Sunday, May 20, 2018

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (5)


---மர்யம் சித்திகா

ஒதுக்கியவர்கள்...
ஒதுக்கப்பட்டவர்கள்..!

அலுவலகம் செல்ல வேண்டி ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்தேன்.
அந்தப் பாதையிலொருவர் தனது காலைக் கடனை
முடித்துக் கொண்டு இருந்தார்.

இயற்கை அழைப்பின் பேரில் கழிவுகளை கழிக்க வேண்டி
பொது இடங்களில் ஒதுங்கும் மனிதர்களை நாம் வழி நெடுக
ஆண், பெண் பேதமின்றி பார்க்கலாம்.

பார்த்தவுடன் ஒரு முகச் சுழிப்புடன் கூடிய முகத் திருப்பல்...

என்ன வெட்கம் கெட்ட மனிதர்கள் இவர்கள்..?

பொது இடங்களில் அசிங்கம் செய்து கொண்டு..!!

நாகரீகம் அற்ற, வெட்கம் கெட்டவர்கள்.
போதாக்குறைக்கு அந்த அசிங்கங்களைத்
தாண்டி வேறு செல்ல வேண்டும்.

நாம் தினமும் இவ்வாறாக
முகத்தை சுழித்தும், முகத்தை திருப்பியும்,
மூக்கை மூடியும், தாண்டியும் சென்று விடுவோம்.

நாம் நாகரீகமான, வெட்கம் கெடாத மனிதர்கள்...


நம் கண்கள் அவரை அந்த நிலையில் பார்த்தால்
அவருக்குள் நிகழ்ந்து விட்ட கூனிக் குறுகலையும்,
பதை பதைத்தலையும் பற்றி நமக்கென்ன கவலை..!!!

நமது முகத்தை சுழிக்க வைத்த அந்த ஒரு காரணம் போதும்
அவர்கள் நாகரீகமற்ற, வெட்கம் கெட்டவர்கள்தாம்.

எத்தனை முறை
அந்த மனிதர் கூனிக் குறுகினாரோ தன் வாழ்நாளில்..?

இன்னும் எத்தனை முறை இது நிகழுமோ அவருக்கு..?

இதே வெட்கம் கெட்ட மனிதர்களில் பெரும்பாலானோர்தாம்
நம் கழிவுகளை சுத்தம் செய்து நம்மை நாகரீகர்களாக
வாழவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..!!

ஏதோ நம்மால் முடிந்த கேவலமான பார்வைகள்...

சில கேடு கெட்ட வார்த்தைகள்...

அவர்களை நோக்கி துப்பிவிட்டுச்
சென்று விட்டால் போதும்
நாம் அவர்களில் ஒருவர் இல்லை என்பதை நிரூபித்துவிடலாம் .

அவர்களில் ஒருவர் நாம் இல்லை என்பதை விடவும்
சத்தியமான விஷயம் அவர்கள் நம்மில் ஒருவர்தாம் என்பது.

தற்பொழுது கழிவறை ஒரு அடிப்படை உரிமை
என்பதாகக் கருதி அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது.

mobile toilet கூட அமைத்து விட்டார்கள். உண்மையிலேயே மகிழ்ச்சி.

கழிவறைகள் கட்டுவதற்காக திட்டங்கள் வகுத்து, நிதி ஒதுக்கி,
UNICEF தூதராக ஒரு நடிகையை நியமித்து,
கழிவறை இல்லாத வீட்டில் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்
என ஒரு பெண்ணை பேச வைத்து,
அதை எல்லா மொழிகளிலும் விளம்பரப்படுத்தி
"விழிப்புணர்வை" ஏற்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அதோடு சேர்த்து கழிவறை கூட கட்டித்தராத இந்த நாட்டில்
ஓட்டு போட மாட்டேன் என்றும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
அப்படி சொன்னால் அரசியலாகிவிடும்.

மக்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்..?!

பல இடங்களில் உள்ள mobile toiletல் இடுப்பு பகுதிக்கு மட்டும்
கதவு மறைப்பு...

ஆண் மட்டுமே அவசரத்திற்கு ஒதுங்க முடியும்.

பெண் என்ன செய்வது?...

இருக்கவே இருக்கின்றனவே...

சாலை ஓரங்களும் புதர்ச் செடிகளும்...

இதனால் யாரும் பாலியல் தொந்தரவிற்கு
ஆளாகும் சூழல் நேராது...

உங்களின் சாலை ஓரங்களும் புதர்ச் செடிகளும்
உங்கள் கழிவுகளின் துர்நாற்றத்தால்
பாதுகாப்பாகவே உள்ளன.
பயப்பட வேண்டாம்...

அடிப்படை உரிமைகள் சில மனிதர்களுக்கு மறுக்கப்பட்டது,

அந்த மனிதர்களுக்குரிய உரிமைகளும் கூடப்
பெண்களுக்கு நிச்சயம் அளிக்க இயலாது.

நீங்கள் எங்களைப் போல் ஆகிவிட்டால்
எங்களின் வளர்ச்சியும் நாகரீகமும் எங்கு போவது,
உங்களுக்கும் எங்களுக்கும் என்னதான் வித்தியாசம்..?

உங்களை இந்த அளவில் நாங்கள் விட்டு வைத்து இருப்பதே
நீங்கள் செய்த புண்ணியம்,
உங்களின் புண்ணியம் எங்களின் பாதுகாப்பு.

இவர்களின் கழிவறை அரசியலின் நாற்றமும்,
நாகரீக வளர்ச்சியின் துர்நாற்றமும்
என் நாசித்துவாரங்களை அடைத்து
என்னை மூச்சுத் திணற வைக்கின்றன...!

Hilal Musthafa\


ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்...! (4)

No comments: