Monday, January 28, 2013

நடிகர் கமலுக்கு ஒரு விஸ்வரூப கடிதம்!

அன்புள்ள நடிகர் கமலுக்கு,

நான் உங்கள் ரசிகன் அல்ல. ஆனாலும் உங்கள் படங்கள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு மட்டுமல்ல பன்முகம் கொண்ட சினிமா நடிகர்களில் நான் யாருடைய ரசிகனும் அல்ல.

விஸ்வரூபம் படம் பார்ப்பதற்கு முன்பே விஸ்வரூபமாய் வெளியாகும் செய்திகள் மூலம் அந்தப் படத்தின் கரு வியாபாரத் தந்திரமான தீவிரவாதக் கதை என்பதை அறிந்தேன். உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கும் முக்கியப் பிரச்னை தீவிரவாதம். தீவிரவாதத்துக்கு மதம், இனம், மொழி நிறம் கிடையாது. நான் அறிந்து எந்த மதமோ, மொழியோ, தீவிரவாதத்தை வலியுறுத்தவில்லை. அதனாலேயே தீவிரவாதிகளின் மதம் சார்ந்து தீவிரவாதம் வேறுபடுத்தப் படுவதிலும் எனக்கு விருப்பமில்லை.

தீவிரவாதத்துக்கு பல்வேறு நியாய/அநியாய காரணங்களும் உண்டு. அதில் உள்நுழைய நான் விரும்பவில்லை. ஆனால் உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தொடர்ந்து தீவிரவாதியாக்கி வேடிக்கை பார்த்து வருகிறது. அதற்கு முற்போக்குச் சிந்தனைவாதியான நீங்களும் விதி விலக்கல்ல; காரணம் நடிகர்கள் இன்று கேட்கும் கோடிக் கணக்கான சம்பளத்துக்கு உலக அளவில் அந்தப் படம் வியாபாரமானால்தான் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொள்ளாமல் பிழைப்பார். இதன் காரணமாகவே ஏ.வி.எம் போன்ற பல தயாரிப்பு நிறுவனங்களும் படத் தயாரிப்பையே விட்டு ஓடி விட்டன.

நடிகர்கள் வாங்கும் கோடிகள்  காரணமாகவே (வாங்கும் கோடிகளுக்கு ஒழுங்காக வரி கட்டி தங்கள் தேசப் பற்றை நடிகர்கள் நிரூபிக்கிறார்களா என்பது வேறு விஷயம்) அந்தப் படம் தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம், மும்பை எனப் பல மாநிலங்களிலும் மொழி மாற்றம் செய்யப் பட்டு வெளியிடப் படும். பல மாநிலங்களில் பிழைப்பு உள்ளதால், விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு என தமிழர்களைப் பாதிக்கும் நியாயமான கோரிக்கைகளில்கூட எந்த நடிகரும் வாய் திறப்பது கிடையாது. வாய் திறந்தால் அங்குள்ள மக்கள் படம் பார்க்க மாட்டார்களே! கோடிகளில் குளிக்க முடியாதே!

"சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும்", "கருத்துச் சுதந்திரம் காக்கப் பட வேண்டும்" என்ற கருத்துகள் பலமாகப் பேசப் பட்டு வருகின்றன. சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டுமெனில் டேம் 999 படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்னுடைய கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவரின் உணர்வுகளைக் காயப் படுத்தும் வகையில் அமையக் கூடாது.
'.................


நேராக மேட்டருக்கு வருவோம். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ''தேசப் பற்றுள்ள எந்த நடுநிலை முஸ்லீமும் இந்தப் படத்தை எதிர்க்க மாட்டான்" என்றும் "விஸ்வரூபம் திரைப் படத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார தீவிரவாதிகள்" என்றும் நீங்கள் தெரிவித்துள்ளதாகச் செய்திகளில் படித்தேன்.

கமல் சார், தெரியாமல் தான் கேட்கிறேன் தேசப்பற்றின் இலக்கணம் எது? தீவிரவாதிகள், கறுப்பு பண முதலைகள், ஊழல் அரசியல்வாதிகளை விடவா விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று அற்றவர்கள்? தீவிரவாதம் எந்த மதத்திலும் இல்லை; ஆனால் தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமியத் தலைவர்களிடம் படம் போட்டுக் காண்பித்த போது இந்தப் படத்தை ராமகோபாலன் எதிர்ப்பார் என்று கூறியதாக ஒரு வாரஇதழில் படித்தேன். ஏன் சார்? யாருமே எதிர்க்காமல் ஒரு படத்தை உங்களால் எடுக்க முடியாதா? அடுத்தவனின் மத உணர்வைப் புண் படுத்திதான் நீங்கள் புசிக்க வேண்டுமா?

டைட்டிலில் தேசிய கீதம் வேறு வைத்து இருக்கிறீர்களாம். ஆப்கானிலும் அமெரிக்காவிலும் நடக்கும் கதைக்கு ஏன் டைட்டிலில் இந்திய தேசிய கீதம்? தேசப்பற்று மிக்க ரசிகர்கள் எழுந்து நின்று தான் படம் பார்க்கின்றனரா? தேசப்பற்றுமிக்க நடுநிலையான முஸ்லிம்கள் உங்கள் படத்தை எதிர்க்கமாட்டார்கள் என்று கூறியதற்கும் இந்த டைட்டில் தேசிய கீதத்துக்கும் இடையிலான உள் அரசியல் என்ன?

விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவைக் காப்பாற்ற ஆப்கன் தீவிரவாதிகளை முறியடிக்கும் நீங்கள் கூட ஹாசன் என்ற பெயர் காரணமாக அமெரிக்காவில் சோதனை நிகழ்த்தப் பட்ட வரலாறும் உண்டு. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரானாலும் கூட முஸ்லீம் பெயர் சூட்டினால் அமெரிக்கா காரன் ஜட்டியை அவுத்து தான் சோதனை இடுவான். இது தான் உலக யதார்த்தம்.

தணிக்கைக் குழு சான்றிதழ் அளித்து விட்டது என்பதற்காகவே அந்தப் படத்தில் எந்த நச்சுக் கருத்துகளும் இல்லை என்றாகி விடாது. ஊழல் நிறைந்த இந்திய தேசத்தில் மறைந்த தேசப் பிதா காந்தியின் பெயரில்கூட பத்திரம் பதிவு செய்ய முடியும். இது போன்ற படங்களுக்கு தணிக்கைக் குழுவின் சான்றிதழ் வாங்குவது பெரிய விசயமல்ல.

படத்தின் இறுதியில் இந்தியாவில் தொடரும் என்று முடித்துள்ளதாக கேள்வி பட்டேன். இன்னொரு விஸ்வரூபம் எடுத்தால் ரூ 100 கோடி பட்ஜெட்டில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தையோ, அல்லது மாலேகான் குண்டு வெடிப்பு சாமியாரிணி கதையையோ உங்களால் படமாக எடுத்து வெளியிட முடியுமா? விடத் தான் விடுவார்களா கலாச்சாரத் தீவிரவாதிகள்? அப்படிப் பார்க்கவேண்டாம், உங்கள் வார்த்தை தான்! அப்படி ஒரு படம் எடுக்க நீங்கள் தயார் எனில் கமல் ஒரு ஆண்மகன் தான்.

உங்கள் படம் தமிழகத்தில் ஓடாது என்று ஒரு முஸ்லீம் அமைப்பு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. ஒரு படத்தை ஓட விட மாட்டோம் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? உங்களின் உழைப்பைப் பறித்து வேதனையை உண்டாக்கத்தான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறதா? அப்படி செய்வார்கள் எனில் உங்கள் இருவருக்குமே பெரிய வித்தியாசம் இல்லை.

ஜனநாயக நாட்டில் யாரும் எதையும் பேசலாம்; எழுதலாம். பட் ஒன் கண்டிசன். அது அடுத்தவரைக் காயப் படுத்துவதாக இருக்கக் கூடாது. பேசுங்கள்; தேவையற்ற காட்சிகளை நீக்குங்கள். படத்தை வெளியிட முன் வாருங்கள். ஹாலிவுட் ரேஞ்சுக்கு நீங்கள் எடுத்த திரைப்படம் விழலுக்கு இறைத்த நீர் ஆகி விடக் கூடாது என்பது தான் எனது வருத்தம். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்...........

- தேசப் பற்றுள்ள இந்தியன்

(குறிப்பு: உங்கள் படத்தை எதிர்ப்பதால் உங்கள் பார்வையில் நான் தேசப் பற்று அற்றவன் என்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.)
Source : http://www.inneram.com/

No comments: