Sunday, May 6, 2018

என் படித்தல் கதை....!


என் ஆரம்பப் பாடசாலையில் எனக்கு
வாசிப்பே கிடையாது.

எட்டாவது படிக்கும் மட்டும் படிப்பே இல்லை. எப்படி எட்டுவரை.
அது
ரகசியமற்ற ரகசியம்.

என் அண்ணன்
என் வாப்பாவிடம் மாட்டிவிட்டு விட்டான்.
அவருக்கு அன்றுதான் தெரியும் என்கதை.
எனக்குத் தமிழே வாசிக்கத் தெரியாது.
எழுத்துத் தெரியும் வார்த்தைகளைப் படிக்கத்தான் தெரியாது.


என் வாப்பா எல்லா நேரமும் வாசிப்பாளர்.
எழுத்தாளர்.
முழு நேர அரசியல்வாதி.
ஒரு குடும்பவாதியாக வாழ்ந்ததே இல்லை.
அதன் வெளிப்பாடுதான்
என் படிப்புநிலை.

என் அண்ணன் மாட்டிவிட்ட பின்னர்
தினம் தினம் தினத்தந்தி பேப்பரை காலை வாப்பா முன் படிக்க வேண்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ஓங்காரக் குட்டு விழும்.

என் வாப்பா என்னிடம் தோற்றுவிட்டார்.

நான் நானாகவே தப்பிப் பிழைத்தேன்.

கவிஞர்.தா.காசிம் என் கைபிடித்தார். தமிழ் வந்தது.அவரும்
நம்ம லிஸ்டுதான்.
பள்ளிப்படிப்பே கிடையாது. ஆனால் அருமையான கவிஞரானார்.

கவிஞர் மாணவனான நான் அதன்பின் வாசிப்பில் இறங்கினேன்.
அதைத் தவிர வேறு எதிலுமே ஈடுபடவில்லை.

அப்படி ஒரு வாசிப்பு.
ஒருகட்டத்தில் என் வாப்பா என் தாயாரிடம்
"இவன் படிப்பைக் குறைக்கச் சொல்.இல்லைன்னா பைத்தியம் புடிச்சிறப் போவுதுன்னு" சொன்னதும் நடந்தது.

நெல்லை ஜான்ஸ் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
அய்யா பேராசிரியர் ஆ.ஜெபரத்தினம் என் மாபெரும் ஆசான்.
அவர்தான் என் அண்ணாமலைப் பல்கலைக் கழக வழி காட்டி.
தயாரிப்பாளர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் படிப்பில் பல்கலைக் கழக முதல் மாணவனாகித் தங்கப் பதக்கம் பெற்றதை என் வாப்பா சில ஆண்டுகள் நம்பவே இல்லை.

என்தாயாரிடம் என் வாப்பா சொன்னார் "இவன் மெடல் கோல்டானு பாக்கணும்.
இவனே தயார் பண்ண முலாம் பூசப்பட்ட மெடலா இருந்தாலும் இருக்கும். இந்தப் பயல் பக்கா பிராடு எல்லாத்தையும் செய்வான்"என்று.

அந்த வாசிப்பு இன்றுவரை நீடிக்கிறது.

Hilal Musthafa

No comments: