்தாபடம் போட்ட
சலவைத்தாளாய் ஆனது

இத்தனையும் போதாதென்று
அக்காவின் திருமணத்திற்கு
சேர்த்துவைத்த பொன்னகை சல்லிசாக
சென்றன சேட்டுக்கடை நோக்கியே
பாட்டி காதில் மினுமினுத்த வைரகம்மலும்
செவிமடலை விட்டு கழன்று போனது

வந்திருந்த தீபாவளி புத்தாடை காணவில்லை
வருடந்தோறும் செய்து வந்த பட்சணங்கள்
சுவைக்கவில்லை
பட்டாசு ஒன்றைக்கூட கையாலே
தொட்டதில்லை
அத்தனையும் விட்டுக்கொடுத்து
குடும்பத்தினர் தலைமகனை
மேல்நாடு அனுப்பிவைத்தர்

மேல்படிப்பு முடித்தமகன்
அத்தனையும் மீட்டிடுவான்
அமோகமாக வாழ்ந்திடுவான்
சென்ற செல்வம் திரும்பி வரும்
செல்லமகள் கரைசேர்வாள்
சோர்ந்த உள்ளம் மலர்ச்சி கொள்ளும்
எண்ணில்லா கனவுகளுடன்
நாளதனை எண்ணிக்கொண்டு
நல் வழியை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்தர்

வந்தன்றோ மின்னஞ்சல் ஒன்று
அதுகண்டு குடும்பத்தினர்
கணினி முன்னே தான் அமர்ந்து
மின் திரையை நோக்கினரே
பல்கலைகழகத்தில் உடன்படிக்கும்
கேத்தரீனை மணந்து கொண்டேன்
வாழ்வதற்கு சொந்தமாக
சின்னவீடு வாங்க வேண்டும்
சொகுசாக அங்கு வாழ
பொருளெல்லாம் சேர்க்கவேண்டும்
சுற்றித்திரிந்துவர
சொகுசுக்கார் வாங்க வேண்டும்
தேவை எனக்குங்கள் ஆசிர்வாதம்
மெல்லினமாய் கேட்டிருந்தான்
மேல் நாட்டு தலைமகன்
by ஸாதிகா
Source : http://shadiqah.blogspot.in/

சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை

சுயச்சரம்