Friday, September 17, 2010

இஸ்லாமியச் சட்டம் (11)

இஸ்லாமியச் சட்டம் (11)

நீடூர் A.M.சயீத்
மறுக்கப்படும் மனித உரிமைகள்
மனித உரிரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.
பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.
ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.
மெளலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்கள் உலகிலுள்ள மதங்கள் குறித்து அதைப் பற்றி சிந்தித்து நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. மதத்துக்கு மதம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. ஒரே குறிக்கோளுக்கு பல வழிகள். அந்த வழிகளில் சிறந்தது உங்களிடம் இருக்கிறது. அதனை முறைப்படி பின்பற்றுங்கள். அது போதும் அந்த வேறுபாடுகளையயல்லாம் அழிக்க நினைத்தால் அது இயலாது, என்று சொன்னார்கள். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பல ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது. எந்த அளவிற்கு அத்தண்டனை கடினமாக்கப்படுமோ அந்த அளவு மனித உரிமைகள் அதிகம் பேணப்படுகிறது என்று பொருள். இக்கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும் அவைகள் மூலம் மனித உரிமைகள் அதிகம் பேணப்பட்டது, பேணப்படுவது போன்ற வேறு சட்டங்கள் மூலம் பேணப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நாட்டில் எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் சிறைகளில் சிறை அதிகாரிகளாலும், சக கைதிகளாலும், பெண் கைதிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். 1987ம் ஆண்டு பெண் கைதிகள் அமெரிக்காவில் ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் 1985ம் அண்டில் இருந்ததை விட இது மூன்று மடங்கு அதிகம். இங்கிலாந்து மனித உரிமைக் கழகம் இது பற்றி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பெண் காவலர்கள் குறைவு என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நம்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வுத்துறை இயக்குனர் கார்த்திகேயன் 02.03.1999ல் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது ஒரு வருடத்திற்கு மனித உரிமை குற்ற முறையீடுகள் 40 ஆயிரம் வருவதாகச் சொன்னார். கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பேரிலும் புகார்கள் அதிகமாக வருவதாகச் சொன்னார். குற்றம் செய்பவர்களை தண்டிப்பது என்பதை விட திருத்துவது என்பது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அவர் அறிவுரை கூறினார். புலனாய்வுத் துறை என்பது ஒரு புனிதமான கடமைப் பொறுப்பு என்பதால் அது களங்கப்படாமலிருக்க அரசியல்வாதிகளின் தொடர்போ குறுக்கீடோ இல்லாதிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்துலக பொது சபை 10.12.1948
(General Assembly) உலகளாவிய தேசிய ஒருமை உறுதிமொழி பறையறிவிப்பை ஏற்றுக் கொண்டது. 30 விதிகளைக் கொண்ட அந்த அறிவிப்பு அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான தேசிய உரிமைப் பற்றிய விதியை அறிவித்தது. தற்போதிருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் 56வது விதியும் மனித உரிமையைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்திய அரசியல் நிர்ணயசாசனப்படி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தங்களுடைய நியாயங்களையும் உரிமைகளையும் வலியுறுத்தவும் பெரும்பான்மை வகுப்பினர் அறிந்தோ அறியாமலோ விளைவிக்க முற்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கவும் தங்களுடைய மதம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதை செயல்படுத்தாத சமுதாய சூழ்நிலை உருவானது.
மனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்
1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)
2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள்
-1994, 3. மாநில மனித உரிமைகள் பொறுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,
4. Universal Declaration of Human Rights - 1948.5. Basic Internation Human Rights Instruments. ஆகியவை அரசாங்கத்தில் இயற்றப்பட்டன.
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் 3வது, 4வது பகுதியின் முன்னுரை,
Universal Declaration of Human - 1948 என்பதன் அடிப்படையை வைத்தே, அமைக்கப்பட்டிருந்தது. இந்திய குடியரசு சட்டம் 25(1)ல் பொது அமைதிக்கும் ஒழுக்கத்துக்கும், சுகாதாரத்துக்கும் இப்பிரிவின் மற்ற ரத்துக்களுக்கும் உட்பட்ட முறையில் அனைவருக்கும் தங்கள் மனசாட்சிபடி நடக்கவும் தங்களுக்கு விருப்பமான மதத்தை தாராளமாக அனுசரிக்கவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு.
சீக்கியர்கள் கிர்பான வைத்துக் கொள்ள தடையில்லை என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொதுத்துறையிலோ தனியார் துறையிலோ பணியாற்றினாலும் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தலைப்பாகை தாடி போன்றவற்றை கடைபிடிக்காமலிருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. மிக முக்கியமான சுன்னத்துகளைக் கூட அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவதில்லை. அது பற்றி சங்கை மிகு மார்க்க அறிஞர்கள் அறிவுரை கூறினால்
''சுன்னத்துதானே'' என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள். பலமுறை ஹஜ்ஜுக்கு சென்ற சில சகோதரர்களிடத்திலும் சுன்னத்தான தாடியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி போட்டு தொழுவதுகூடி தேவையில்லை என்று சொல்லும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையிலோ இன்னபிற. உயர்ந்த அரசுப் பணியிலோ அபூர்வமாக நியமிக்கப்படும் முஸ்லிம் சகோதரர்கள் நிரந்தரமாக தாடி வைப்பதற்கோ, தொப்பி அணிவதற்கோ முடியாமல் பெரும்பாலும் தடுக்கப்படுகிறார்கள்.
1957ம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனர், முஸ்லிம்களைத் தவிர மற்ற காவல் அதிகாரிகள் தாடி வளர்க்க அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். முஸ்லிம்கள் வைக்கும் தாடியும் ஒழுங்கான முறையோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
07.08.1986ம் ஆண்டு அப்போதைய நீதியரசர் மோகன் தன்னுடைய தீர்ப்பில் 1957ம் ஆண்டு ஆணையில் திருத்தம் கொடுத்து நான்கு மாதங்கள் மட்டுமே அனைத்து மதத்தைச் சார்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தாடி வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தின்படி தாராளமாக நடக்க இந்திய குடியரசுச்சட்டம் முழு உரிமை அளித்த பின்பும் இங்கு மனித உரிமை மீறல் தென்படுகிறது. சீக்கியர்களை விட பன்மடங்கு நாம் பல்கிப் பெருகி இருந்தும் கூட இந்த உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்க இதுவரை துணியவில்லை. நமது துணிவின்மைக்கு மார்க்கக் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் அனைவரும் பின்பற்றாமல் இருப்பதும ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்க்கையின் நட்சத்திரங்கள் எரிந்து விழலாம். ஆனால் உயிரினும் இனிய நம் ஈமானின் நம்பிக்கைள் எரிந்து விழக்கூடாது.
திருடினால்...
இந்தியாவில் உள்ள அனைத்து சமய இனமக்களுக்கும் பொதுவான ஒரு சட்டவியல் குற்றத் தொகுப்பு அவசியம் என்ற கருத்தின் அடிப்படையில் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.
511 பிரிவுகளைக் கொண்ட இத்தண்டனைச் சட்டத் தொகுப்பு 378வது பிரிவிலிருந்து 382வது பிரிவு வரை சொத்துக்களைப் பற்றிய குற்றங்கள் : திருட்டு என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 17வது அத்தியாத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் 379
-வது பிரிவின்படி ''திருட்டுக்குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 380வது பிரிவின்படி குடியிருப்பதற்காக பயன்படும் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் 381வது பிரிவின்படி ஒருவரிடம் பணியாளராக அல்லது எழுத்தாளராக பணிபுரியும் ஒரு நபர், தம்முடைய முதலாளியின் பொருளைத் திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
382வது பிரிவின்படி திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிக் கொள்வதற்காக அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றிற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி மூன்றாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு தண்டனை ஏற்படுத்தப்பட்ட போதிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற சிறைச்சாலைக்கு செல்பவன் சிறைப் பறவையாக வெளிவருகின்றானே தவிர அவன் திருடுவதை நிறுத்தவில்லை.
பழந்தமிழ் நாட்டில் திருட்டுக் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் விதித்து வந்தார்கள். முதலில் திருடியவர்களுக்கு சில நேரங்களில் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு கையை துண்டிப்பது திருட்டுக்குற்றத்தின் தண்டனையாக இருந்தது. இரண்டாவது முறை திருடினால் ஒரு காலைத் துண்டித்தார்கள். இதனால் பழந்தமிழ் நாட்டில் திருட்டுக்குற்றங்கள் குறைவாக இருந்தன. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி என்ற வேறுபாடு இல்லாமல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் அமுலில் இருந்தது. (இது இஸ்லாமிய சட்டத்திற்கு நெருக்கமானது என்பது தெளிவான வியம்) குற்றத்திற்கான தண்டனை இஸ்லாமிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற மற்ற உலக நாடுகளிலும் கடுமையாக இருப்பதால் அங்கு குற்றப்பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.
டான்லால் தாஸ்வானி என்ற அறிஞர்
''குற்றச் செயலுக்கான நீதி இஸ்லாமிய சட்டத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எல்லாக் காலத்திற்கும் சமமான தண்டனையே அது வழங்குகிறது. சவூதி அரேபியா மன்னராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாத நபராக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை அனைவருக்கும் சமமாகவே இருக்கின்றது'' என்று கூறி இருப்பது நினைவு கூறத்தக்கதாகும். உழைப்பை வலியுறுத்தி, உழைக்கும் கரங்களை மதிக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனுடைய கரங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. உழைக்கும் கரம் : -இதை இஸ்லாம் மதிக்கின்றது.
2.பலனற்று இருக்கும் கரம் : இதனைக் கொண்டு எப்படி தொழில் செய்யலாம் என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது.
3. பலஹீனமான கரம் : இதற்கு இஸ்லாம் உணவளிக்கின்றது.
4. சமூகத்தில் கொடுமையாக விளையாடும் கரம் : இதைத் துண்டித்துவிட ரீஅத் சட்டங்களை பிறப்பிக்கின்றது. அதற்காக கண்மூடித்தனமாக கையை வெட்டக் கூறவில்லை. ஒருவன் திருடினான் என்று குற்றவாளிக் கூண்டிலல் நிறுத்தப்பட்டடால் சாட்சியங்களோடு அது நிரூபிக்கப்பட வேண்டும். நியாய விரோதமாக கரத்தை வெட்டினால் 50 ஒட்டகையை இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இச்செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடை யோனுமாக இருக்கிறான் (அல்குர்ஆன் 5:38) என திருக்குர்ஆன் வசனம் திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை பற்றி தெளிவாகக் கூறுகிறது.
''உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு ஜீவராசியும் பூமியில் இல்லை'' என்று திருமுறையில் (11:6) தூயவன் அல்லாஹ் வாக்களிக்கின்ற போது மனிதன் வறுமைக்கு அஞ்சியும், பொருளாசை காரணமாகவும் திருடும் தீயசெயலில் ஈடுபடுவது முறையாகுமா? ஒரு பொருள் திருடப்படுவதன் காரணமாக பொருளை இழந்தவனுடைய மன உளைச்சலும் பேரிழப்பும் மிக அதிகமாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நம் கவனத்தில் கொள்வோம்.
திருமணமான ஒரு பெண் தனிமையில் ரயிலில் பயணம் செய்தாள். திருடன் ஒருவன் அப்பெண்ணின் பணப்பையைத் திருடிச் சென்றுவிட்டான். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தபோது, இத்துயரச் சம்பவத்தை அப்பெண் விளக்கிச் சொல்லியும் அப்பெண்ணை சிற்றூரின் ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். சமூக விரோதிகள் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு மிருகவெறி மேலோங்கி அப்பெண்ணை கற்பழித்து விட்டார்கள். கற்பிழந்தபின் வாழ்வெதற்கு என்று அந்தப் பெண் ஏங்கி தற்கொலை செய்து கொண்டாள்.
திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது காட்டு மிராண்டித்தனம் என்று கூச்சலிடுகின்ற விவேகமில்லாத விமர்சர்கள் இந்த நிகழ்ச்சியை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு ரயில் பயணச்சீட்டுத் தானே திருடப்பட்டிருக்கிறது! ஆனால் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரல்லவா பலியாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கவனங்களினால்தான் திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் விதிக்கிறது.
உன்னுடைய குழந்தை என்னுடைய சகாக்களிடம் அகப்பட்டுக் கொண்டது. எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுத்திப் பொருள்பறித்த குற்றமாக கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால் தான் இந்தக் குற்றம் கொள்ளை ஆகும்.
390வது பிரிவில் கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பறித்தல் என்பது பற்றிய மேற்குறிப்பிட்ட உதாரண நிகழ்ச்சி தரப்பட்டிருக்கிறது.
பொதுவாக அசையும் பொருள்களை அனுமதியின்றி எடுக்கும் போது அது திருட்டுக்குற்றம் என்று சொல்லப்பட்டாலும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அனுமதியின்றி உபயோகித்தாலும் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
தமிழ்நாட்டில் 1985ம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாரியம், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதற்காக D.K.K முதலியார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 378வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றம் இல்லையயன்றாலும் இந்திய மின்சாரச் சட்டம் 1901ன் 39வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 379வது பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (T.N.Electricity Board - V.D.K.K. Mudaliyar 1985 Cr.II 561(Mqd)
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதை திருட்டு என்று கூறுகின்றோம். உதாரணமாக ஒருவருடைய தோட்டத்தில் உள்ள மரத்தை ஒருவன் வெட்டுகிறான். நாணயமற்ற முறையில் அப்படி வெட்டப்பட்ட மரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் செயல்பட்டால் மரம் வெட்டிய உடனேயே திருட்டுக் குற்றம் நிறைவேறி விடுகிறது.
ஒரு நபருடைய நூலகத்திலிருந்து அவருடைய சம்மதம் பெறாமலும் அவர் அங்கு இல்லாத போது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதனைப் படித்துவிட்டு திரும்பத் தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் புத்தகம் எடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தை அப்படி எடுப்பதற்கு நண்பர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது திருட்டுக் குற்றம் ஆகாது.
திருட்டுக் குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும் ஒருவன் தனது தாங்க முடியாத பசிக்காகவோ, இன்றியமையாத தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால் பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று ரீஅத் சட்டம் கூறுகிறது.
நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டக் கூடாது என்று உலகப் புகழ்பெற்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். மெத்தப் படித்தவர்களும் சில நேரங்களில் நவீனகால சூப்பர் மார்க்கெட் என்று சொல்கிற பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருளை திருடியிருக்கிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. லண்டன் மாநகரில் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இத்தகைய குற்றத்தைச் செய்ததை அங்குள்ள தொலைக்காட்சி காட்டிக் கொடுத்துவிட்டது.
இத்தகையவர்கள் இளம் வயதில் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளும் போத பெற்றோர் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதன் விபரீத விளைவுகள்தான் இது.
வீட்டில் நம் பிள்ளைகள் திருடும் போது சிறு பிள்ளை என்றும் நம் வீட்டில்தானே எடுத்தான் என்றும் காரணம் கூறி கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம்.
இப்பழக்கம் அவர்களிடம் ஊடுருவி பெரிய வயதான பின்னரும் எவ்வளவுதான் வசதி பெற்றாலும் அடுத்தவர்களின் பொருள்களைத் திருடுகிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களை மட்டமாக மதிப்பதைக் காண்கிறோம், என்று வேலூர் மல்லானா .கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

No comments: