Tuesday, November 23, 2010

பெண்ணின் வலிமை


வாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.

ஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.

ஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.

அதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.

வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்து பதறிப்போவாள்.

ஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற இனப்பெருக்க வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.

அதே போல ஆண் சுகக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான பொருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.

இவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.

இதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.

ஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.

ஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.

இதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகல் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.

குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.

பணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என்ற சில பெண்களின் அவலநிலை.

ஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்வு பணிக்குப் போகாதிருப்பதே! சில பெண்கள் விதிவிலக்கு.

நன்றி :http://anbudanbuhari.blogspot.comபெண்ணின் வலிமை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails