Friday, May 25, 2018

இறைவன் போட்ட கணக்கு


நான் கல்லூரி பயின்ற காலத்தில் நடந்த சம்பவமிது.

ஒருநாள் வழக்கமாக வகுப்பெடுக்கும் பேராசிரியர் அன்று வராத காரணத்தினால், வேறொரு பேராசிரியர் வகுப்பிற்கு வந்திருந்தார். இன்று பாடம் வேண்டாம், பொதுவாக ஏதாவது பேசுவோம் என்று சொல்லி, (அந்நிகழ்வு பி.காம் வகுப்பின் கடைசி வருடமாக இருந்ததால்) ஒவ்வொரு மாணாக்கர்களையும், பட்டப்படிப்பு முடித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க ஆரம்பித்தார். எனது நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கனவை ஆர்வமாய் சொல்ல துவங்கினர்.

நான் இரண்டாம் வரிசையில் மூன்றாவது நபராய் என் நண்பன் கலியமூர்த்தி அருகில் அமர்ந்திருந்தேன். என் நண்பர்கள் ஒவ்வொருவராய் சொல்ல ஆரம்பிக்க, நான் மெதுவாய், பி.காம். முடித்து விட்டு சி.ஏ.படித்து ஆடிட்டராய் ஆவது என் விருப்பம் என சொல்ல மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் கலியமூர்த்தி எழுந்து அவன் சொல்லி முடித்த அடுத்த நிமிடம், நான் எழுந்து என் தந்தை நடத்தி கொண்டிருக்கும் எங்கள் டிராவல்ஸ் நிறுவத்தை நான் ஏற்று நடத்த போகிறேன் என்று நான் சொன்னவுடன், வாழ்த்துகள் என்று கூறிவிட்டு, அடுத்த மாணவர் சொல்வதை என் பேராசிரியர் செவிமெடுக்க ஆரம்பித்து விட்டார்.


சொல்லிவிட்டு அமர்ந்ததுதான் தாமதம், என் கண்களில் நீர் வழிய, கை,கால்கள், உதற ஆரம்பித்தது. நாம் என்ன சொல்ல நினைத்தோம், ஆனால் சொல்லியது என்ன? என மீண்டும் மீண்டும் என்னை நானே கேட்டுக் நொந்து கொண்டேன். அந்த நாள் முழுதும் வருத்தமாகவே இருந்தது.

நாட்கள் கடந்தது. கல்லூரி படிப்பை முடித்து, M.Com படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் நண்பன் உதயகுமார் வழிகாட்டுதலில் இணைந்தேன். அப்போதும் என்னுள் ஆடிட்டர் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

1999ம் ஆண்டு திடீரென என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், வேறு வழியின்றி எனது தந்தை நடத்திவந்த அப்பாஸ் ஏர் டிராவல்ஸை நான் ஏற்று நடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்தது.06.03.2000 ஆம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட, நிர்வாகத்தின் முழு பொறுப்பும் என் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் பணிபுரிந்த நான், பின்னர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என் மேல் இருந்ததால், பின்னர் கவனமாய் நானே தட்டு தடுமாறி தொழிலைக் கற்று, பல இன்னல்கள், சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்துள்ளேன். இன்று இறைவன் அருளால் அப்பாஸ் டிராவல்ஸ் அக்பர் என்றால் மயிலாடுதுறை மட்டுமன்றி சுற்றியுள்ள ஊர்களிலும் கொஞ்சம் பிரபலம் என்றால் அது இறைவன் எனக்களித்த மாபெரும் நிஃமத் அல்லவா?!!!

சில அன்புமிகு வாடிக்கையாளர் நண்பர்கள், நீங்களும் தந்தையை போன்றே சிறப்பாய் பணி செய்கிறீர்கள் என்று சொல்கிறபொழுது (இதை நான் மிகவும் தன்னடக்கமாகவே கூறிக் கொள்கிறேன்) அன்றைக்கு இறைவன் என்னை டிராவல்ஸ் தான் நடத்த போகிறேன் என்று கூற வைத்தானே! அந்த இறைவன் போட்ட கணக்கை நினைத்து இன்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இன்று நான் நேசிக்கும் என் டிராவல்ஸ் தொழிலில் தான், உலகளவில் சிறப்பான சேவைகளை செய்து வரும் ஜேசிஸ், ரோட்டரி போன்ற தன்னார்வ அமைப்புகளில் என்னை இணைத்தது. அந்த இயக்கங்களின் தலைவராக்கி என்னை அழகு பார்த்தது. பயிற்சியாளனாய் மாற்றியது.

இப்பொழுது +2 மற்றும் 10ம் வகுப்பை முடித்துள்ள மாணவ மாணவியர்களே! தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், நாம் நினைத்த பள்ளியோ, கல்லூரியோ கிடைக்கவில்லையென்றாலும், நாம் கேட்ட பாடப்பிரிவு கிடைக்காமல் வேறு பாடப்பிரிவு கிடைக்கிறதா? எது கிடைத்தாலும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கான நன்மையை இறைவன் நிச்சயம் நமக்களிப்பான் என்ற தீவிர நம்பிக்கையில் உங்கள் கல்வி அல்லது பணியை தொடருங்கள்! நிச்சயம் வெற்றி பெருவீர்கள். நீங்கள் தேடி ஒடி பெற்றதை விட, உங்களை தேடி வந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை வளம் பெறும். இது கல்விக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும். வாழ்வில் வெற்றி 🏆 பெற வாழ்த்துகள் 🎊 🎊

Akbar Abbas Travels

No comments: