Tuesday, March 15, 2022

மலரே அழுந்தாதே & It all starts from a dot! Let it get rid of your mind

 மலரே அழுந்தாதே 

அன்பார்ந்த அன்னையரே

அதிமதியுடைய மகளிரே

மன அழுத்தம் தினம் அழுத்த

அவதியுறும் யுவதிகளே

ஊரெல்லாம் ஓய்ந்துவிட

உறவெல்லாம் உறங்கிவிட

இரவெல்லாம் விழித்திருந்து

எதைத்தான் சிந்திப்பீரோ

இவ்விருள்தான் நீங்கிடுமா

இரவும்தான் விடிந்திடுமா

என்றெல்லாம் எண்ணியெண்ணி

எதைத்தான் சாதித்தீரோ

மறைந்துவிட்டக் கதிரவனுக்கு

உதித்தெழத் தெரியாதா

திரண்டுவிட்ட இருளையும்தான்

விரட்டிவிட முடியாதா

அஸ்த்தமன திசை குறித்து

அலட்டிக் கொள்ளாமல்

அடுத்தநாள் உதய ஒளியால்

நிரப்புங்கள் இதயத்தை

எதிர்மறை எண்ணங்களை

அதிகமாய் உருப்போட்டு

புதிர்களை உருவாக்கி

அதிலன்றோ அமிழ்கின்றீர்

அடைய விரும்புவனக்

கிடைக்குமென நம்புங்கள்

இறையை நம்பி நீங்கள்

முறையாய் முயன்றிடுங்கள்

வீட்டறையில் முடங்காமல்

வெளிக்காற்றை சுவாசியுங்கள்

காற்றலையில் கலந்துவரும்

கிளிமொழிகள் நேசியுங்கள்

தொலைக்காட்சி நெடுந்தொடரின்

வலைகளுக்குள் சிக்க வேண்டாம்

அபிமான நாயகியின்

அவலங்கண்டு அழவும் வேண்டாம்

எதிர்பார்ப்புகளைக் கூட்டி

ஏமாறுவதைத் தவிருங்கள்

எல்லா கனவுகளும்

பலிக்குமென்ற இச்சை வீண்

கணவனின் பார்வையில்

கண்டிப்பாய் காதலுண்டு

கைபிடித்த நாள்முதலாய்

கனியுமன்பு என்றுமுண்டு

பிள்ளைச் செல்வங்களுடன்

பேசுவதே பேரின்பம்

பாடம் ஓதிக் கொடுப்பதிலே

பாதிபாரம் இறங்கிவிடும்

நிறைவான குடும்பத்தில்

முறையான வாழ்க்கையிலே

குறைவில்லா மகிழ்ச்சி

இறைதந்த வரமன்றோ

அதை

பாரமென்று கருதி

சாபமாக மாற்றுதல்

தீர்வில்லா சுமைகொண்டு

அழுத்தாதோ மனத்தை

மாத்திரை மருந்தைவிட

மன அழுத்தம் போக்குதற்கு

மார்க்கத்தில் மறையுண்டு

மருந்திடவே இறையுமுண்டு

மன அழுத்த நிழல் படிந்து

மலர் வனங்கள் வாடிடாமல்

தினம் குளித்த பூக்களென

முகம் மலர்ந்து வாழியவே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

----------------------------



It all starts from a dot!

Let it get rid of your mind

and that of all its kind;

Will it be that hard- to

fill light in your heart?

painful events hurt - when

mindful of sorrows stored;

those happened, has happened 

rose wouldn’t bloom if no thorns!

Think wise, twice or thrice;

such thoughts boost you rise;

if not a dot that to start

no any art gets smart!

Pick positives from the cluster

tick one by one when tested;

Feel the lights fill your mind

heal the wounds faster, you see !

-Sabeer ahmed abuShahruk

Brush: Dr Shahnaz Sabeer Ahmed

No comments: