நீங்கள் தொடர்ந்து முன்னேறித்தான் ஆகவேண்டும்! |
வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும்? எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும்? இதோ அந்தப் பட்டியல். 1. வேண்டும் தனித்தன்மை! பிஸினஸ் ஆரம்பிக்கும்முன் எப்படிப்பட்ட ஒரு தொழிலை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள் என்பதை ஆழமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் தொடங்கும் பிஸினஸ் தனித்தன்மை உடைய தொழிலாக இருக்கிறதா என்று பாருங்கள். மனிதன் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவன். ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவரிடத்தில் ஒரு தனித்தன்மை ஜொலிக்கவே செய்கிறது. ஆனால் பிஸினஸ் என்று வரும்போது நமக்கிருக்கும் தனித்தன்மையை சுத்தமாக மறந்துவிட்டு, பரிட்சை எழுதும் மாணவனைப் போல சுற்றும்முற்றும் பார்த்து 'காப்பி' அடிக்கிறோம்.'அந்த ஏரியாவில் நிறைய டீக்கடை இருக்கிறது. அங்கு இருக்கிறவர்கள் நிறைய டீ குடிப்பார்கள் போல!' என்று நினைத்து நீங்களும் ஒரு டீக்கடை திறந்தால் அது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும். ஏற்கெனவே ஒரு பிஸினஸூக்குப் போட்டியாக இன்னொன்றை நீங்கள் ஏன் தொடங்க வேண்டும்? போட்டியே இல்லாத ஒரு புதிய பிஸினஸை ஏன் நீங்கள் ஆரம்பிக்கக்கூடாது? அப்படி ஆரம்பித்தால்தான் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு நிலையான லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். 2. முதலில் பணம், பிறகு பிஸினஸ்! சிலர் ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் தேவையான அளவு பணத்தை வைத்துக் கொள்ளாமலே தொழிலை நடத்தப் பார்க்கிறார்கள். விளைவு...? மூலப் பொருட்களை வாங்க, உற்பத்தி செய்ய, மார்க்கெட்டிங் செய்ய, ஆட்களுக்கு சம்பளம் தர என எல்லாவற்றுக்கும் பணத்தைத் தேடி அலைய வேண்டியதாகிவிடுகிறது. அவசரத்துக்கு அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். நிறைய கடன் வாங்கியபிறகு பிஸினஸ் கொஞ்சம் சுணக்கம் கண்டாலும் கடன்காரர்கள் நம் கழுத்தை நெறித்துவிடுவார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, போதிய அளவு பணம் இல்லாமல் பிஸினஸில் ஈடுபடாதீர்கள். உலகப் பிரசித்திப் பெற்ற பிஸினஸ் லீடர் ஹெரால்ட் ஜெனீன், பணம் இல்லாமல் இருப்பதே ஒரு முதலாளியோ அல்லது அவரின் மேனேஜரோ செய்யும் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்கிறார். இதற்காக, 'என்னிடம் பணமில்லை, எனவே நான் எப்படித் தொழிலை தொடர்வது' என்று மலைக்க வேண்டாம். பணம் உங்களுடையதாக இருக்கலாம்; உங்கள் கூட்டாளியின் பணமாக இருக்கலாம். வாடிக்கை யாளர்களிடமிருந்து வசூல் செய்ததாகவும் இருக்கலாம். பிரச்னைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் உங்கள் கையில் பணம் இருக்கவேண்டும். நீங்கள் செய்யும் பிஸினஸில் அதிக லாபம் வரலாம்; ஆனால் கையில் போதிய பணம் இல்லை என்றால் உங்களால் நீண்ட நாளைக்கு பிஸினஸில் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் உங்கள் பிஸினஸில் லாபம் இல்லை என்றாலும், கையில் பணம் இருந்தால் நீண்ட நாளைக்கு உங்களால் பிஸினஸ் செய்யமுடியும். உங்களிடம் இருக்கும் பணப்புழக்கமே (cash flow) உங்கள் நம்பகதன்மையை அதிகரிக்கச் செய்யும். வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் உங்களுக்கு இன்னும் கடன் கொடுக்க முன்வரும். 3. பணப்புழக்கம் மட்டுமே யதார்த்தம்! பிஸினஸ் உலகில் ஒரு பிரபலமான சொற்றொடர் உண்டு. 'Topline is vanity, Bottomline is sanity, but cashflow is reality. நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் நிறுவனத்தின் சொத்து லேசில் கரையாதபடிக்கு இருக்கலாம். இத்தனை இருந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். அது மட்டுமே யதார்த்தம், மற்றதெல்லாம் மாயை. பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது. நல்ல, சீரான பணப்புழக்கத்துக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கவனமாக பணத்தை வசூலிக்கவேண்டும். ஆனால் இது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. நீங்களும் சரி, அக்கவுன்ட் டிபார்ட்மென்ட்டில் இருக்கும் உங்கள் ஊழியர்களும் சரி, வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கும் போது புன்னகை தவழும் முகத்தோடு இருக்கவேண்டும். பணத்தை வாங்கும்போது நீங்கள் கடுகடுத்த முகத்தோடு இருந்தால் நல்ல வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். 4. வாடிக்கையாளர் தொடர்பு! ஒரு நல்ல பிஸினஸ்மேனுக்கு அழகு, வாடிக்கை யாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அந்தச் சேவையையோ அல்லது பொருளையோ கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு வேறு இடத்துக்குப் போகவே மாட்டார்கள். புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பது லாபகரமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 5. எண்களைக் கவனியுங்கள்! உங்கள் நிறுவனத்தின் எண்களை எப்போதும் துல்லியமாக ஞாபகம் வைத்திருங்கள். விற்பனை, லாபம், கடன், நிறுவனம் எப்போது பிரேக் ஈவன் (Break even) அடையும் என்பது போன்ற விஷயங்களை குழப்பமில்லாமல் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் பிஸினஸ் எப்போது பிரேக் ஈவன் அடையும் என்று உங்களுக்குத் தெரிந்தால்தான் தேவையான பணப் புழக்கத்தை உங்களால் கொண்டு வரமுடியும். பணப்புழக்கம் இருந்தால்தான் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் பிரேக் ஈவன் அடைவது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கக்கூடாது. அது குறைந்த பட்ச இலக்கு. லாபமும் நஷ்டமும் இல்லாத ஒரு நிலைதான் அது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நீங்கள் தொடர்ந்து முன்னேறித்தான் ஆகவேண்டும். 6. ஆலோசகர்களை உருவாக்குங்கள்! உங்கள் நலன் விரும்பும் ஆலோசகர்களையும் நலன் விரும்பிகளையும் அதிகரித்துக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர் களிடம் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது சம்பந்தமாக பயனுள்ள கருத்துக்களை அவர்கள் சொல்வார்கள். சில சமயம் நல்ல வாடிக்கையாளர்களைக்கூட உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்போது அவர்கள் உங்களுக்குப் பண உதவிகூட செய்ய வாய்ப்பிருக்கிறது. நம்புங்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை நிச்சயம் ஊக்கப்படுத்து வார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். ஒருவேளை அவர்கள் இல்லை என்று சொன்னால்கூட அதனால் பெரிய பாதிப்பு உங்களுக்கு வந்துவிடாது. 7. வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தியுங்கள்! உங்கள் பார்வையில் பிஸினஸை நடத்தாதீர்கள். எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள். உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் ஒரு இமேஜ் இருக்கும். அதன்படிதான் பிஸினஸை நடத்துவேன் என்று நீங்கள் சொன்னால் வாடிக்கையாளர்கள் உங்களை வேறு விதமாக பார்ப்பார்கள். நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம். 8. திட்டமிடுங்கள்! ஐந்தாண்டுகளுக்கு பிறகு உங்கள் நிறுவனம் எப்படி இருக்கவேண்டும் என்று இப்போதே திட்டமிடுங்கள், கனவு காணுங்கள். இந்த கனவு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் கனவை உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த கனவு நோக்கிச் செல்ல அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் கனவு யதார்த்தத்தில் நடக்காது என்று சொன்னால் அதற்காக கவலைப்படாதீர்கள். பிஸினஸ் உலகில் எல்லா கனவுகளும் சாத்தியம்தான். 9. திரும்பிப் பாருங்கள்! நீங்கள் கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள். அதாவது, உங்கள் கணக்கு வழக்குகளைத் திருப்பிப் பாருங்கள். இதை எப்போதும் தவிர்க்காதீர்கள். அதேபோல கெட்ட செய்திகளை கேட்பதைத் தவிர்க்காதீர்கள். எல்லா கெட்ட செய்திகளும் தற்காலிகம்தான். ஆனால் இந்த கெட்ட செய்திகளை கேட்டு, சரி செய்யாமல் இருப்பதுதான் உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் செய்யும் கெட்ட காரியம். 10. ஒரே சிந்தனை! மற்ற பிஸினஸ்களில் இருந்து உங்கள் பிஸினஸை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த தனித்தன்மையான சிந்தனைதான் போட்டி இல்லாத நிலையை உருவாக்கும். posted by: Sarfuddin Source :http://nidur.info |
No comments:
Post a Comment