Wednesday, September 22, 2010





பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் ஞாபக சக்திக் குறைவிற்கு என்ன காரணம்? அதை வளர்த்துக்கொள்வது எப்படி? - கார்த்திகேயன்

பொதுவாக அனைத்து வயதினருக்கும் என்று சொல்ல முடியாது. சிறு குழந்தைகளுக்கு இருக்கும் நினைவாற்றல் அளவை பெரியவர்களுக்கும் முதியவர்களுக்கும் இருக்கும் நினைவாற்றலோடு ஒப்பிட முடியாது.

நினைவாற்றலின் ஊற்றான மூளை வயது ஏற ஏற உடலில் இருக்கும் பிற உறுப்புகளைப் போலவே வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுகிறது. மனித வாழ்விலேயே மூளையின் மிக அதிகமான வளர்ச்சியும் கற்றல் பயிற்சியும் ஏற்படுவது முதல் நான்கு ஆண்டுகளுக்குள் தான். ஓர் அறிவியலாரின் கருத்துப்படி, பதின்ம வயதைத் தாண்டி 20 வயது வரை தான் மனித மூளைக்கு வளர்ச்சி ஏற்படுகிறதாம். அதோடு வளர்ச்சி நின்றுவிடுகிறதாம்.

அதற்குப்பின் மூளையைக் கூராக வைத்துக் கொள்ள என்ன செய்வது? சித்திரமும் கைப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள்? பயிற்சி பயிற்சி பயிற்சி மட்டுமே மூளையைக் கூராக வைத்துக் கொள்ளும்.

மனித மூளை அபாரமான ஆற்றல் கொண்டது என்பதை மறுக்க இயலாது. மனித மூளைக்கு நிகரான ஆற்றல் கொண்ட கணினியை வடிவமைக்க இன்னும் பல்லாண்டுகள் ஆகலாம் அல்லது முடியாமலே போகலாம். அதேவேளை நமது மூளை அதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் பயன்படுத்தாத பகுதிகளைத் தானே அழித்துக் கொள்ளும். இதை Synaptic Pruning என்று சொல்வர்.

பயிற்சி என்று சொல்லிவிட்டதால் அது உடற்பயிற்சியை மட்டுமன்று, மனப்பயிற்சியையும் தான் குறிக்கும். கவலையற்ற வாழ்வு, ஆரோக்கியமான உணவு, நாட்டுநடப்புகள், உலகநடப்புகள் அறிந்து வைத்தல், குறுக்கெழுத்துப் பயிற்சி, ஒமேகா3 அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ளல் இவையெல்லாம் நினைவாற்றலை நீண்ட நாட்கள் தக்க வைக்க உதவும்.



வணங்காமுடியார் நடிகைகளின் தொப்புள்களை ஒப்பிட்டு பதில் அளிப்பதில்லையே ஏன்? - ஆனந்த், சென்னை

இந்நேரம் தளத்தில் திரையுலகம் தொடர்பான செய்திகள் இடம் பெறுவது மிகச் சுருக்கமே!

வினாவில் குறிப்பிட்டிருக்கும் உடல் உறுப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதே.

தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவின் முடிச்சான இதை எந்த அளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவை விடவும் அதிகமாகவே திரையுலகினர் கேவலப்படுத்தி விட்டனர்.

இதில் ஒப்பீடு வேறா? உங்கள் மனம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது?



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆசிரியரின் கை மணிக்கட்டை வெட்டியதாகக் கூறி அந்த அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதும், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவரின் முழங்கையை வெட்டி எடுத்த போது ஆர்.எஸ்.எஸ் மீது எடுக்கப்படவில்லையே, ஏன்? - இஸ்மாயில், களியக்காவிளை

குற்றம் நிகழ்ந்த இடம் கேரளம். அம்மாநிலக் காவல் துறையினரிடம் வினவவேண்டியதை வணங்காமுடியிடம் வினவினால் வணங்காமுடி என்ன செய்ய முடியும்?

உங்கள் வினாவின் நோக்கம், "ஒரு குற்றத்திற்காக ஒரு அமைப்பினர் மீது நடவடிக்கை எடுத்த கேரளக் காவல் துறை, அதே குற்றத்தைச் செய்த மற்றொரு அமைப்பினர் மீது அதேபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லையே; இதுபற்றி வணங்காமுடியின் கருத்தென்ன" என்று இருக்குமானால், நம் நாட்டு நடப்புகளைக் கொண்டு சிலவற்றை அனுமானிக்கலாம்.

ஒரு குற்றம் நிகழ்ந்ததன் பின்னணி, அது அரசியல் காரணமா அல்லது மத , சாதிப் பிரச்சனையா அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரமா அல்லது தனி நபர் விரோதமா, அதனால் சமூகங்களுக்கிடையே மோதல் வருமா, சட்டம் ஒழுங்கு சீர்குலையுமா, அக்குற்றம் நிகழ்ந்தபோது புகார் தந்தவர்கள், வழக்குப் பதியப்பட்ட குற்றப் பிரிவுகள், வழக்குப் புனையப்பட்ட விதம், அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் விருப்பு/ வெறுப்பு, அந்த அமைப்பின் அரசியல் மற்றும் சமூகச் செல்வாக்கு,ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு போன்ற பல்வேறு அம்சங்கள் கலந்திருப்பதால் ஒரே நடவடிக்கையை இரு அமைப்பினர் மீதும் கேரளக் காவல்துறை எடுத்திருக்க முடியாது.

முன்னது மத நிந்தனையால் விளைந்த செயல்; பின்னது தனி நபர் விரோதம் (பெண்) என்பதே ஊடகங்கள் தந்த செய்தி.

நாம் சொன்ன காரணங்கள் கேரளக் காவல்துறயினருக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலக் காவல்துறையினருக்கும் பொருந்தும்.



வணங்காமுடி சார், நீங்க நோன்பு கஞ்சி குடித்ததுண்டா? - சுப்பிரமணி, நாகர்கோவில்

ஆம்!

அரசியல்வாதிகள் எல்லோருமே நோன்புக் கஞ்சி குடிப்பதைக் கடமையாக்கிக் கொண்டபோது ஊடகவியலாளருக்கு ஏன் விலக்கு?



திமுக, அதிமுக அல்லாத கூட்டணிக்குத் தலைமை தாங்குவதற்கு தயார் என்று விஜகாந்த் அறிவித்திருப்பதைப் பற்றி ... - சுரேஷ் குமார்

அவருக்கு ஆசை இருக்காதா என்ன?


ராமர் பாலமும் வேண்டும், சேது சமுத்திரம் திட்டமும் வேண்டும். வணங்காமுடி கருத்தென்ன? - முருகேசன், ராமநாதபுரம்

கடல்சார் அறிவியல் அறிஞர்களும் பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முயலும்போது, பாஜக மற்றும் அஇஅதிமுக தலைவர்களால் ராமர்பாலம் பெயர் கூறி முட்டுக்கட்டை இடப்பட்டது.

முதலில் அறிவுப்பூர்வமான வாதங்களுடன் நீதிமன்றத்தில் மனுச் செய்த மத்திய அரசு அந்தர்பல்டி அடித்தபின் உங்கள் வினாவுக்கு வலுவில்லை. முதுகெலும்புள்ள வேறு மக்கள் அரசு வந்தால் நம் பிளைகள் / பேரர்கள் காலத்தில் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேறலாம்.

Source : http://www.inneram.com/2010092110719/vanagamudi-answers-21-09-2010

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

No comments: