Sunday, May 13, 2018

பழங்குடிகள் - நவீன அகதிகள் - எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் MUTHU KRISHNAN·

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
First we were dispossessed in the name of kings and emperors, later in the name of state development, and now in the name of conservation.
 - Indigenous delegates to the Fifth World Parks Congress, Durban, South Africa, 2003

சுனாமியைக் கண்டு இந்த மொத்த உலகமும் தன் தொழில்நுட்பங்களுடன் கதிகலங்கி நின்றது. அதே சமயம் அந்தமானின் ஜார்வா பழங்குடிகள் நம்மை எல்லாம் எள்ளி நகையாடினார்கள். அவர்கள் சுனாமி வருவதை முன்கூட்டியே உணர்ந்து மேடான பகுதிகளுக்குச் சென்று விட்டார்கள். இயற்கையுடன் இயைந்து வாழ்பவர்களுக்கு இயற்கையின் எல்லா சமிக்ஞைகளுமே உணர்வு அளவிலேயே பொதிந்துள்ளது. பழங்குடிகள் இயற்கையின் மடியில் வளரும் அதன் செல்லக் குழந்தைகள்.
பழங்குடிகள் என்போர் யார் என்று கொஞ்சம் அகராதிகளில் தேடினால் பலவித விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
அதில் “தொன்றுதொட்டோ அல்லது பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் அதைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், சமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணம் பற்றிய பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்” என்பது கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கிறது.


நிலத்துடனும் இயற்கையுடனும் நெருங்கிப் பிணைந்த வாழ்வைக் கொண்ட இந்தப் பழங்குடிகள் கடந்த 100 ஆண்டுகளாகவே தொடர்ந்து பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். கிழக்கு ஆப்ரிக்காவின் மசாய்கள், யுகாண்டா & மத்திய ஆப்ரிக்காவின் பிக்மிக்கள், தாய்லாந்தின் காரன்கள், போஸ்ட்வானாவின் பசர்வாக்கள், கென்யாவின் ஒயிக்கள், பிரேசிலின் காய்பூக்கள், எத்தியோப்பியாவின் முர்சிக்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள 427 பழங்குடி குழுக்கள் வரை அனைவரின் கதையையும் கேட்டால் அவை அச்சுபிசகாமல் ஒன்றாகவே இருக்கிறது. உலகம் முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான திட்டங்களின் பெயரில் பழங்குடிகளை அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த அரசும் உலகின் பெரும் தொண்டு நிறுவனங்களும் (BINGO-Big International NGO's) துடித்து வருகிறது.
பழங்குடிகள் முற்றிலும் காடு சார்ந்த வாழ்வு உடையவர்கள். அவர்களின் தேவைகளை எல்லாம் அருகாமைக் காடுகள்தான் பூர்த்தி செய்கிறது. எரிபொருள், நன்னீர், மருந்துகள், மீன், பழங்கள், கிழங்குகள், பசை, தேன், தீவனம் என எல்லாவற்றையும் காலாற அலைந்து திரிந்து தங்களின் தேவைக்கு ஏற்ப எடுத்து வருவார்கள். மரபாகவே காட்டில் உள்ள 9000 தாவரங்கள் பற்றிய அறிதல் அவர்களுக்கு உண்டு. இதில் 7500 வகை தாவரங்களை அவர்கள் உணவாகவும் மருந்தாகவும் பாவித்து வருகிறார்கள். இயற்கையின் மடியில் வளர்ந்த இந்தக் குழந்தைகளை இந்திய சமூக அமைப்பு தனது கட்டுமானத்தில் இருந்து தொலைதூரத்தில் (Out Castes) தான் வைத்திருந்தது, அதுவும் இவர்களின் மனங்கள் மாசுபடியாமல் இருந்ததற்கு ஒரு காரணம் என்று கூட கூறலாம். காலம் காலமாக இவர்கள் சமூகத்தின் விளிம்புகளில் வசித்ததால் இதுநாள் வரை எந்தவித பாதுகாப்பும் இல்லாது வாழ்ந்து வருகிறார்கள், இந்தியாவின் எல்லா மலைத் தொடர்களிலும் இவர்களை நாம் காணலாம். வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலத்தில் வேலையாட்களை விடுமுறைக்கு இங்கிலாந்திற்கு அனுப்பினால் அந்த ஆட்கள் திரும்பி வருவதில்லை என்ற காரணத்தால் அங்குள்ள பருவகாலத்தை ஒத்த இடங்களை இங்கு தேடினார்கள். மோயர் பள்ளத்தாக்கு வழியே நீலகிரி மலை மீது ஏறி அவர்கள் ஊட்டி - குன்னூரில் தங்கள் ராணுவ தளத்தை அமைத்தார்கள், இன்றும் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் ஓய்வு பெறும் காலத்தில் கடைசி வேலைத்தளமாக குன்னூரை தேர்ந்தெடுக்கலாம். வெள்ளையர்கள் இங்கு இருக்கும் உயர்ந்த மலைகளைக் கைப்பற்றிய மறுநிமிடம் சொகுசு பங்களாக்கள், விளையாட்டு அரங்குகள் கட்டுவதற்குக் காட்டு மரங்களை வெட்டத் தொடங்கினார்கள். அங்கு மட்டுமல்லாது அவர்களின் எல்லா கவர்னர் மாளி கைகளுக்கும், இங்கிலாந்தில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் மரங்களை வெட்டி அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். அடுத்து இந்தக் காடுகளில் இயற்கையாய் உருவான இந்த மரங்களை எல்லாம் முற்றாக வெட்டிவிட்டு அந்த சரிவுகளில் தைல மரங்களையும் (Ecualyptus), அவர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகத் தேயிலைத் தோட்டங்களையும், அமைத்தார்கள். இன்று நம் கண்களில் விரியும் இந்தப் பசுமை நிலப்பரப்பைத்தான் பச்சை பாலைவனம் (Green Desert) என்று திணையியல் அறிஞர்கள் அழைக்கிறார்கள். காடுகள் அழிக்கப்பட்டு அங்கு தேயிலைச் செடிகள் நடப்பட்டதுதான் மலைகளில் ஏற்படும் நிலச்சரிவிற்குக் காரணம். அதன் பின் இந்த மலைகளில் உல்லாசமாக வேட்டை விளையாட்டுகளை (Game Hunting) தொடங்கினார்கள், இதற்குப் பல இடங்களில் உள்ளூர் ஜமீன்தார்களையும் சேர்த்துக் கொண்டார்கள். குழுக்களாகப் பிரிந்து ஒரே நாளில் இவர்கள் சுட்டு வீழ்த்திய சிங்கங்கள், புலிகளின் எண்ணிக்கையும் புகைப்படங்களும் இன்று பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. அதில் Sport on the Niligiri’s, Wayanad Jungle Memories, Guide to Shikar on the Nilgiris, Ootachamund-Frederick Price முக்கியமான நூல்கள்.


அவர்களின் தோட்டங்களில், வேட்டைகளில், அவர்களின் ஒத்தாசைகளுக்கு என சமதளங்களில் இருந்து ஒரு பெருங் கூட்டத்தை மலைகளில் குடியமர்த்தினார்கள். மலைமீதுள்ள சுற்றுலா தளங்களில் வசிப்பவர்களில் 90% பேர் பழங்குடிகள் அல்லாதவர்களே. வெள்ளையர்கள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்த காலத்தில் அவர்களுக்கு வந்த மிகப் பெரும் எதிர்ப்புகள் பழங்குடிகளிடம் இருந்துதான் வந்தன. 1809ல் பீல் போர், 1817ல் பாயிக் போர், 1836-1866 வரையிலான கும்சார் போர், 1857 - 1864 வரையிலான சம்பல்பூர் போர் என வெள்ளையர்களின் நிம்மதியையே இது கெடுத்தது. பிர்சா முண்டா, கன்ஹு சந்தால், காச்யா நாயக், தானா தோரா, தல்காலா சாந்து என பல பழங்குடி புரட்சியாளர்களைப் பற்றிய கதைப்பாடல்கள் இன்று வரை இந்த மலைச்சிகரங்களில் ஒலிக்கும்போதும் இவைகளில் எதையும் சுதந்திரம் பெற்ற பின்பும் கூட வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்யவோ, பாடத் திட்டங்களில் சேர்க்கவோ மறுத்துவிட்டார்கள். பழங்குடிகள் மீதிருந்த இந்த பயத்தினால்தான் அவர்களை நெருக்கமான வேலைகளில் அமர்த்தாமல் வேறு சாதிகளை நாடினார்கள் வெள்ளையர்கள். இருப்பினும் பிரித்தானியர்கள் காலம் தொட்டு இன்று வரை பல சட்டங்கள் - ஷரத்துக்களின் வழியே பழங்குடிகளின் வாழ்வை நிர்மூலமாக்க தொடர்ந்து அரசுகள் பற்றுறுதியுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்திய வன சட்டம் - 1927, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், வன உரிமைகள் சட்டம் - 2006 என தொடர்ந்து சட்டங்கள் பல காலம்தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. முதலில் வனங்கள், வனப் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களின் மொழியே மிகவும் அராஜகமானது. கல்வி அறிவு அதிகம் இல்லாத பழங்குடி சமூகத்தினர் இதனை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமானது. இதில் ஒவ்வொரு அதிகாரியும் இதற்குப் புதுப் புது விளக்கங்கள் கொடுத்து பெரும் குழப்பத்தையே விளைவித்து வருகிறார்கள். சமீபத்தில் இயற்றப்பட்ட வன உரிமை சட்டம் 2006 பழங்குடிகளின் உரிமைகளை வரையறுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த அரசு நிர்வாகம் தயாராக இல்லை.


சமதளங்களில் வாழும் நமக்கு காடுகளைப் பற்றிய அறிதல் என்பது அறவே கிடையாது. சமதளங்களின் கதைகளில் கூட “பயங்கரமான காடு இருந்தது” என்றும் “ஒரு காட்டில்” என்றுதான் தொடங்குவோம், நம்மைப் பொறுத்தவரை காடு என்பது ஒரு மர்மப் பிரதேசம். காட்டுமிராண்டிகள், காட்டுவாசிகள், காட்டுத்தனமாக என நாம் பாவிக்கும் வார்த்தைகளே நாம் காட்டை எப்படி ஒரு நாகரீகமற்றவர்கள் வாழுமிடமாகப் பார்க்கிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் மறுபுறம் இயற்கையில் இருந்து முற்றாக விலகிய, நகர வாழ்க்கையில் இருந்துகொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்துகொண்டு வனச் சட்டங்கள் இயற்றப்படுவது எத்தனை கேலிக்கூத்தானது என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். பொதுவாக, அரசும் ஊடகங்களும் கடந்த 30 ஆண்டுகளாக நகரவாசிகளின் தலைகளில் பழங்குடிகள் பற்றிய பல கற்பிதங்களை ஏற்றி வைத்துள்ளது. ஒரு காட்டில் பல்லுயிரியம் பாதிக்கப்பட்டால், அதன் அடர்த்தியில் குறைவு ஏற்பட்டால் உடனே இந்த உலகம் பழங்குடிகள்தான் அதற்குக் காரணம் என்கிறது. ஒரு வனப் பகுதியில் மிருகங்களின் எண்ணிக்கை குறைந்தால் உடனே அந்தப் பழியும் அங்கு வசிக்கும் பழங்குடிகளின் மேலே தான் விழுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள பழங்குடிகள் மிகப் பெரும் இடப்பெயர்வுகளைச் சந்தித்து வருகிறார்கள். பெரிய அணை கட்டுதல், கனிம வளங்களை வெட்டி எடுத்தல், வனங்களைப் பாதுகாத்தல், தேசிய பூங்காக்கள் அமைத்தல் என பல தலைப்புகளின்கீழ் இவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவர்களை வெளியேற்றினால்தான் வனங்களைப் பாதுகாக்க இயலும் என்று ஒருபுறம் பேசிக்கொண்டே மறுபுறம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பெரும் நிறுவனங்களுக்குத் தடையின்றிக் கொடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் வளர்ச்சியின் பெயரால் நடைபெறுவதால் இதைக் கேள்வி கேட்கும் பழங்குடிகள், இயற்கை ஆர்வலர்கள், பசுமைப் போராளிகள் என அனைவரும் வளர்ச்சியின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள்.
தேசிய பூங்காக்கள், வன சரணாலயங்கள், காப்பிடங்கள் எனப் பெரும் காடுகளை வேலியிட்டு அதில் மிருகங்களைப் பாதுகாத்தலை Fortress Conservation என்று அழைக்கிறார்கள், இது ஒரு அமெரிக்க Yellow stone/yosemite மாதிரியாகும். அமெரிக்காவில் இது போன்ற சரணாலயங்கள் அமைத்தலின் பெயரால் அந்த நிலத்தின் பூர்வகுடிகளை விரட்டி அவர்களை வேறு வேலிகளுக்குள் அடைத்தார்கள். இந்த மாதிரியைத்தான் உலகம் முழுவதிலும் தொண்டு நிறுவனங்களும், உலக வங்கியும் அமல்படுத்த துடிக்கின்றன. காலனிய ஆதிக்க காலத்தில் ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பல நாடுகளின் இயற்கை வளத்தைச் சுரண்டி அனுபவித்தார்கள், அவர்களைப் போல் இயற்கையை மதியாமல் அழித்தவர்கள் வரலாற்றிலேயே இல்லை. ஆனால் அவர்களேதான் இப்பொழுது புதிய வேஷத்தைக் கட்டிக் கொண்டு உலகின் இயற்கை வளங்களை, காடுகளைத் தங்களால்தான் பாதுகாக்க இயலும் என்கிற தோரணையில் களமிறங்கியுள்ளனர். இந்த வெள்ளைத் தோல் உடையவர்களிடம்தான் காடுபற்றிய, மிருகங்கள்பற்றிய அறிதலும், பாதுகாத்தல் கருவிகளும் இருக்கிறது என்பதை உலக மக்களை முதலில் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். இந்த ஒப்புதலை உருவாக்கும் பணி செய்ய National Geography, Discovery போன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு களைத் தொடங்கினார்கள். அவர்களின் ஒளிபரப்பால் இன்று அந்த ஒப்புதலை அவர்கள் பெற்றுவிட்டனர். இருப்பினும் தொடர்ந்து வெள்ளை முகங்களை மட்டுமே அவர்கள் காட்டியபோது சர்ச்சை எழுந்தது. உங்களுக்கு எப்படி உலகம் முழுவதும் உள்ள காடுகளைப் பற்றி தெரியும், அது சாத்தியமற்றது என குரல்கள் வலுப்பெற்றன. பொதுவாகவே எந்தக் காட்டிற்குள்ளும் நீங்கள் ஒரு வழிகாட்டி (tracker) இல்லாமல் செல்ல இயலாது. ஒவ்வொரு காட்டிலும் உள்ள மிருகங்கள் வெவ்வேறு பருவநிலைகளில் வெவ்வேறு வழித்தடங்களை பாவிக்கும். ஒரு வன வழிகாட்டி என்பவர் மிருகங்களின் நடமாட்டம், பூச்சிகள், நிலப்பரப்பு சார்ந்த அனுபவ அறிவுடையவர். நீங்கள் எந்தக் காடுசார் படிப்பை படித்திருந்தாலும் ஒரு காட்டுக்குள் நுழைய அந்தப் பிரத்யேக காடு சார்ந்த உணர்வுடையவர் தேவை. ஆனால் National Geography, Discovery சேனல்களில் வெள்ளைக்காரர்கள் தனியாகச் செல்கிறார்களே என்கிற கேள்வி உங்கள் மனதில் எழும். நமக்கு வெள்ளைக்காரர்களின் முகங்களையும் சாகசங்களையும் பதிவு செய்வதுதான் அவர்களின் நோக்கம். இந்த ஆய்வுகள் அனைத்தும் அந்தக் காடுசார் பழங்குடிகளின் பட்டறிவு இல்லாமல் சாத்தியமில்லை என்ற குரல்கள் வலுப்பெற்று பெரும் விமர்சனங்கள் எழுந்த பிறகு தான் மெல்ல கறுப்பர்கள், செவ்விந்தியர்கள், மங்கோலியர்கள், பர்மியர்கள், இந்தியர்கள் என பல இனங்களின் முகங்களை இதுவரை தவிர்த்து வந்த காமிராக்கள் படம் பிடிக்கத் தொடங்கியது. அதேபோல் காட்டுவாசிகள் பயங்கரமானவர்கள், அவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களை நாம் உடனே அடக்கி ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என பல ஹாலிவுட் படங்கள் வெளிவந்தன. இவைதான் அமெரிக்காவின் பூர்வகுடிகளைக் கொன்று குவித்ததற்கான ஒப்புதலை உருவாக்கி (Manufacturing Consent) தந்தது.



ஒரு குறிப்பிட்ட மிருகத்தின் எண்ணிக்கை அபாயகரமான அளவு குறைந்து விட்டால் உடனே அதன் பெயரை Red Data Bookல் வெளியிடுவார்கள். அதன் பின் அந்த மிருகம்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உலக வங்கியும், தொண்டு நிறுவனங்களும் (BINGO) பெரும் தொகைகளை ஒதுக்கீடு செய்யத் தொடங்கும். இன்று புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 1500 ஆக குறைந்து விட்டது. அதனை நாம் உடனே பாதுகாக்கத் தவறினால் புலி இனமே அழிந்துவிடும் என தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளை, சிங்கங்களை, யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உடனே அவைகளின் வாழுமிடங் கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தூய்மைப்படுத்துதல் என்றால் மனிதர்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப்படுத்துவதே. கர்நாட காவின் குடகு பகுதியில் நாகர்ஹோல் தேசிய பூங்காவை அமைக்க 1970ல் பழங்குடிகள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டார்கள், அதைத் தொடர்ந்து 1983லும் பெரும் வெளியேற்றம் நடை பெற்றது. அதே வேளையில் இவர்களை வெளியேற்றிய அதே வனத்துள் தாஜ் ஹோட்டல் தனது கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. 1996ல் பழங்குடிகள் அவர்களுக்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் உடனே அந்த ஹோட்டல் கட்டப்படுவதற்குத் தடை விதித்தது. இன்றும் அந்த தாஜ் ஹோட்டலின் பாழடைந்த கட்டிடங்கள் அங்கு அரசின் மூர்க்கத்தின் சின்னமாக விளங்குகிறது. பழங்குடிகளை அந்தக் காட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் அனுமதித்தது. இருப்பினும் வன உரிமைகளை மீட்டெடுத்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டபோதும், அங்கு அவர்களை விவசாயம் செய்யவோ, மாடுகள் வளர்க்கவோ, வேர்கள் - கிழங்குகள் வெட்டி எடுக்கவோ, இலைகள் சேகரிக்கவோ அனுமதிக்கவில்லை. இது நகரத்தில் வாழும் ஒருவரின் வீட்டில் தண்ணீர், பால், மின்சாரம், பலசரக்கு என எல்லாவற்றையும் தடை செய்துவிட்டு வாழ பரிந்துரைப்பது போல் ஆகும். பழங்குடிகள் ஒருபோதும் ரசாயன உரங்களை, பூச்சிக்கொல்லி நஞ்சுகளை எல்லாம் உபயோகிப்பதில்லை. அவர்கள் இயற்கை விவசாயம் செய்பவர்களே. ஆனால் அவர்களுக்குக் காரணம் ஏதுமின்றித் தடை விதிக்கிறது அரசு. ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாரல்காட் சரணாலயம் கொஞ்ச காலத்திற்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் மிருகங்கள் எல்லாம் இறந்துவிட, அதன் சரணாலய தகுதியை இழந்தது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள் அகதிகளாக வெளியே இருக்க, இந்த மொத்த பகுதியை ஒரு சிமெண்ட் ஆலை அமைக்க தாரைவார்த்தது அரசு.


வனமிருகங்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் மொத்த குஜ்ஜர்களையும் வனங்களில் இருந்து வெளியேற்றி அங்கு சர்சிகா தேசிய பூங்கா அமைத்தார்கள். உலகம் முழுவதுமே இன்றைய காடுகள் பற்றிய ஆய்வு செய்தால் அதில் பழங்குடிகள் வசித்த காடுகளில்தான் மிருகங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அங்குதான் பல்லுயிரியம் மிக பெருக்கத்தில் காணப்படுகிறது. இந்த உண்மையை இயற்கை விஞ்ஞானிகள், செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து நிறுவி வருகிறார்கள். குஜ்ஜர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புலிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். புலி என்பது அவர்களுக்கு மிருகம் அல்ல. அவர்களின் வழிபடும் தெய்வம். இந்த மிருகங்களின் வேட்டை என்பது ஒரு உலகளாவிய தொடர்புடைய சங்கிலியான இணைப்பின் மூலம்தான் சாத்தியமாகிறது. எப்படி சந்தன மரங்களைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காடுகளில் இருந்து வெட்டி எடுத்துப் பல தரகர்களின் கை மாறி, பல படிநிலைகளில் மாமூல் கொடுத்து அதனை சந்தைப்படுத்தினார்கள். சந்தன மரங்கள் வியாபாரத்துக்கு வசதியாக தமிழக சட்டமன்றத்தில் சட்டங்கள் கூட இயற்றி உதவியது. . . இதனைத்தான் முறைப்படுத்தப்பட்ட குற்றம் (Organised Crime) என்கிறார்கள். இத்தனை பெரும் கட்டுமானங்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை. அது போலத்தான் பழங்குடிகள் மிருகங்களை வேட்டையாடுவதில்லை. அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவே அவர்கள் சில மிருகங்களைக் கொல்கிறார்கள். இந்தக் கொடூரமான மிருக வேட்டை என்பது உலகளாவிய தொடர்புடைய, அதிகாரங்களின் பங்களிப்புடையது. சீனர்கள் புலிக்கறியை விரும்பி உண்பார்கள். சீனாவில் புலிகளைப் பண்ணைகளில் வளர்கிறார்கள். இருப்பினும் பிராய்லர் கோழிக்கும் நாட்டுக் கோழிக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. அது போலவே அங்குள்ள செல்வந்தர்கள் காட்டில் உள்ள புலியைத்தான் தேடுகிறார்கள். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சீன சந்தையின் அழுத்தத்தில் தான் இந்தியாவின் பெரும் பகுதி புலிகள் வேட்டையாடப்படுகிறது.


ஆப்ரிக்காவில் இது போல் பெரும் சரணாலயங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டன. லட்சக்கணக்கில் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களை இந்த சரணாலயங்களுக்கு வெளியே குடியமர்த்தினார்கள். காடுகளுக்குள் நுழைய தடைவிதித்தார்கள். இதே காடுகளின் அருகாமையில் பெரும் விடுதிகள் கட்டினார்கள். காடு உலாக்கள் (Wild Safari) ஏற்பாடு செய்தார்கள். பெரு முதலாளிகளின் கேளிக்கை களமாக வனம் உருமாற்றம் பெற்றது. வனம் என்பது பெரும் பணம் கொழிக்கும் தொழிலானது. இந்த வசதிகளைப் பயன்படுத்த பெரும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆக, ஆப்ரிக்காவைப் பொறுத்தவரை வெள்ளையர்களால்தான் இந்தக் கட்டணங்களைக் கொடுக்க இயலும். ஆகையால் வனமும் ஒரு வெள்ளையர்கள் குடியிருப்பாக மாற்றப்பட்டுவிட்டது. பொருளாதார செழிப்பு இருந்தால்தான் அனுமதி என்பது உலக பொதுவிதியாகிப் போனது. இந்தியாவிலும் இந்தக் கட்டண விதிப்பால் அங்கு வாழ்ந்த பழங்குடியால் ஒருபோதும் தன் குழந்தைகளுக்கு நாம் வாழ்ந்த இடமடா இது என இந்தக் காட்டைக் காட்ட இயலவேஇயலாது.
வேறு வழியில்லாமல் பழங்குடிகள் தங்களின் உணவுக்காக இந்த நிறுவனங்களில் தோட்டக்காரர்களாக, மூட்டை தூக்குபவர்களாக, முறைசாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். இந்த வனப் பொருளாதாரத்தின் ஆகக்கீழ்நிலையில் அமர்த்தப்பட்டார்கள். ஒரு சுதந்திரமான தற்சார்புடைய வாழ்வுடைய ஒரு சமூகத்தை மிக ஏழ்மையான, முற்றிலும் சார்ந்திருக்க வேண்டிய வாழ்நிலைக்குத் தகவமைத்தார்கள். இதுதாண்டா வளர்ச்சி என்று மீண்டும் ஒரு முறை நம் முகத்தில் அறைகிறார்கள். இது மட்டுமல்ல, இந்த சமூகத்தின் மரபான அறிவையும் களவாட அவர்கள் தவறவில்லை. உலகம் முழுவதுமே பழங்குடிகளின் மரபான அறிவை ஆவணப்படுத்துகிறோம் என்கிற பெயரில் Ford Foundation தொடங்கி ஏராளமான தொண்டு நிறுவனங்கள் மூன்றாம் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் நோக்கி படை எடுத்தன. இந்தியச் சூழலில் பழங்குடிகளின் 9000 தாவரங்கள் குறித்த அனுபவ அறிவைத்தான் ஆயுர்வேதம் என்கிற பெயரில் அதன் வேர்களின் தடயமில்லாமல் வியா பாரம் செய்து வருகின்றன. இந்த அறிவுத் திருட்டு காலம்காலமாக வெவ்வேறு வடிவங்களில் நடந்து வருகிறது. திட்டங்கள் - தயாரிப்புகள் - காப்புரிமைகள் என்று உலக அறிவு திருட்டுகள் பற்றி ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.


இந்த ஆப்ரிக்க பழங்குடிகளில் கட்டுமானத்திற்கு வரமறுத்து வெளியே வசிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அரசு அவர்களை வனங்களில் இருந்து வெளியேற்றி அதற்கு சிறு தொகையையும் நஷ்ட ஈடாக கொடுத்திருக்கும். அவர்களை அணுகி அவர்களுக்கு வேட்டை ஆயுதங்களைத் தருவித்துக் கொடுத்து பல சிறிய மிருகங்களை வேட்டையாட உலகளாவிய இந்தக் கூட்டு முனைகிறது. இவர்கள் இங்கு வேட்டையாடும் இந்த மிருகங்கள் முறையான கடத்தல் வழித்தடங்களில் சென்று ஐரோப்பிய உணவகங்களின் உணவுப்பட்டியலில் இடம்பெறுகிறது. இந்தப் பெரும் காடுசார் தொழில்களை, பொருளாதாரத்தை ஒரு பழங்குடி இயங்கவிடாமல் கேள்வி கேட்டால் அவன் இயற்கையை அழிப்பவனாக, பாதுகாத்தல் நடவடிக்கையின் எதிரியாக சித்தரிக்கப்படுகிறான். காலம் காலமாக, தனது குழந்தையைப் போல் காடுகளுக்குள் வாழ்ந்து பராமரித்து பாதுகாத்தவனை இந்த 30 வருட நவீன உலக மாற்றங்கள் காட்டின் எதிரி எனவும், பாதுகாத்தலின் எதிரி எனவும் பட்டம் சூட்டி மகிழ்கிறது. பழங்குடிகளின் வாழ்வு குருதியில் தோய்ந்து கிடக்கிறது. காலனிய ஆட்சியை எதிர்த்தது முதல் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் சூழ்ச்சி வலை, ஆளும் அரசுகளின் நயவஞ்சகம் வரை அவர்களின் வாழ்வு கதியற்று முச்சந்தியில் நிற்கிறது.
தமிழகத்தில் நாம் கொடைக்கானல், ஊட்டி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஊர்களைக் கொஞ்சம் உற்று நோக்கினாலே விஷயம் எளிதாக விளங்கும். இந்த மலைகளில் உள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிபவர்களில் பலர் திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரையில் இருந்து இடம் பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அங்கு சுற்றுலா தொழில் பெரிதாக வளர்ந்தவுடன் பல தொழில் குழுமங்கள் மலையை அழித்து அடுக்குமாடிக் கட்டிடங்கள், சொகுசுப் பண்ணை வீடுகளைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கட்டிவருகின்றன. நீதிமன்றங்களின் பல ஆணைகளால் கூட இந்த சுற்றுலா மாபியாக்களைத் தடுக்க முடியவில்லை. இதை விட அங்கு 25 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களில் பலர் பட்டியலின பழங்குடி என ஜாதி சான்று பெற்றுள்ளனர். இன்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலில், பலர் போலி சான்றுகளுடன் வேலையில் அமர்ந்துள்ளனர். பல பொதுத்துறை நிறுவனங்களில் இவர்களின் மேல் விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் வனங்களும் மலையடி வாரங்களும் பெரும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. காடுகளின் அருகாமைகளில் பல கிராமங்கள் புதிதாக முளைத்துள்ளன. பழங்குடிகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி விட்டு இந்த அதிகாரிகள் கையூட்டு பெற்று அரசு வசம் உள்ள புறம்போக்கு நிலங்களுக்கு விவசாய பட்டா வழங்கி வருகிறார்கள். இப்படி காட்டுயிர்களின் வாழிடமும் பலவித ஆக்கிரமிப்புகளுக்கு இரையாகி வருகிறது. மிருகங்கள் பருவகாலத்திற்கு ஏற்ப பலவித பாதைகளில் நீர் அருந்தவும் வேட்டையாடவும் செல்லும். இந்தப் பாதைகளை ஆக்கிரமித்து வயல்கள் வந்துள்ளன. காட்டுயிர்களின் பாதைகளின் மீது இந்த முட்டாள்கள் பல இடங்களில் நான்கு வழி சாலைகளையே அமைத்துள்ளனர். காட்டுயிர்களின் வாழிடத்தை ஆக்கிரமித்து விட்டு இப்பொழுது எங்கள் பயிர்கள் நாசமாகிவிட்டது, எங்கள் வீடுகளைச் சேதப்படுத்துகிறது என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள். இதற்குத் தீர்வாக வயல்களிலும், சாலையோரங்களிலும் மின்சார வேலிகள் அமைக்கிறார்கள். அந்த வேலிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. அதை ஒரு மிருகம் தொட்டால் மிதமான மின்சாரம் பாய வேண்டும். ஆனால் இதற்கு மாறாக அவர்கள் முழு 230ஸ் மின்சாரத்தையே பாய்ச்சுகிறார்கள், இதனால் யானைகள் உட்பட பல காட்டுயிர்கள் கருகிய நிலையில் இவர்களின் வேலி அருகில் கிடக்கின்றன. உண்மையிலேயே மனு கொடுத்து முறையிட வேண்டியவர்கள் இந்தப் புலிகளும், சிங்கங்களும் பல காட்டுயிர்களும்தான்.
நகர மனிதர்களைப் பொறுத்தவரை மலைகள், காடுகள் என்பது ஒரு திறந்தவெளி மதுபானக்கடை. இயற்கையை ரசித்து விட்டு டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கொட்டுவதற்கான இடம். மதுக்கோப்பைகளின் குவியலாக மலைச்சரிவுகளை மாற்றிவிட்டோம். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் தங்களின் மிஞ்சிய உணவைக் காடுகளில் தொண்டு செய்வதாக நினைத்துக் கொட்டி வருகிறார்கள். இதை சாப்பிட்ட யானைகள் பல இறந்துள்ள செய்தி சகஜமாகிவிட்டது. யானைகளின் உணவுக்குழாயில் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் அடைத்து சாவது சாதாரணமான ஒன்றாக மாற்றிவிட்டோம். நாம் காடுகளை அழிக்கிறோம். ஆனால் நம் வீடுகளின் அலுவலகங்களின் வரவேற்பறைகளில் பசுமையான படங்களை ஒட்டுகிறோம். நாம் பழங்குடிகளின் இருப்பைக் கருவறுக்கிறோம். ஆனால் நம் வீடுகளில் அலுவலகங்களின் வரவேற்பறைகளில் பழங்குடிகளின் கைவினைப் பொருட்களை அலங்காரமாக வைக்கிறோம். நாம் வீட்டைக் கட்டுகிறோம். நமக்காகவும் சில மரங்கள் அங்கே வெட்டி சாய்க்கப்படுகின்றன. ஆனால் நாம் மரங்களை நம் வீட்டில், தெருவில் கூட வளர்க்க மறுக்கிறோம்.
மக்களின் நுகர்வுக்காகவே அங்கே உள்ள வனங்களை அழிப்பதாகப் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் அரசிடம் முறையிடுகின்றன. காடுகளை, பழங்குடிகளை அழித்தால்தான் நாடு வளர்ச்சி பெறும் என்கிற மாயையை எல்லோர் தலைகளிலும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். பிளாச்சிமடாவில் உள்ள நிலத்தடிநீரை அபகரித்துவிட்டு, அங்குள்ள நன்னீர் ஓடைகளில் சயனைடு கலந்த ரசாயனக் கழிவுநீரைக் கடத்தி விட்டு அவர்களின் வாழ்வைக் கேலிக்கூத்தாக்கிவிட்டு, நம் தொலைக்காட்சிகள் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரைச் சேமிக்க உதவுகிறது, குளம் வெட்ட உதவுகிறது என விளம்பரப் படங்கள் எடுத்து ஒலிபரப்புகின்றன. கலிங்காநகரில் 14 பழங்குடிகளைக் கொன்றுவிட்ட அதே டாடா நிறுவனம் நான்தான் ஆதிவாசிகளின் நண்பன் என விளம்பரப்படம் எடுத்து தன் ரத்தக் கறையைக் கழுவுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 2006 முதல் 2011 வரை இரும்பு தாது வெட்டி எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் 3.29 லட்சம் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன, இவை முற்றிலும் கிரிமினல் வழக்குகள் ஆகும். ரெட்டி சகோதர்கள் அடுத்து நாங்களும் மக்களின் நண்பேண்டா என ஆவணப்படங்கள் எடுத்து நம் வீட்டு தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பகூடும்.  கார்ப்பரேட்டுகளின் துரித லாபவெறி உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் வளங்களைத் தேடுகிறது, அதனை நிர்மூலமாக்குகிறது.
சுதந்திரம் பெற்றவுடன் பல கொள்கைகள் மிகத் தெளிவாக வகுக்கப்பட்டன. பழங்குடிகள் தங்களின் பாரம்பரிய மரபு அறிவைக் கொண்டே வளர்ச்சிபெற வேண்டும். அவர்களின் மீது எந்தப் புறக்காரணிகளையும் திணிக்கக்கூடாது. அவர்களது பாரம்பரிய கலைகளையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். நிலத்தின்மீதும் வனப்பகுதிகளின் மீதுமான பழங்குடிகளின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். பழங்குடி இனத்தவரைக் கொண்டே அவர்களுக்கிடையே நிர்வாகத்தையும் மேம்பாட்டுப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். தொழில் நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு மிகக்குறைந்த அளவில் அந்நியர்கள் அங்கு அனுமதிக்கப் படலாம்.  எனினும் அது கண்டிப்பாக ஆரம்பக்கட்டத்தில் மட்டுமேயாக இருக்கவேண்டும். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அளவுக்கதிகமான அந்நியர்களை அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். பழங்குடி மக்களுடைய சமூக கலாச்சார அமைப்புகளுடன் இணைந்தே தங்களின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.திட்டங்களின் முடிவுகளை, புள்ளி விவரங்களைக் கொண்டோ அல்லது செலவழிக்கப்பட்ட பணத்தைக் கொண்டோ கணக்கிடாமல் மனித வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே அறியவேண்டும். இருப்பினும் இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே நிலைபெற்றது. அரசாங்கம் இவர்களைத் தொடர்ந்து உதாசீனப்படுத்த வேண்டும் என்கிற பற்றுறுதியை வனத்துறைக்குக் கைமாற்றியது. இன்று வரை ஓட்டளிக்கும் உரிமையைப் பெறாத கிராமங்கள் அனேகம். இன்றும் இந்தியாவின் பழங்குடி கிராமங்கள் 80% மின்சார வசதிகள் இல்லாமல்தான் இருக்கின்றன.
கலிங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் அசோகர் பிறப்பித்த ஒரு அரசாணை இருந்தது. அதில் அரசாங்கப் பிரதிநிதிகள் எவ்வாறு பழங்குடிகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றும் பழங்குடிகள் சார்ந்த வன உரிமைச் சட்டம் மிகத் தெளிவாக நமக்கு இந்த நடைமுறைகளை வகுக்கிறது. ஒரு பழங்குடி கிராமம் என்பதை அவர்கள் நிறுவ எந்தப் பத்திரங்களும், ஆவணங்களும் தேவையில்லை. கிராமத்தின் மூத்த பெரியவர்கள் சாட்சி கூறினால் போதும். அவர்கள் வழிபடும் வனதெய்வங்களும், அதற்குச் செல்லும் பாதைகளும் அவர்களுக்குச் சொந்தமானவை. அவர்களுக்கு வனத்தினுள் மேய்ச்சலுக்குச் செல்ல உரிமைகள் உண்டு. பல உரிமைகள் விரிவாக, தெளிவாக இன்று நம்முன் உள்ளன. அதனைப் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் சமதளத்தில் உள்ள அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் வேண்டும். இன்று ஒரு பழங்குடி அழிந்தால் நாளை இந்த மொத்த சமூகமும் அழியும். புல்லாங்குழலைக் கண்டுபிடித்தவர்களின் வாழ்வில் துயர இசை ஒலிக்கும் காலமிது.
சமீபத்தில் ஜார்க்கண்ட் தலைநகரம் ராஞ்சிக்கு அருகில் இருக்கும் ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பசுமை வேட்டைக்கு ஆளான ஒரு பழங்குடி கிராமத்தில் அவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டுக் கிளம்பும்போது அவர்களின் குடிசை வாசலில் இருந்த ஒரு மாமரத்தில் தொங்கும் மாம்பழங்களைப் பார்த்து, இன்னும் நாங்கள் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். பசியாக உள்ளது. ஒரு மாம்பழம் கிடைக்குமா என்றேன். உடனே மகிழ்ச்சியாக அவர் தனது மகனை ஒரு பழம் பறித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அந்தச் சிறுவன் உடனே மரத்தில் ஏறி ஒரு கிளையில் ஏறிக்கொண்டே இருந்தான். நான் மாம்பழம் கேட்டதே மிக அருகில் எளிதாக ஏறிப் பறிக்கும் வாய்ப்பு இருந்த ஒரு பழத்தைப் பார்த்துதான். இருப்பினும் அந்தப் பையன் விறுவிறுவென இரண்டு பழங்களுடன் இறங்கி வந்தான். எனக்குக் குழப்பமாக இருந்தது. இத்தனை எளிதாகப் பறிக்க முடியுமே, ஏன் இத்தனை சிரமப்பட்டு உச்சிக்குச் சென்றாய் என்றேன். அதற்கு அந்தப் பழங்குடி பெரியவர் கூறினார்: “இந்த மாமரம் வளர்ந்தவுடன் நாங்கள் ஒரு கிளையைப் பறவைகளுக்கும் பட்சிகளுக்கும் என ஒதுக்கி விடுவோம். அதில் ஒருபோதும் நாங்கள் பழங்களைப் பறிக்க மாட்டோம். நீங்கள் பார்த்த அந்தப் பழம் பறவைகளுக்குச் சொந்தமானது.” யாருக்குக் காடுகளின், காட்டுயிர்களின் மதிப்பு தெரியும்? யார் இதனுடன் இயைந்து வாழ்வார்கள், பாதுகாப்பார்கள்? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

எழுத்தாளர்
அ.முத்துக்கிருஷ்ணன் 

No comments: