மு.ஹாஜரா, இரண்டும் ஆண்டு ஆங்கிலம் இலக்கியம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
20-11-2012 இன்று என் அத்தாவுடன் சேர்த்து, என் சந்தோஷங்களையும் அடக்கிய நாள்.
அத்தா! உங்கள் அழகு முகத்தைப் பார்த்த இறுதி நாள். நான் உங்களிடம் மனம்விட்டு பேசி. அதை நீங்கள் கவனிக்காமல் படுத்திருந்த முதல் நாள்!
என்னை முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியரிடம் "என் மகளை அடித்துவிடாதீர்கள் !" என்று பாவமாகக் கேட்ட உங்கள் முகம் இன்னும் என் ஞாபகத்தில்! இந்த வயதிலும் என்னை சிறு பிள்ளையாக நினைத்து கொஞ்சுவீகள்.பத்து வயது வரை என்னைத் தூக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் போவீர்கள். அம்மா என்னைக் கடிந்து பேசும் போதெல்லாம் எனக்காகப் பரிந்து பேச வருவீர்கள், எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னைத் திட்டியதோ அடித்ததோ இல்லை நீங்கள்!
பழங்களை உரித்து வாயில் ஊட்டிவிடுவீர்கள். சின்ன சிரமங்களைக் கூட எனக்குக் கொடுக்காமல் இருந்துவிட்டீர்கள். பதினெட்டு வருடம் கழித்துப் பெற்றது. இந்த தவிப்புகளை எல்லாம் எதிர் கொள்ளத்தானா அத்தா? எல்லோரும் சொல்வார்கள், நான் குழந்தையாக இருந்த பொது, என்னிடம் கேட்பீர்களாம், "எப்போது என்னை அத்தா என்று கூப்பிடுவாய் ?" என்று! இப்போது 'அத்தா அத்தா ' எனக் கதறுகிறேன் , என் கதறல்களைக் கேட்க முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து!
சிறு வயதில்என்னைத் தூக்கிக் கொண்டு நிலா காட்டுவீர்கள். நிலா கடித்து விடும் எனப் பயந்து , உங்கள் தோளில் சாய்ந்து கொள்வேன் . அப்போதே எனக்குத் தெரிந்திருக்கிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உறுதுணையாக உங்கள் தோள் இருக்கிறது என்று, என் வாழ்நாளில்,எதற்கும் நீங்கள் வருத்தப்பட்டோ , சோர்ந்திருந்தோ பார்த்ததில்லை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் , எப்பொழுதும் உங்களுக்கே உரித்தான குறும்புப் பேச்சுடன் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஒரு நாள் இரவு கொசுக்கடியால் அவதிப்பட்டேன் . நடு இரவு என்றும் பாராமல் உங்கள் மகளுக்காக எழுந்துவந்து , போர்வை போர்த்திவிட்டீர்கள். தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு உள்ளுக்குள் எவ்வளவு பூரித்தேன் என்று தெரியுமா அத்தா? பலமுறை என்னிடம் கேட்டுள்ளீர்கள். வயதான காலங்களில் எங்களைக் கவணிப்பாயா ? என்று! நான் நக்கலாகச் சிரித்துவிட்டு, மனதிற்குள் நினைப்பேன். சொல்லில் காட்டாமல் செயலில் காட்டவேண்டும் என்று! நான் சம்பாதித்து உங்களை ராஜாவாக வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என் ஆசைகளை சொல்லாமல் கூட விட்டுவிட்டேன்.
நீங்கள் மும்பை போன அந்த பதினைந்து நாட்களும் நரகமாய் கழிந்தன. "நாளை வந்து விடுவீர்கள் நாளை வந்து விடுவீர்கள்" என சொல்லிக் கொண்டே நாட்களை நகர்த்தினேன். நீங்கள் என்னை நினைத்துக் கவலைப்படாதீர்கள் அத்தா ! இனியும் அதே வார்த்தைகளைச் சொல்லியே என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன்
"கூரிய விழிகள் உன் விழிகள்! கூர்ந்து பார்த்தால் என் விழிகள்!" என்னைப் பார்த்து கவிதைப் பாடினீர்கள் . இன்று இந்த நகல் விழிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.அசல் விழிகளோ அசைவில்லாமல் தூங்குகிறது . "சோர்ந்து போன நேரத்தில் சொத்தாய் வந்து சேர்ந்தாயே " என்று கூறுவீர்கள் என்னைப் பார்த்து ! இன்று இந்த சொத்து தன் சொத்தை இழந்து சோர்ந்து நிற்கிறது. எனக்குள் ஒரு சின்ன கர்வம் இருந்ததுண்டு . எனக்குக் கிடைத்த மாதிரி ஒரு அத்தா வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்று ! கர்வம் கொண்டதாலோ என்னவோ என் கண்ணிலிருந்து அல்லாஹ் உங்களை தூரமாக்கிவிட்டான் .
அந்தக் கடைசி தருணத்தில் மருத்துவர் உங்களிடம், உங்கள் பெயர் கேட்டதும் , நீங்கள் பெயரைக் கூறாமல் ,கலிமா சொன்னதுமே நான் புரிந்து கொண்டேன் அத்தா! அம்மாவின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு. 'ஏதோ சூரா சொன்னார்கள் ' என்று என்னை பொய் சொல்ல வைத்தது ! நான் இறுதியாக உங்களை அத்தா என்று கூப்பிட்டபோது, என்னைத் திரும்பிப் பார்த்து கண்களாலே சிரித்தீர்கள் . கவலைப்படாதே " நான் நிம்மதியான சந்தோஷமான இடத்திற்குத்தான் போகிறேன்" என்று என்னை சமாதானம் சொல்வதுபோல் இருந்தது .
என்னிடம் சிறு வயதில் பலரும் கேட்டார்கள். நீ அத்தா பிள்ளையா? அம்மா பிள்ளையா ? என்று ! நான் சற்றும் யோசிக்காமல் , பெருமையாக 'அத்தா பிள்ளை' என்பேன் . இன்று 'அத்தா பிள்ளை' என்ற வார்த்தை இரண்டாகப் பிரிந்து, ஒன்று மட்டும் தவியாய்த் தவிக்கிறது. நண்பர்கள் போல் நாம் இருவரும் , ஒருவரை ஒருவர் கிண்டலடித்து ,பின் இருவரும் சேர்ந்து கொண்டு அம்மாவைக் கிண்டலடித்து , கவிதையாய் வாழ்ந்தோமே! இன்று கால் இழந்தது போல் தவிக்கிறோமே அத்தா!
அத்தா உங்களுக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? பரீட்சையில் ஒரு முறை நான் மதிப்பெண் குறைந்த போது , ஆசிரியை உங்களை வரச் சொல்லி என்னைத் திட்டினார். திட்டு வாங்காத அத்தாவிடம் இன்று திட்டு வாங்கிவிடுவேன் என நினைத்தேன். ஆசிரியையிடமிருந்து விடை பெற்றதும் , இவ்வளவு பெரிய ஆளை தலை குனிய வைத்து விட்டோமே என்று கவலையோடு நின்றிருந்த என்னிடம், நக்கலாக நீங்கள் சொன்னது, ' உன் ஆசிரியையின் சங்கிலி பெருசாக இருக்கே !' என்றுதான்! நான் வெளியில் சிரித்துக் கொண்டேன். இந்தச் சிரிப்புக்குத்தானே உள்ளுக்குள் கவலையை சுமந்து கொண்டு இவ்வாறு சொன்னீர்கள் ?
அத்தா!நான் சிறிது கண்ணீர் விட்டாலும் தாங்க மாட்டீர்கள். இன்று நீங்களின்றி உங்கள் உதிரம் இங்கு துடித்துக் கொண்டு இருக்கிறது . நீங்கள் சற்றும் திரும்பிப் பார்க்காமல் நிம்மதியாகத் தூங்குகிறீர்களே! நான் பார்க்காத இடங்களுக்கு எல்லாம் ,என்னை விட்டுவிட்டுச் செல்லும் போதெல்லாம் , விளையாட்டு பொறாமையாக சொல்வேன் " கண்மூடிக் கொண்டே போங்கள் " ஏன்று ! அதற்கு நீங்கள் இப்படித்தான் அர்த்தம் எடுத்துக் கொள்வீர்களா ? உங்களை இழந்த சோகங்களோடு, எனக்குள் மிகப் பெரிய பெருமையும் வந்தது. உங்களுக்காக வந்திருந்த கூட்டங்களைப் பார்த்து ! எளிமையாக வாழ்ந்த உங்களுக்காக எள்ளளவும் இடம் வைக்காமல் கூட்டம்! அதிர்ந்து போனேன் அந்த நிமிடம். புரிந்து கொண்டேன் . இழப்பு எனக்கு மட்டுமல்ல ! இஸ்லாமிய சமுதாயதிற்கே என்று !
என்னை தந்தை இல்லாத பிள்ளை என்று அனைவரும் சொல்லலாம் . ஆனால் நீங்கள் மறைந்தும் , வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் புகழை நினைத்தால் என்றும் தந்தை உடையவள் நான்தான் !
தாதா அவர்களின் இழப்பையே இன்னும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், நீங்களும் என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டீர்களே அத்தா ! பிறந்த உடனேயே மறைந்த என் தங்கையை தேடிவிட்டதோ ?
என்னிடமிருந்து சீக்கிரம் உங்களைப் பிரித்த அல்லாஹ்விடம் கண்டிப்பாக எனக்கு வருத்தமில்லை. இப்பேர்பட்ட மகானின் மகளாய் படைத்த அவனுக்கு என்றும் நன்றி சொல்வேன்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
நன்றி :ஜமாஅத்துல் உலமா (மாத இதழ்-டிசம்பர் 2012)
----------------------------------------------------
திருநெல்வேலி: ஜமாத்துல் உலமா மாத இதழின் ஆசிரியரும், நாடறிந்த மார்க்க மேதையுமான மறைந்த மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களின் மகனுமான மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலானா மௌலவி எம்.எ.முஹம்மது இபுராஹீம் பாக்கவி ஹஜரத் தமது ஐம்பத்து ஆறாவது வயதில் 20.11.12 இன்று காலை நான்கு மணி அளவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜிவூன்.
மௌலானா அவர்கள் நேற்றைய முன்தினத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். உணர்வு திரும்பாத நிலையில் இன்று காலை நான்கு அளவில் மறைந்தார்கள்.
அன்னாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
நெல்லையில் முன்னேற்றம் புக் டிப்போ மூலம் ஜமாஅத்துல் உலமா மாத இதழும், மார்க்க நூல்களும், இஸ்லாமிய பிரசுரங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றி பல்வேறு நூல்களும் வெளியிட்டு பணிபுரிந்தவர்.
ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாநகரச் செயலாளராகவும்,
தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் துனைச் செயலாலராகவும்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்க்க அணிச் செயலாலராகவும்,
முஸ்லிம் அநாதை நிலையம்,
திருநெல்வேலி ஹிலால் கமிட்டி,
சர்வ சமய கூட்டமைப்பு,
மத நல்லிணக்க நடவடிக்கை குழு
முதலான அமைப்புக்களில் மிகச்சிறந்த பணிசெய்தவர் ஆவார்.
பல்வேறு இடர்பாடான காலகட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கட்டிக்காப்பதில் முன்னணி தளகர்த்தராக அரும்பணியாற்றினார்.
மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்தவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் பிழை பொறுத்து மேலான சுவனபதி அருள பிரார்த்திப்போம்.
எல்.கே.எஸ்.மீரான் முகைதீன்,
மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்.
திருநெல்வேலி.
No comments:
Post a Comment