Saturday, May 12, 2018

நாகரீகமாய் பதிவிடுவோம் ....

நட்புகள் யார் மனசையும் புண்படுத்தும் பதிவல்ல பண்படுத்தும் பதிவு ....

நமது சிந்தனைகள் எண்ணங்கள் நாமறிகிற செய்திகள் அரசியல் அலசல்கள் நாட்டு நடப்புகள் விழா நிகழ்வுகள் விளையாட்டுத் தகவல்கள் மார்க்க விஷயங்கள் இவைகளை போன்று இன்னும் விரிகிற பலவற்றையும் பதிவிடும் களமாக முகநூல் அமைந்தாலும் சில தருணங்களில் போராட்ட தளமாக மாறி தாறுமாறாக பயணிக்கிறது என்பதையும் நாம் மறுக்க இயலாது ....


ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பரிவோடு வாழ்ந்த நாம் ஒரு கால கட்டத்திற்கு பின்னர் பிரிவோடு விலகி வெவ்வேறான செயல்பாடுகளால் கொள்கை ரீதியாக மாறுபட்டு நம்மை நாமே தமக்கு பிடித்தோரை தூக்கியும் பிடிக்காதோரை தாக்கியும் சில முன்னணி இஸ்லாமிய சொற்பொழிவாளர்களை கடுமையாக ஏசியும் காட்டமாக நம்மில் சிலர் அவ்வப்போது பதிவுகளை இடுகிறோம் ....

தாம் சொல்லுகிற கருத்துகளை நாகரீகமாக எழுதுவதை தவிர்த்து வாசிப்போரின் மனங்களை கொல்லுகிற விஷயங்களை கோர்த்து விஷம் கலந்த வார்த்தைகளை பதிவாக எழுதியதை நமது நட்புகள் சிலர் அவர்களின் சுவர்களில் பதிப்பதை நாம் பார்க்க நேரிடுகிறது ....

மனிதனின் நடத்தைகளையும் அவனது குறைகளையும் கண்டறிந்து அதற்குரிய வெகுமதிகளையும் தண்டனைகளையும் வழங்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது ....

மனிதனை மனிதன் தரம் தாழ்ந்து ஏசி விமர்சிக்கும் நோக்கத்தின் காரணங்களையும் நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் இறைவனுக்கு முன்னால் பதிலுரைக்க நாம் கடமைபட்டுள்ளோம் ....

இன்றைய கால கட்டத்தில் நம்மவர்கள் வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தாலும் இறைவனின் கட்டளையை ஏற்று நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஐந்து வேளைக்குரிய பாங்கொலி அழைப்பிலும் ஒளு செய்வதிலும் ஒவ்வொரு தொழுகையில் விதிக்கப்பட்ட ரக்காத்துகளிலும் அதில் ஓதுகிற அல்ஹம்து சூரா இணை சூராக்கள் மற்றும் முன் பின் சுன்னத்துகளிலும் நமக்குள் எவ்வித மாறுபாடும் இல்லாமல் நாம் ஒரே மாதிரியாகவே நின்றும் அமர்ந்தும் தொழுகிறோம் ....

பிறை தென்படும் வானிலை கணிப்புகளை தவிர்த்து நோற்கிற நோன்பின் எண்ணிக்கையிலும் சஹர் இப்தார் நேரங்களிலும் நம்மில் வேற்றுமை இல்லை ஆனால் தீவிரமாக நாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்குள் ஒற்றுமை இல்லை ....

ஏனிந்த நிலைபாடு என்கிற கேள்விகளுக்கு எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் சரியான விடைகள் நிச்சயமாக நமக்கு கிடைக்காது ....

அறம் செய்து வாழுகிற இஸ்லாமியர்களாகிய நாம் மாறுபட்ட கொள்கைகளையும் விமர்சனங்களையும் புறம் தள்ளி ஒரே குடைக்குள் இணைந்து நிற்காத வரையிலும் நமக்குள் உறங்குகிற நேசன் என்கிற இரக்கன் எழுப்பப்படாத நிலையில் நீசன் என்கிற அரக்கன் நம்மோடு கைகோர்த்து என்றென்றும் நடப்பான் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை ....

அப்துல் கபூர்
12.05.2018 ....

No comments: