Wednesday, November 24, 2010

பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)

பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்
ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.


மெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன? - கோபால்
அமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.


தீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை? -கார்த்திக் - தூத்துக்குடி

இந்தியாவில்தான் இல்லை.

காவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.


மற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே? - சந்திரன்'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே?

எல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.

ஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து? - ரவி, அட்லாண்டா
அமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.

ஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? - ஜான்சன் செபாஸ்டியன்
அமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு?

"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா? - வசீகரன், பட்டுக்கோட்டை

உண்டு.

சாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.


காஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அப்துல் ரஹ்மான்இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்புபுதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.

"ஜொள்ளு பாண்டியன்" என்று சொல்கிறார்களே பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா? பொதுவாக ஜொள்ளைப்பற்றி வணங்காமுடியின் லொள்ளு என்ன? - குமார் பாண்டியன், மதுரைபாண்டியர்களைப்பற்றிப் பெருமையாகப் பேசுவதே இது.

அதாவது "ஜொள்ளுமன்னன்" என்று சொல்வதற்கு மாற்றாக, "ஜொ.பாண்டியன்" என்கின்றனர். இதனால் அறியப்படுவது யாதெனில் மன்னன் என்றாலே பாண்டியன்தான் நினைவுக்கு வருகிறான்.

இது மட்டுமின்றி அலெக்ஸ் பாண்டியன், லொடுக்குப்பாண்டி எனவும் பெயர்கள் புகழ் பெற்றுள்ளன.

இது பெருமை இல்லையா குமார் பாண்டியன்?

ஜொள்ளைப்பற்றி என் லொள்ளு:-

ஜொள்ளுக்கு வயசில்லை.

கைக்குழந்தையாக இருக்கும்போது பற்கள் முளைக்காததால் ஜொள் வழியத் துவங்கும்.

சிறு பிள்ளையாக இருக்கும்போது தின்பண்டங்களைப் பார்த்து ஜொள் வடியும்

பதின்ம வயதில் வரும் பருவ ஜொள் "கட்டேலபோறதுவரை" நிற்பதில்லை.

ஜொள்ளு பாண்டியன் என்று ஆண்பாலில் சொல்வதால் ஆண்கள் மட்டுமே ஜொள்ளர்கள் எனப்பொருளில்லை. "ஜொள்ளு பாண்டிமாதேவி"களும் உண்டு.

"யானோக்குங்கால் நிலனோக்கும் நோக்காக்கால்

தனோக்கி மெல்ல நகும்"--கேள்விப்பட்டுள்ளீர்களா?

இது பெண் விடும் ஜொள் என்பதன்றி வேறென்ன?


வணங்காமுடி ஐயா, கவிதைகள் எழுதிய அனுபவம் உண்டா? - ராசுகவிதையே ஓர் அனுபவம்தான் .

எழுதினால் என்ன? படித்தால் என்ன? கரைத்துக் குடித்தால்தான் என்ன? கவிதையே ஓர் அனுபவம்தான்!

நானும் எழுதியதுண்டு; மரபில் வேரூன்றிப் புதிதில் கிளை விரித்ததுண்டு.

மரபோ புதுமையோ..கவிதை என்றால் அதில் உணர்ச்சி இருக்க வேண்டும்; உணமை இருக்க வேண்டும் என்பதே என் கொள்கை!

கவிதைக்கு அணியாக உவமை, உருவகம், உயர்வு நவிற்சி போன்றவை தேவை.!

"கவிதைக்குப் பொய் அழகு" என்றுதான் கவிஞர் சொன்னாரேயன்றிக் கவிதையே பொய்யாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. "உயர்வுநவிற்சி"யைப் "பொய்" என உயர்வுநவிற்சியாகச் சொல்லியுள்ளார்.

கவிதை பற்றி முன்னர் வசீகரனின் வினாவுக்கு அளித்துள்ள விடையையும் காண்க!


திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களுக்கு வணங்காமுடி அய்யாவின் அறிவுரை என்ன...? - சசிமயூர், துபாய்சசி! நீங்கள் மணம் புரிந்துகொள்ளப்போகிறீர்கள் எனப் புரிந்து கொண்டேன்.

வாழ்த்துகள்!

‘மணம்புரிந்து’ கொண்டதும் இருவரும் ‘மனம்புரிந்து’ கொள்ள வேண்டும்.

மனம் புரிந்து கொண்ட மணமக்கள் இருவரும் இல்வாழ்க்கையில் சமபங்காளிகள். ஆணாதிக்க மனோபாவமும் பெண்விடுதலை மனோபாவமும் இல்வாழ்க்கைக்குத் தேவையில்லாதவை!.

இருமனம் ஒன்றி விட்டால் இல்வாழ்க்கை இனிதுதான். மனைவியைத் தோழி, காதலி, ஆலோசகள்,தாதி, அன்னை எனப் பல கோணங்களில் பார்க்க வேண்டும். மனையும் அவ்வாறே கணவனைப் பார்க்க வேண்டும்

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயநீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

எனும் குறுந்தொகைப்பாடல் எல்லார் வாழ்வின் அனுபவத்தின் வெளிப்பாடுதான்.


இவர் அரசியலில் ஈடுபட்டால் நல்லா இருக்குமே என்று தமிழகத்தின் பிரபலம் எவரையாவது வணங்காமுடி நினைத்ததுண்டா? - அழகப்பன்இல்லை.

நான் மதிக்கும் அல்லது விரும்பும் பிரபலங்கள் அவர்களின் துறைகளில் சிறந்தவர்களாக இருப்பதால் மட்டுமே என் மதிப்பும் விருப்பும். அவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்து மதிப்பிழக்கச் செய்ய நான் விரும்பவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்டுத் தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் ரசிப்பவர்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, துணைமுதல்வர் மு க ஸ்டாலின் போன்றோராவர். இதன் பொருள் அவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை; அவர்களின் ஆளுமை(personality)யை ரசிக்கிறேன்; மதிக்கிறேன் என்பதே.!


ராசாவை நீக்கினால் ஆதரவு அளிப்போம் என ஜெ சொல்வது பச்சோந்தித்தனமல்லவா? - கண்ணன், மஸ்கட்இல்லை!

உங்களுக்கு அரசியல் தெரியவில்லை.

நம் இந்நேரம் தளத்தில் ரஸ்ஸல் எழுதும் அரசியல் அலசல்களைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.

ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணி வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். சைக்கிள் கேப்பில் நுழைந்து லாரி ஓட்ட முயல்வது அரசியல்வாதிகளின் இயல்பு. இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன?

காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவை மறுத்து விட்டாலும் "நான் காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க ஆதரவு தருவதாகத் தெரிவித்ததால்தான் கருணாநிதி ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்" என ராசாவின் பதவி விலகலைக்கூடத் தம் சாதனையாக ஜெயலலிதா சொல்லிக் கொள்கிறார் இல்லையா?

இதுதான் அரசியல்.


என்கவுண்டர் படுகொலைகள் குறித்து வணங்காமுடியாரின் கருத்தென்ன? - ஃபெரோஸ் கான், குவைத்சட்டத்தின் காவலர்கள் நீதிபதிகளாகக் கூடாது.

குற்றவாளிகளாலோ அல்லது காவலர்களால் கைது செய்யப்படுகிறவர்களாலோ உண்மையாகவே காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டத்தில் தம் உயிரைக் காக்கும் உரிமை அவர்க்குண்டு. ஆனால் இதுவரை நம் நாட்டில் நடந்த "என்கவுண்டர்"களில் எல்லாம் காவலர்களுக்குச் சிறு காயங்களும் எதிரிக்கு உயிர் இழப்பும் மட்டுமே ஏற்பட்டுள்ளதால், வழக்கை நீட்டிக்காமல் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காவல்துறையின் உத்தி என்றே பொதுமக்கள் என்கவுண்டர்களைப் பார்க்கின்றனர்.

"புலிவருது" எனக் கதை விட்ட ஆடுமேய்ப்பவனின் நிலை ஒரு நாளும் நம் காவலர்க்கு வந்துவிடக் கூடாது என்பதே வணங்காமுடியின் கருத்து.


கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010112112012/vanagamudi-answers-21-11-2010

1 comment:

Anonymous said...

SoomFrutt

[url=http://healthplusrx.com/benefits-of-cod-liver-oil]benefits of cod liver oil[/url] Wousiaamomy

LinkWithin

Related Posts with Thumbnails