Thursday, September 9, 2010

இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி

முதலமைச்சர் கருணாநிதி இன்று ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில்,  ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம்.  இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.
ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.
இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.
இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
Source : http://www.inneram.com/2010090910503/karunanidi-says-islam-is-like-peeled-jackfruit

No comments: