Saturday, November 13, 2010

பசுமை என்னும் தாய்மை



பாட்டினால் விளக்குவேன் “பசுமை”ப் புரட்சி
கேட்டிடு தோழா! கேடுகள் வாரா
காட்டினை அழித்து கட்டிடம் கட்டினால்
வீட்டினுள் காற்று வீசிடுமா என்ன?!

”ஏசி”க் காற்று எல்லார்க்கும் கிட்டிடுமா?
யோசித்துப் பார்த்து உன்னறிவில் பட்டிடுமா?
“ஓசான்” படலமும் ஓட்டை ஆனதால்
சுவாசிக்கக் காற்று சும்மா கிட்டிடுமா?

தென்றல் உன்னைத் தீண்டிட வேண்டும்;
மன்றலில் மலர்கள் மணத்திட வேண்டும்;
குன்றாது மழையும் கொட்டிட வேண்டும்;
நன்றாய் மரங்களை நட்டிட       வேண்டும்

வீட்டில் தோட்டம்; வீதியில் மரங்கள்;
நாட்டில் “பசுமை”; நம்வாழ்வும் செழுமை!!!
உயிர்போல் மதித்து; உரமிட்டு வளர்த்து;
பயிர்களைப் போற்று; “பசுமை”க் காத்திடு

தாய்போல் உன்னைத் தாங்கிடும் மண்ணின்
சேய்போன்ற மரங்களை சேதாரம் செய்தால்
நோய்தீர்க்கும் மூலிகை நொடியில் கிட்டுமா?
ஓய்வின்றி மரங்களை ஒடித்துப் போடாதே

பிறப்பின் துவக்கம் படுத்திட்ட மரக்கட்டை
இறப்பில் உனக்கு இடும்பெயர் “கட்டை”
இடுகாடு சுடுகாடு இரண்டிலும் மரக்கட்டை
கொடும்வெயில் சொல்லும் குளிர்நிழல் மரத்தினையே..!!!!!


 “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
Source : http://www.kalaamkathir.blogspot.com/

No comments: