Wednesday, November 10, 2010

வணங்காமுடி பதில்கள் (07-11-2010)





காஞ்சி சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கு தற்போது எந்நிலையில் உள்ளது? - ஜோஸஃப், முளகுமூடு.

குற்ற வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

ஆரம்ப வேகம் இருக்காது; ஆரம்ப விளம்பரமும் கிடைக்காது.

நம் நாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைபற்றி வ.மு விடைப்பகுதியில் முன்னர் விளக்கப்பட்டுளதே?.

நித்தி வழக்குத் தொடர்பாக இதுபோன்ற ஒரு வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் பார்க்கவும். 

இங்கிலாந்திடம் அடிமைபட்டுக்கிடந்த நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிகளில் அடிமையாக இருந்த அமெரிக்கா கலந்து கொள்வதில்லையே? - முகிலன், துபை.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இங்கிலாந்து நுழைந்து, அவற்றை அடிமைப் படுத்தியது  போல அமெரிக்காவில் நுழைந்து அவர்களை அடிமைப் படுத்தவில்லை என்பது ஒரு புறமிருக்க, அமெரிக்கா இப்போது உலகின் ஸூப்பர் பவர். இங்கிலாந்து கூட அமெரிக்கா செல்லும் வழியில்தான் செல்ல வேண்டும். அதனால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், அங்கிள்ஸாம்' கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவருக்கு இந்த விளையாட்டுகளை விட மிகவும் பிடித்தது இராக், ஆப்கான் விளையாட்டுகள்தாம். அங்கிள்ஸாம்  அடுத்ததாக ஈரான் விளையாட்டுக்கு ஆயத்தப்படுகிறார்.


மனிதன் கேட்ட முதல் கேள்வி எதுவாக இருக்கும்? - சந்தியா-திருச்சி.

யாரிடம்?


கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதே. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு உள்ளதா? - ராஜ்மோகன், கோவை.கேரளச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால் ஐந்தாண்டுகளுக்குக் காங்கிரஸ் முன்னணி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கம்யூனிஸ்ட் முன்னணி என மாறி மாறி இரு முன்னணிகளுக்கும் கேரள மக்கள் சம வாய்ப்பளித்து வந்துள்ளதைக் காணலாம்.

இப்போது வந்துள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டுமின்றிக் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் கம்யூனிஸ்ட் முன்னணிக்கு எதிராகவே அமைந்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது வரலாறு அதன் வழியே நடைபோடும் என அனுமானிக்கத் தோன்றுகிறது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக செலவு வைக்கும் சில நோய்களுக்கு இடமில்லையாமே. பின்னர் எதுக்கு இந்த திட்டம்?  - முனியப்பன், முக்கூடல்.
தானம் கிடைத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போது உள்ள இந்தத் திட்டம்,  பொதுவாக அடிக்கடி வரும் நோய்களுக்கானது;. ரூபாய் ஓரிலட்சம் வரை செலவு பிடிக்கும் சிகிச்சைக்கு அரசு உதவும் இத்திட்டத்தை, "ஏன் இந்தத் திட்டம்" என உதாசீனப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

கலைஞர் காப்பீட்டு திட்டம் குறித்து முன்னர் அளித்த பதிலையும் காண்க.

பல மத அடையாளங்களில் காட்சித்தரும் அதிபர் ஓபாமா உண்மையில் யார் கிறிஸ்தவரா, யூதரா, முஸ்லீமா அல்லது லூசிஃபரை(சைத்தான்)
வணங்குபவரா?
- செபாஸ்டீன், சென்னை.
முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்குக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விடை அளிக்கப்பட்டுள்ளது.

தாம் கிருத்துவன் என ஒபாமாவே சொன்ன பிறகு மற்றவர்கள் அதைத்தூண்டித் துருவி ஆராயத் தேவையென்ன?

அவரது மதம் அமெரிக்க அதிபர் பதவியின்  அதிகாரத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துவதில்லை எனும்போது உங்களுக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை?

காஷ்மீர் மக்கள்  விரும்புவது இந்தியாவையா அல்லது பாகிஸ்தானையா அல்லது தனி நாடாக பிரிந்து போகவா? - அம்பிளி, பரைக்கோடு.

காஷ்மீரைப் பாகிஸ்தான் விரும்புகிறது; இந்தியாவும் விரும்புகிறது.

அதனால்தானே இரு நாடுகளும் குட்டி காஷ்மீரைப் பங்கு போட்டுள்ளன?
 
ஆனால், காஷ்மீர் குறித்து இந்தியா வழங்கிய வாக்குறுதியையே காஷ்மீரிகள் விரும்புகிறார்கள்.
  
மற்றொரு வினாவுக்குரிய விடையையும் அருந்ததிராயின் அறிக்கையையும் படியுங்கள்.



வ.மு ஐயா,

திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் வரிச்சலுகை வழங்கப்படுவது ஏமாற்று வேலையா? உண்மையான அக்கறையா?
- சீனுவாசன், மயிலாடுதுறை.முதலாவது!

உண்மையில்லை என்பதன் எதிர்ப்பதம் உண்மை!
பொய்யில்லை என்பதன் எதிர்பதம் பொய்!
பரவாயில்லை என்பதன்  எதிர்ப்பதம்?
- நாகராஜன், குவைத்.வினாவிலேயே விடை உள்ளதே!

நமது அன்றாட உரையாடலில் நூற்றுக்கணக்கான பிறமொழிச் சொற்களை  -- அவை பிறமொழிச் சொற்கள் என அறியாமலேயே -- பயன்படுத்துகிறோம்! அவற்றுள் அரபு, பார்ஸி,  உருது மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே புழங்கப்படுகின்றன. அவற்றை இப்பகுதியில் விளக்கப் புகுந்தால் விடை நீண்டு விடும். அனைத்துத் நிலை வாசகர்களும் குழப்பமின்றி விடைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, “வணங்காமுடி விடை”களிலும் இவை போன்ற பிறமொழிச் சொற்களை விருப்பமின்றியே பயன்படுத்தும் கட்டாயம் உள்ளது..

நீங்கள் வினவியுள்ள "பரவாயில்லை" என்பது "பர்வாஹ் நஹீன்" என்ற  உருதுச் சொல்லின் தமிழ் வடிவம். தமிழறிஞர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வோரும் அதைத் தமிழ்ச்சொல் என்று  நம்பிப் பயன்படுத்துவதால் தமிழர்களும் அப்படியே ஏற்றுள்ளனர்.

"காதல்பிசாசே" எனும் பாடலைப் பாடிய இந்திமொழிப் பாடகன் "ஏதோ செளக்கியம் பருவாயில்லை" என்று பாடியதை, சாலமன் பாப்பையாவின் ஒரு பட்டிமன்றத்தில், பெண்பேச்சாளார்  பாரதிபாஸ்கர் சுட்டிக்காட்டி, பரவாயில்லை என்ற தமிழ்ச் சொல் திரிக்கப்பட்டுவிட்டதாக ஆதங்கப்பட்டிருந்தார். (செளக்கியம் என்பதே தமிழ்ச் சொல் இல்லை என்பது வேறு கதை.). அந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது நகைப்புத்தான் வந்தது. பொதுமேடையில் பேசும் இவர்களின்   மொழி அறிவு பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. முத்தமிழறிஞர் என்று கூறப்படும் கருணாநிதிகூட, "பரவாயில்லை; சரித்திர முக்கியத்துவம், மத்தியசர்க்கார்" என்றெல்லாம் 'தூய தமிழில்' :-) பேசும்போது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?

சரி; உங்கள் வினாவுக்கு வருவோம்.

'சும்மா' என்ற சொல்லைச் "சும்மா" நாம்  இடத்திற்கேற்பப் பொருள் தரும் வகையில் பயன்படுத்துவதுபோல, "பரவாயில்லை" எனும் சொல்லை நாம்  "குற்றமில்லை" அல்லது "கவலையில்லை" அல்லது "மோசமில்லை" அல்லது "தாழ்வில்லை" என இடத்திற்கேற்றவாறு பல பொருட்கள் தரும் வகையில் பயன்படுத்துகிறோம்.! .

நம் மீது ஒருவர் மிதிவண்டியால் இடித்துவிட, "பரவாயில்லை==குற்றமில்லை" என்போம்.

நீங்கள் ஏறவேண்டிய பேருந்து போய்விட்டது என்று சொல்லப்பட்டால், "பரவாயில்லை==கவலையில்லை" என்போம்.

உடல் நலமின்றி இருந்தீர்களே; இப்போது எப்படியுள்ளது? என வினவப்பட்டால், "பரவாயில்லை== தாழ்வில்லை" என்போம்.

படிக்காமல் ஊர் சுற்றிய பையன் தேர்வில் வெற்றி பெற்று விட்டால், "பரவாயில்லையே== மோசமில்லையே" என்போம்.

உருதுச் சொல்லுக்குத் தமிழில் எதிர்ப்பதம் வேண்டினால் கிடைக்காது. உருது மொழியில் தேடினால் கிடைக்கலாம். பரவாயில்லை என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமான "பர்வாஹ்" என்ற  உருதுச் சொல்லுக்கு,  "பொறுப்பு / கவலை/ அக்கறை"  என் இடத்திற்கேற்பப் பொருள் வரும்.

"அப்னே படாஹி கீ பர்வாஹ் கர்" என்றால் உன் படிப்பில் அக்கறை செலுத்து / கவலைப்படு எனப் பொருள்.

"துமே அப்னே கர்வாலோன் கீ பர்வாஹ் க்யூன் நை?" என்றால் உனக்கு வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய பொறுப்பு / அக்கறை ஏன் இல்லை? எனப் பொருள்.
"முஜே  அப்னே கர்வாலோன் கி பர்வாஹ் ஹை" என்றால் எனக்கு வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய பொறுப்பு / அக்கறை இருக்கிறது எனப் பொருள்.

இப்போது, பரவாயில்லை என்பதன் எதிர்ப்பதம் "பர்வாஹ்" என்பது புரிந்திருக்குமே?

நான் ஒரு சிறந்த செய்தியாளர் ஆக வேண்டும் என்றால் என்னிடம் எது இருக்க வேண்டும்? எது இருக்க கூடாது? - பாஸ்கர், திருவையாறு.செய்திகளைச் சூடாக உடனுக்குடன் தர வேண்டும் என்ற முனைப்பும் பொறுப்பும் இருக்க வேண்டும். செய்தி தருவதில்  கற்பனையும் பக்கச் சார்பும் இருக்கக் கூடாது.

செய்தியைச் செய்தியாகத் தரவேண்டும்; உங்கள் கருத்தயும் சேர்த்து எழுதிச் செய்தி விமர்சனமாகத் தரக்கூடாது.
  
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010110711703/vanagamudi-answers-07-11-2010

No comments: