Monday, September 27, 2010

அவர்கள் என்னை மாற்றி விட முடியாது!

by எஸ்.ஏ.மன்சூர் அலி.M.A.,

தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை "பொறுப்பு" (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்!  .
      ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது! 
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான். மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் - தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)   
     அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா -  என்பது தான் அந்த சந்தேகம்.

     இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், "உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?" என்று கேட்பது வழக்கம்.
     இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.
     பொறுப்பு என்பதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கின்றது.
     இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது  - "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது - பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஆகும். இன்னும் நாணமும் - இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)    
 
     பாதையில் கற்களும் முற்களும் கிடக்கின்றன.  பொறுப்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? பிறரைக் குறை சொல்லத் துவங்கி விடுவார்கள். பின்பு போய் விடுவார்கள் அங்கிருந்து! 

     ஆனால் பொறுப்புணர்ச்சியுள்ளவன் என்ன செய்கிறான்? அவற்றைப் பார்க்கின்றான். உடனே அப்புறப் படுத்துகின்றான். வேலை முடிந்து விடுகிறது. அவன் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில்லை. உடனே களத்தில் இறங்கி விடுவான். இதற்குப் பெயர் தான் Initiative என்பது.  
     இப்போது "உங்களில் ஒவ்வொருவரும்" நபி மொழியையும் "இறை நம்பிக்கை" நபி மொழியையும் ஒரு சேர சிந்தித்துப் பாருங்கள்.
     இஸ்லாத்தில்  இறைநம்பிக்கையும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது! (ஏனெனில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஈமானின் கிளைகளில் ஒன்று).
     அது போல - தலைமைத்துவமும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது!
 
     எனவே இஸ்லாத்தில் இறைநம்பிக்கை - தலைமைத்துவம் - பொறுப்பு மூன்றுமே இணைந்து நிற்கிறது!     

     பொறுப்பு என்பதன் மூன்றாவது பரிமாணம் - ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் தோல்விக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 
     வெற்றிகரமான ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர். அவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப் பட்டது. அவர் சொன்னாராம்: எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் - வென்றார்கள் என்பேன். ஆனால் என்னால் பயிற்சியளிக்கப் பட்டவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன்."
     ஆனால் - இன்று தோல்விகளுக்கு, பிரச்னைகளுக்கு, இழப்புகளுக்கு - பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.      

     கண்ணா மூச்சி விளையாட்டில் - கதவு திறந்திருந்த ஒரு லிஃப்ட்டில் ஒளிந்து கொள்ள ஒரு சிறுமி பெட்டியில் காலடி வைக்க - அங்கே அது இல்லாததால் (?) - கீழே விழுந்து ஒரு சிறுமி இறக்கிறாள் - காரணம் - நீண்ட நாட்களாக சரி செய்யப் படாத ஒரு யந்திரக் கோளாறு. யார் பொறுப்பு?

     21 வயது நிரம்பிய ஒர் பெண். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு துப்புரவு லாரி இடித்து இறந்து போகிறாள்! லாரியை ஓட்ட வேண்டிய ஓட்டுனர் - வண்டியைத் தகுதி இல்லாத இன்னொருவரிடம் கொடுத்து  ஓட்டச் சொன்னதால் இந்த  விபத்தாம். - யார் பொறுப்பு? 
     பொறுப்பு என்பதன் நான்காவது பரிமாணம் - "நான் யாருக்கு பதில் சொல்லிட வேண்டும்?" என்ற கணக்குப் பிரச்னை. அதாவது Accountability.
     இந்தியா உட்பட பல நாடுகளில் - பெண்சிசுப் படுகொலைகள் (female infanticide) கோடிக் கணக்கில் நடக்கின்றனவாம். ஒரு அறிஞர் கேட்டார்: இவர்கள் "நாம் யாருக்கும் பதில் சொல்லிடத் தேவையில்லை என்று நினைத்தனால் தானே இத்தனை கொடூரமான படுகொலைகள்?
     இந்த நிலை ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு இல்லையே?
     "நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்!" (அல் குர் ஆன் 17: 31)
     எந்த ஒரு செயல் குறித்தும் - அது குறித்து - இறைவனுக்கு முன்னால் நாம் விசாரிக்கப் படுவோம் என்று அஞ்சுகின்ற ஒரு இறை நம்பிக்கையாளனே பொறுப்பான தலைவனாக விளங்கிட முடியும்.
     போரில் தன் ஒரே மகனையும் இழந்து விட்டு, மதினாவுக்கு அருகில் ஒரு குடிலில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார் என்பது கலீஃபா அபூ பக்ர் சித்தீக் அவர்களின் கவனத்துக்கு வருகிறது. அவருக்கு இனி மேல், இறைவனுக்கு அடுத்தபடியாக தாமே ஆதரவாக இருக்க மனதில் உறுதி கொள்கிறார்கள். இதன் படி தினமும், அதிகாலையில் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று அதனை சுத்தம் செய்வதோடு, அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் வழங்கி விட்டு வருவது அவர்களின் அன்றாட அலுவல் ஆகி விட்டது.
     இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி, உமர் (ரலி) அவர்களுக்கும் எட்டுகிறது. ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று அவர்கள் பார்த்த போது அந்த மூதாட்டிக்குரிய தேவைகள் முன்னரேயே நிறைவேற்ற்ப் பட்டிருப்பது தெரிய வருகிறது.
     யார் அது? - என்ற கேள்வி - உமர் (ரலி) அவர்களுக்கு. மறு நாள் சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் அவர்கள் அந்தக் குடிலின் பின்புறம் மறைந்து கவனித்த போது - அது அபூ பக்ர் அவர்கள் தாம் என்பதை அறிந்து வியக்கின்றார்கள்!
     இருவருக்கும் - என்ன ஒரு பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா? இங்கே நுணுக்கமாக ஒரு விஷயத்தைக் கவனித்திட வேண்டும். அபூ பக்ர் சித்தீக் அவர்கள் தாம் கலீஃபாவாக ஆவதற்கு முன்பேயே - ஏழைச் சிறுமிகளின் ஆடுகளுக்குப் பால் கறந்து கொடுத்தவர். இரண்டாவது கலீஃபாவாக வருவதற்கு முன்னரேயே உமர் அவர்கள் அதிகாலையில் மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்திட ஓடுகிறார்.
     இது எதனை உணர்த்துகிறது?
     சிலர் சொல்வார்கள். எனக்குப் பதவி கொடுக்கப் பட்டால் - இதனைச் செய்வேன் அதனைச் செய்வேன் என்று. ஆனால் பதவிக்கு வந்ததும் எல்லாம் காற்றில் பறந்து போய்விடும்.
     பதவிக்கு வந்தால் பொறுப்பேற்பேன் என்பது வெறும் வாய்ச்சொல். பொறுப்பேற்றால் பதவி தானாக வரும் என்பது தான் இஸ்லாமிய நியதி.
     சரி, அப்படிப் பட்ட பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்களா?

     கண்ட கண்ட இடத்தில் குப்பைகளைப் போட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறும் பொது மக்கள், மாணவர்களைக் குறித்த அக்கரையற்ற ஆசிரியர்கள், சுற்றுப் புறச் சூழல் குறித்த அக்கரையற்ற உற்பத்தியாளர்கள், உணவில் கலப்படம் செய்து விற்கும் கல் நெஞ்ச வியாபாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்தை மீறிச் செயல் பட அனுமதிகின்ற அதிகாரிகள், நோயாளிகளை ஏமாற்றுகின்ற மருத்துவர்கள், அரை குறை கட்டிடங்கள் கட்டித் தருகின்ற பொறிஞர்கள்.... 

     - இப்படி சமுகத்தின் எல்லா அங்கங்களும் பொறுப்பற்ற மனிதர்களால் நிரம்பி வழிந்தால் - பொறுப்புள்ள தலைவர்கள் நமக்கு எங்கே கிடைப்பார்கள்? 
     நீதிபதி ஒருவர் சொன்னாராம். "நீதிபதிகள் நேர்மையாக நடந்திட வேண்டும் என்று பெரிதும் எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால் நாடே "பாலைவனமாக" காட்சியளிக்கும் போது நீதித்துறை மட்டும் எப்படி "சோலைவனமாக" விளங்கும்?
     பாலைவனத்தைச் சோலை வனமாக்கிட முடியுமா?
     முடியும்! ஆனால் அது நமது கைகளில் தான் உள்ளது!
     ஏன் தெரியுமா?

     "எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ், அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!" (அல்-குர் ஆன் 13: 11)

     எல்லாரும் மாறினால் தான் நானும் மாறுவேன் என்பவன் பொறுப்பற்றவன்.
     ஆனால் இவரைப் பாருங்கள்.
    1997 - ல் அமெரிக்கா, ஈராக்கின் மீது பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த போது அதற்கு வன்மையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிய ஒரு அமெரிக்கக் குடி மகன் - வெள்ளை மாளிகை முன்பு எரியும் மெழுகு வர்த்தி ஒன்றுடன் தினமும் நின்று கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாராம். ஒரு நாள், மழையையும் பொருட்படுத்தாமல் மெழுகு வர்த்திக்கு ஒரு குடையையும் பிடித்துக் கொண்டு நின்றாராம் அவர். இதைப் பார்த்து வியந்த வெள்ளை மாளிகை சேவகர் ஒருவர் அவரிடம் கேட்டாராம்:
     நீங்கள் ஒருவர் இப்படி நின்று கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று எண்ணுகிறீர்களா?
     அதற்கு அவர் தெரிவித்த பதில்:
     "நான் அவர்களை மாற்றி விடலாம் என்பதற்காக இங்கு நிற்கவில்லை. மாறாக என்னை அவர்கள் மாற்றி விட முடியாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் - இங்கு நான் நிற்கிறேன்!"

Source : http://counselormansoor.com/index.php?option=com_content&view=article&id=86:1-&catid=11:leadership&Itemid=15
-------------------------------------
 
 சகோதரர்  எஸ்.ஏ.மன்சூர் அலி. நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க." 

No comments: