Sunday, March 20, 2022

#முஸ்லிம்_பாடகர்கள் .... அபு ஹாஷிமா

 

#முஸ்லிம்_பாடகர்கள் ....



             அபு ஹாஷிமா

அந்த நாளிலே மக்கா நகரம்

இருந்ததைக் கேளுங்கள்

இன்று அன்பின் எல்லையாய்

அறிவின் சிகரமாய்

அமைந்ததைப் பாருங்கள் .... "

பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் சாயங்கால நேரத்தில் பாவாகாசீம் அப்பா பள்ளியிலிருந்து ஒலிக்கும்

அந்த இனிய பாடல் உள்ளத்துக்குள்

ஓர் உற்சாக அருவியை கொட்ட வைத்து

சந்தோஷத்தில் குளிக்க வைக்கும்.

அன்றைக்கு ரஜப் பிறை ஒன்று .

பள்ளி கொடியேற்று விழா ஆரம்பம்.

இனி 12 நாட்களுக்கு மாலைமுதல் இரவுவரை ஹனிபா பாடல்கள் ஒலித்து மனசை துள்ள வைக்கும் என்ற மகிழ்ச்சியே அன்றைய நாட்களில் எங்களுக்கு பேரின்பம் தந்து கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததுமே ஸ்கூல் பையை

தூக்கிப் போட்டுவிட்டு பள்ளிக்கு ஓடி விடுவோம்.

அந்த நாட்கள் ரொம்ப இனிமையானவை.

மதரசாக்கள் கிடையாது.

காலைமுதல் மாலைவரை அடைத்துப் போட்டு மார்க்க கல்வி புகட்டும் முறை அப்போது இல்லை.

ஓதப்பள்ளிக் கூடங்கள் மட்டுமே உண்டு.

காலையிலோ மாலையிலோ ஓரிரு மணி நேரங்கள் அங்கே சென்று குர்ஆன் ஓதிவிட்டு வருவோம்.

இஸ்லாம் என்றால் என்ன ?

ஈமான் என்றால் என்ன ?

இஸ்லாத்தின் கடமைகள் என்ன ?

இஸ்லாமிய வரலாறுகள் என்ன ?

என்பவற்றையெல்லாம் எங்களுக்கு சொல்லித் தந்தது நாகூர் ஹனிபாதான்.

" திருமறையின் அருள்மொழியில்

நிறைந்திருப்பது என்ன ?"

" ஓதுவோம் வாருங்கள்

லாயிலாஹ இல்லல்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் "

"  பொன்மொழி கேளாயோ

நபிகளின் பொன்மொழி கேளாயோ "

இப்படி எத்தனையெத்தயோ பாடல்கள் மூலம் பாடமாக இல்லாமல் பாடலாக இஸ்லாத்தை எங்களுக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்றைய இஸ்லாமிய பாடகர்கள் .

" ஓர் நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்

ஓயாது எண்ணினான் மனதில்

நோன்பையே தினம் "

நோன்பின் மாண்பைபையும் சின்ன வயதில் அதை நோற்கும் ஆர்வத்தையும் ஊட்டியது ஹனிபா பாடல்தான் .

" தியாகமென்பதே குர்பான் ...

ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது

அரபு நாட்டிலோர் தியாகம் "

இப்ராஹீம் நபியும்  இஸ்மாயில் நபியும்

யார் என்பதை எங்களுக்கு அறியத் தந்தவர் ஹனிபா அண்ணன்.

" இரு கண்கள் நம் ஹசன் ஹுசைன் வாழ்வே ...அதை சொல்கின்றேன் உவந்து கேட்பீரே

பெரும் கர்பலாவை கண்ட கண்கள்

பாடமாகுமே புனித தீனோரே கேளும் நீரே "

பெருமானார் அவர்களின் பேரப்பிள்ளைகள் ஷஹீதான வரலாறை

நெஞ்சம் கசியக் கசிய எங்கள் நெஞ்சில் பதிய வைத்தவர் ஹனிபா.

" கோதுமையை கையரைக்க கோவுரையை நாவுரைக்க

போதுமென்ற பொன்மனத்தால்

பொலிவடைந்தீர் ஃபாத்திமா "

கவித்துவமான வரிகளால் அண்ணலாரின் அருமை மகளின் வாழ்வைச் சொன்ன ஹனிபாவின்

வரிகளைப்போல் அழகான வரிகளும் உண்டோ ?

"பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ "

" ஆது மகன் சத்தாது குலவலிமை

பெருவாழ்வு அழியாமல் நிலை நின்றதோ ?"

" மெளத்தையே மறந்து இங்கு வாழலாகுமா ?"

" வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே

வாழ்விலே காணலாம் மக்கா மதினாவை நாம் "

" வானம் இருண்டு கிடந்தது

இந்த வையம் இருண்டு கிடந்தது "

" அருள் மணக்குது அறம் மணக்குது

அரபு நாட்டிலே "

" மக்கள் யாவரும் ஒன்றே குலமென

மார்க்கம் வந்தது யாராலே

மக்காவென்னும் நகரம் தந்த

மாந்தர் திலகம் நபியாலே "

போன்ற அன்றைய எண்ணற்ற பாடல்கள் எங்களுக்கு போதித்தது

இஸ்லாமிய வரலாற்றை.

கர்னாடகத்து மாணவி முஸ்கான் கான் உரத்து முழங்கிய அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தை

" அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர்

தக்பீர் முழக்கம்

கேட்டால் உள்ளம் இனிக்கும் "

என்று அன்றே முழங்கியவர் ஹனிபா.

இசைமாமணி யூசுப் அவர்களும் தன்

இனிய குரலால் ...

" ஒரு சொல்லாலே எல்லாம் கண்ட

வல்லவனே நீயே அல்லாஹ்

யாரறிவார் உந்தன் நீதி "

" மண்ணகத்தின் இகழ்வு மாற்றி

விண்ணகத்தின் உயர்வு காட்டி

பொன்னகத்தின் அண்ணல் நபி வந்தார்- புவி

தன்னகத்தின் சாந்தி இன்பம் தந்தார் "

" அறைகூவி ஹைதரலி

ஆண்டான் மைசூர் பதியிலே

ஆண்மையோடு திப்பு சுல்த்தான்

அவனுக்குப்பின் தோன்றினான்

வீரமே ஆயுதம் என்று கொண்ட சரிதமே

கூறும் உண்மையை கேளுங்களேன் ..."

என்றெல்லாம் இனிய பாடல்கள் பலவற்றை பாடி இருக்கிறார்.

ஆலிம்கள் சொல்ல மறந்த தீரன் திப்புவின் வரலாறையும் தீர்க்கமாகச் சொன்னவர் யூசுப்.

காயல் ஷேக் முஹம்மது

மொய்தீன் பெய்க்

.எம்.தாலிப்

சீனி முகம்மது

போன்ற மிகச் சிறந்த பாடகர்கள் பாடிய

எண்ணற்ற பாடல்கள் தமிழகத்தின்

மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த பாடல் ஒலிக்கும் இடத்தை கடந்து செல்லும் மாற்று மத சகோதரர்களும்

" இன்னைக்கு ஊர்ல விஷேசம்போல "

என்று எண்ணி சந்தோஷத்தோடு கடந்து சென்ற காட்சிகள் அழகானவை.

இந்த பழைய பாடல்களெல்லாம்

எங்களைப் போன்றவர்களுக்கு மனப்பாடம்.

இப்படி ...

முஸ்லிம்களின் வரலாறுகளை

இஸ்லாத்தின் கொள்கைகளை

முஸ்லிம்களுக்கு தங்கள் பாடல்களின் வழியாக எடுத்துச் சொல்வதற்காக

இவர்கள் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல.

தங்கள் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

அறிவிற் சிறந்த ஆலிம் பெருமக்கள்

சில மணி நேரம் செய்யும் சொற்பொழிவுகளில் மனம் லயிக்காத

சிறுவர்களும் இளைஞர்களும்

இந்தப் பாடல்களில் ரொம்பவே லயித்தார்கள்.

இசைத்தட்டுகளில் வந்த இந்தப் பாடல்களைப் கேட்டு ரசித்தவர்கள்

அந்த பாடல்களைப் பாடிய பாடகர்களை அழைத்து தங்கள் ஊரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த நினைத்தால்

அது அத்தனை எளிதில் நடக்காது.

நடக்க விடமாட்டார்கள்.

இசை கேட்பது ஹராம்.

இசைப் பாடல்களைப் பாடுவது ஹராம்.

அந்த இசை நிகழ்ச்சிகளை ஊரில் நடத்தக் கூடியவன் கெட்ட ஹராமி , ஷெய்த்தான் என்றெல்லாம் ஒட்டுமொத்த ஆலிம் பெருமக்களும்

பத்வா கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் மீறி யாராவது ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டால்

அவனை ஒரு சமூக விரோதியைப்போல

ரவுடியைப்போல பார்த்தார்கள் அன்றைய சமுதாயப் பெரியவர்கள்.

#இதெல்லாம்_1965_முதல்_1975 #வரையிலான_சம்பவங்கள்.

1974 ல் எங்கள் ஊர் ஜமாத்துக்கு புதிய நிர்வாகக் குழு பதவியேற்றது .

அடுத்த இரண்டு வருடங்களில்

பெருநாள் தினங்களில் தெருக்களில் ஸ்பீக்கர் வைத்து பாட்டுப் போடுவதை இவர்கள் தடை செய்தார்கள்.

அதையும் மீறி சில இளைஞர்கள் பாடல்களை ஒலிபரப்பினார்கள்.

சும்மா இருப்பார்களா நாட்டாமைகள் ?

போலீஸை அழைத்து வந்து அவர்களின் துணையோடு ஸ்பீக்கர்களை அள்ளிச் சென்றார்கள்.

மைக் சர்வீஸ்காரன் வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு

ஏகப்பட்ட கடன்களை வாங்கி

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை

திரும்பப் பெறுவதற்குள் பெரும் கடனாளிகளாகி விட்டார்கள்.

அப்போதெல்லாம் பள்ளிகளிலும்

சில பணக்கார வீடுகளிலும் நடக்கும் விஷேசங்களை நம்பியே மைக் செட் தொழில் செய்து வந்தவர்கள் ஊரில் ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள்.

ஐதுரூஸ் அண்ணனும்

ஜக்கரியா அண்ணனும்

ஏகப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில்

இந்த தொழிலை செய்து வந்தார்கள்.

பள்ளிகளில் சீரியல் லைட் போடுவது ,

ஸ்பீக்கர் வைத்து பாட்டுப் போடுவது

இவர்களின் வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு உதவியாக இருந்தது.

அதிலும் சிலர் மண்ணள்ளி போட்டார்கள்.

ஆலிம்சாக்கள் மட்டுமல்லாமல்

ஊர் நாட்டாமைகளும் இப்படி

அதிரடி முடிவுகளை எடுத்ததால்

இஸ்லாமிய இசை நிகழ்ச்சிகள் பெரும்

சி்ரமத்திற்குள்ளானது.

அந்தப் பாடகர்களும் பல எதிர்ப்புகளை சமாளித்து , போராடி பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அவர்களுக்கும் மனைவி குழந்தைகள் இருந்தார்கள்.

அவர்களுக்கும் பசித்தது.

குடும்பத்தைக் காப்பாற்றக் கூடிய கடமையும் இவர்களுக்கு இருந்தது.

அவர்கள் அழகான குரல் வளம் கொண்டிருந்தார்கள்.

மாற்று சமய பாடல்களை கேட்கும் போதெல்லாம் தாங்களும் இதுபோல் இஸ்லாமியப் பாடல்களைப் பாட வேண்டும் என்று தங்களுக்குள் ஆசையை வளர்த்தார்கள்.

அவர்களுக்காக அழகான பாடல்களை எழுதிக் கொடுக்க மிகச் சிறந்த கவிஞர்கள் தயாராக இருந்தார்கள்.

பல நாட்கள்

பல மாதங்கள்

பல வருடங்கள் பயிற்சி பெற்று

இனிய பாடல்களை மேடைகளில்

பாட ஆரம்பித்தார்கள்.

அண்ணன் ஹனிபா முதன் முதலில் பாடி இசைத் தட்டாக வெளி வந்த பாடல் ...

" அருளாளன் அன்புடையோன்

அல்லாஹ்வின் கருணையதாய்

பெருந்தகயாய் வந்துதித்த பெருமானே நாயகமே ... "

இறையருட் கவிமணி பேராசிரியர்

#அப்துல்_கபூர்_ஸாஹிப் அவர்கள் எழுதிய நாயகமே என்ற சிறு நூலில் இடம் பெற்றிருந்த தொகுப்பின் சில வரிகள் அவை.

கேட்கக் கேட்க இனிமையும் பொருள் வளமும் கொண்ட அற்புதமான பாடலது.

அதன் பிறகு எத்தனையோ பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

ஆனாலும் ....

அவரது இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆலிம்கள் யாரும் அப்போது அனுமதி வழங்கவில்லை.

என்னுடைய சிறு வயதில் நான் கேட்ட முதல் இசை நிகழ்ச்சி ஹனிபா அண்ணனோடதுதான்.

காமராஜர் ஆட்சி நடைபெற்ற காலம்.

எங்க ஊர் காட்டுவா வீட்டு காஜாமைதீன் அண்ணன் திருமணத்தில் ஹனிபா அண்ணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தித்தெரு முழுக்க பெரும் கூட்டம்.

இஸ்லாமிய பாடல்களோடு கழகப் பாடல்களையும் பாடினார்.

மிக பரபரப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி அது.

" நீ ஆண்டது போதும்

மக்கள் மாண்டது போதும்

கீழே இறங்கு "

என்ற பாடலை அவர் பாடியபோது

ஏகப்பட்ட வரவேற்பு .

அதன் பிறகு எங்கள் பள்ளித்தெரு

அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் ஆண்டு விழாவின்போது என் தாய்மாமா

வித்வான் அபுபக்கர் அவர்களின் முயற்சியில் ஹனிபா அண்ணனின்

இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.

கச்சேரிக்கு முன்னால்

நெல்லை மாவட்டத்தில் அப்போது  பிரபலமாக இருந்த  ஆலிம்

பெருந்தகை ஒருவர் பயான் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய பயானுக்குப் பிறகு கச்சேரி

நடைபெறும் என்பதை அறிந்ததும்

அந்தப் பெரியவர் ஆவேசத்தின் உச்சத்தில் நின்று விழா நடத்துனர்களையும் ஹனிபா அண்ணனையும் வசைபாட ஆரம்பித்து விட்டார். தன்னுடைய பயானை நிறுத்திவிட்டு

" நீங்க நாசமாப் போயிருவீங்கடா" ன்னு

தாராளமா சாபங்களை வழங்கிவிட்டு

இறங்கிப் போய்விட்டார்.

அதன் பிறகு பாடவந்த ஹனிபா அண்ணன் இது எதையுமே காட்டிக் கொள்ளாமல் வெகு இயல்பாக தனது

நிகழ்ச்சியை நடத்திவிட்டுச் சென்றதை மறக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் இவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்.

சில இடங்களில் மேடையில் கற்களைக்கூட வீசுவார்கள்.

ஹனிபா அண்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பிடிப்புள்ளவராகவும் இருந்ததால்

இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சவில்லை.

இஸ்லாமிய பாடல்களோடு கழகப் பாடல்களையும் அவர் பாடி வந்ததால்

கழக மேடைகளில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

மற்ற பாடகர்கள் நிலமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

"மலையாள கரைதனிலே இரத்தாற்று ஓட்டம்

மாப்பிளைமார் சேவைகளை

நினைவுபடுத்தி காட்டும்

கலையாத சுதந்திரத்தை காத்ததெங்கள் கூட்டம்

கையை நெஞ்சில் வைத்து பதில் கூற என்ன வாட்டம் ?"

ஹனிபா அண்ணன் பாடிய இந்தப் பாடலுக்காகவே முஸ்லிம் லீக் மேடைகளிலும் அவரை பாட வைத்தார்கள்.

எங்கள் பக்கத்து ஊர் சூரங்குடியைச் சேர்ந்தவர் திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜி.எம்.ஷா.அண்ணன்.

ஹனிபாவும் அவரும் நெருங்கிய நண்பர்கள். அவர் இருக்கும்வரை அவருக்காக வருஷம் தவறாமல் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார் ஹனிபா அண்ணன்.

பாவமன்னிப்பு திரைப்படத்திலும் ...

" கறுப்புல வெளுப்புமில்லே

கனவுக்கு உருவமில்லே ... " என்று

தன்னுடைய கம்பீரக் குரலால் பாடியிருக்கிறார்.

பின்னர் பல படங்களில் சில வரிகளைப் பாடி இருந்தாலும் சினிமாவில் பாட அதிகமான ஆர்வத்தை அவர் கொண்டிருக்கவில்லை.

நெல்லை மாவட்டத்தில் சம்சுதீன் என்றொரு பாடகர் இருந்தார்.

மிகவும் ஏழையாக இருந்தார்.

அருமையாகப் பாடுவார்.

நானே அவரை அழைத்து ஓரிரு வாய்ப்புகள் கொடுத்திருக்கிறேன்.

தொடர்ந்து ஆதரிக்க யாரும் இல்லாததால் லாரி டிரைவராகப் போய்விட்டார்.

காயல் ஷேக் முஹம்மது அண்ணனின்

இளமைக்காலமும் எங்க ஊர் இடலாக்குடியோடுதான் இரண்டறக் கலந்திருந்தது. எப்படியாவது ஒரு பாடகனாகி விட வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சித்துக் கொண்டிருந்தார். அவருடைய உற்ற தோழன் ஆர்டிஸ்ட் ஜப்பார் அண்ணன்.

தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தில் நண்பரையும்

ஆதரித்து அரவணைத்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் ஜப்பார்.

திண்ணைகளில் அமர்ந்து அடிக்கடி சில பாடல்களை பாடி அசத்துவார்.

பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு

சென்னைக்கு சென்று விட்டார்.

1974 ல்தான் அவர்பாடிய முதல் இசைத்தட்டு வெளிவந்தது.

" ஈச்சைமரத்து இன்பச் சோலையில்

நபி நாதரை

இறைவன் தந்தான் அந்த நாளில் "

கம்பீரமான குரல் .

ஒருமுறை கேட்டால் மறுமுறை

கேட்கத் தூண்டும் கவர்ச்சி.

அவருக்கும் இந்த சமுதாயம் உரிய வரவேற்பை வழங்கவில்லை.

ஹனிபா அண்தன் தி.மு.. பாடகர் என்பதால் ஷேக் அண்ணன் .தி.மு..

ஆதரவாளரானார்.

" கெகொட்டி சிரிப்பார்கள்

ஊரார் சிரிப்பார்கள் " என்ற பாடலை

பாலசந்தரின் அபூர்வ ராகங்களுக்காக பாடியவர் ....

" மண்ணின் மறைவாக என்ன விதை

போட்டாலும்

போட்ட விதை என்னதென்று மரம் வளர்ந்து காட்டாதோ ... " என்று

எம்.ஜி.ஆருக்காக சிரித்து வாழ வேண்டும் படத்தில் பாடி அசத்தினார்.

நெல்லை உஸ்மான் என்பவரும்

நல்லபல பாடல்களைப் பாடி வந்தார்.

நாங்களும் அவரை ஆதரித்தோம்.

ஆனாலும் இசைத்துறையில்

முன்னேற முடியவில்லை.

" இந்தியா எங்கள் தாய் நாடு

இஸ்லாம் எங்கள் வழிபாடு ..."

என்று பாடிய சீனி முஹம்மதுவுக்கும்

போதிய வாய்ப்புகள் இல்லை.

இப்படி சமுதாயத்தின் கடும்போக்கு தன்மையினால் முஸ்லிம்கள் 

இசைத் துறையில் பெரிய அளவில்

சாதிக்க முடியாமல் போய்விட்டது.

அன்றைய சுன்னத் வல் ஜமாத் ஆலிம்கள் செய்த அதே கெடுபிடிகளையும் பத்வாக்களையும்

பின்னர் வந்த வகாபி மத குருமார்களும் கையிலெடுத்து இசைக் கச்சேரிகளை ஒழிக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டியதுபோல் செயல்பட்டார்கள்.

1975 க்குப் பிறகு அரேபியா பயணம் ஆரம்பமானபோது இஸ்லாமிய பாடகர்களின் வாழ்க்கையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது .

ஆடியோ கேசட்டுகளுக்காக நிறைய

பாடினார்கள்.

அவை அமோகமாக விற்பனையாகின.

ஆனாலும் அதில் கணிசமாக சம்பாதித்தவர்கள் வியாபாரிகளேத் தவிர பாடகர்களல்ல.

பின்னர் சில பாடகர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி ஓரளவுக்கு கெளரவமாக

வாழ்ந்தார்கள்.

இப்படியெல்லாம் துன்பப்பட்டு , துயரப்பட்டு இஸ்லாமிய பாடல்களைப் பாடிய பாடகர்களின் பாடல்களைத்தான்

இசை ஹராம் என்று சொல்லக்கூடியவர்களின் ஆதரவாளர்களும் கார்களில் செல்லும்போது கேட்டுக் கொண்டே செல்கிறார்கள்.

அதைவிட வேடிக்கை .....

தங்கள் இயக்கங்களுக்காக இசையோடு

கூடிய கொள்கை விளக்கப் பாடல்களை

தயார் செய்து தங்கள் கூட்டங்களில்

ஒலிக்க விடுவது.

இப்போதும் தர்காக்களில் விழா நடைபெறுகிறது என்பதை அங்கே ஒலிக்கும் பாடல்களை வைத்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது

அபுல் பரக்காத்

இறையன்பன் குத்தூஸ்

தேரிழந்தூர் தாஜுதீன்

போன்ற பலரும் பாடி வருகிறார்கள்.

.ஆர்.ரஹ்மானும்

அவர் மகன் அமீனும் கூட

இஸ்லாமியப் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இஸ்லாமியப் பாடகர்களை எதிரிகளைப்போல் பாவித்த ஆலிம் சமூகம் இப்போது

அத்தகைய மனநிலையில் இல்லை.

அவர்களும் நல்ல பாடல்களை மேடைகளில் எடுத்துச் சொல்கிறார்கள்.

இந்த மனநிலை வரவேற்கத்தக்கது.

சமய நல்லிணக்கம் சீர்குலைந்து வரும்

இன்றைய நாட்களில் மாற்றாரும்

விரும்பும் வகையில் நல்லிணக்கப் பாடல்களை இஸ்லாமியப் பாடகர்கள் பாட வேண்டியது அவசியம்.

" இறைவனிடம் கையேந்துங்கள்

அவன் இல்லையென்று சொல்லுவதில்லை ..."

மத எல்லைகளைக் கடந்து எல்லோராலும் விரும்பி கேட்கப்படுகின்ற  அண்ணன் ஹனிபாவின் பாடலைப் போன்று

ஏராளமான பாடல்கள் பாடப்பட வேண்டும்.

அருமை அண்ணன் Hilal Musthafa ஹிலால் முஸ்தபா அவர்கள் எழுதிய

" அழகு திருமுகம் ..." என்ற நபி புகழ் பாடலை மறைந்த எஸ்.பி.பி . பாடி இருக்கிறார்.

அதுபோல் பிரபல பாடகர்களை பாடவைத்து ஒரு இணக்கமான

சூழலை ஏற்படுத்தலாம்.

எனக்குக் கூட இந்த வருடம் எங்கள்

தெரு விழாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் ....

எங்கள் சங்கத்தின் நாட்டாமைகள்

அதில் ஆர்வம் இல்லாதவர்களாக

இருந்ததால் மேற்கொண்டு அதை முயற்சிக்கவில்லை.

வன்முறையைத் தூண்டுகின்ற,

பதட்டத்தை ஏற்படுத்துகின்ற

பொதுக்கூட்ட பேச்சுகளைவிட

இணக்கத்தை ஏற்படுத்துகின்ற

இனிமையான இஸ்லாமிய பாடல்கள்

இதயங்களை இளக வைக்கும்

இணைய வைக்கும் என்ற நம்பிக்கை

எனக்கிருக்கிறது.

          அபு ஹாஷிமா






No comments: