Saturday, March 12, 2022

எச்சரிக்கை! #வாசனை_மிகுந்த_பதிவு!

 


Senthilkumar Deenadhayalan

#எச்சரிக்கை!

#வாசனை_மிகுந்த_பதிவு!

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம். (தற்போது மயிலாடுதுறையே மாவட்டமாகி விட்டது) மயிலாடுதுறையில் உள்ள கருவாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்று.  இது தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கருவாட்டுச் சந்தையாகும். நூற்றாண்டுகளை கண்ட  மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை  இன்னும் தன் இயல்பைத் தொலைக்காமல் கருவாட்டுப் பிரியர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கஞ்சியும் கருவாடும் உழைக்கும் மக்களுக்கு  உற்ற தோழனாக விளங்குகிறது. அடித்தட்டு மக்களுக்கு சுட்டுப்போட்ட ஒரு கருவாடு இருந்தால் போதும், மடக்கு மடக்கு என உள்ளே போகும் பழைய சோறு. அவன் வயிறார சாப்பிட்ட திருப்தி அடைவான். ஆனால், இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம்கருவாடுஎன்று சொன்னால் இனையதளத்தில் என்னவென்று தேடுகிறார்கள். அந்தளவுக்குக் கருவாட்டுத் தேடல் இப்போது குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

 ஆனால் மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு என்றும் மவுசு குறைந்ததில்லை. நாகை மாவட்டம் 135 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்ட கடற் கரையைக் கொண்டது. இங்கே, பழையாறு, திருமுல்லைவாசல், தென்னாம் பட்டினம், கோணயாம்பட்டினம், , பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம், , வேளாங்கண்ணி,  ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், கோடியக்கரை என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தளங்கள் உள்ளன. மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு வரும் பெரும்பகுதி கருவாடுகள் இங்குதான் வெயிலில் காயவைக்கப்படுகிறது.

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை  கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கிறது. அனைத்து மீனவர்களுக்கும் பொதுவான ஒரு இடமாகவும் வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நூறு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் இந்தச் சந்தையைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ரயில் நிலையதிற்க்கு பக்கத்திலேயே சித்தர்காட்டில் அமைந்துள்ளது இந்தக் கருவாட்டுச் சந்தை. இவை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே கூடுகிறது. அன்று மட்டும் சாதாரணமாக ஐயாயிரம் பேர் இந்தச் சந்தைக்கு வருகின்றனர். சனிக்கிழமை பின்னிரவு இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கி விடும் என்பதால் சனிக்கிழமை மாலையே வியாபாரிகள் அதிக அளவில் குவிந்துவிடுகின்றனர்.

 இங்கு வரும் கருவாட்டு  வியாபாரிகள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை, கருர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருவாட்டுக் கொள்முதலுக்காக இங்கு குவிகிறார்கள். இரண்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை ஆறு மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெரிய வியாபாரிகள் மூட்டையைக் கட்டிவிடுகிறார்கள்.

அடுத்தகட்டமாக  சிறு வியாபாரிகள் காலை ஐந்து மணிக்கு கடை விரித்து காலை பத்து மணிவரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. ஒவ்வொரு கருவாட்டு வியாபாரிக்கும்  வாடிக்கையாளர்கள் இருப்பதால் பேரம் பேசி இழுத்துக் கொண்டிருக்காமல் நிமிடங்களில் கருவாட்டை விற்றுக் காசை எண்ணுகிறார்கள். இதற்குப் பிறகும் சில்லறை வியாபாரம் மாலை வரைக்கும் வர்த்தகம் களைகட்டுகிறது.

 தமிழகத்தில்  வேறு பகுதிகளில் கிடைக்காத அனைத்து வகை கருவாட்டு வகைகளும் இங்கு கிடைகிறது. நெத்திலியில் ஆரம்பித்து வாளை, கொடுவா, கெழுத்தி, வஞ்சிரம், சுறா என அனைத்து வகை கருவாடுகளையும் இங்கே வங்கி கொள்ளலாம். பாறை, வாளை உள்ளிட்ட கருவாடுகள் மலிவான விலைக்கு இங்கே கிடைக்கிறது.

இந்த சந்தை முழுக்க, குவியல் குவியலாக கருவாட்டை பட்டறை போட்டு வைத்து விற்பார்கள். ஆனால் இப்போது பல இடங்களில் கருவாட்டுச் சந்தை வந்துவிட்டதால் வரத்துக் கொஞ்சம் குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனாலும் தலைமுறை தலைமுறையாக இங்கு வந்து வியாபாரம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் உங்கள் யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று, சந்தைகூடும் இடமானது அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அவர்களால் ஆண்டுக் குத்தகைக்கு விடப்படுகிறது. இங்கே சந்தை நடத்த நகராட்சிக்கும் தனியாக வரி செலுத்த வேண்டும். அறநிலையத் துறையும் நகராட்சியும் இதையெல்லாம் கணக்குப் போட்டு வசூலித்துக் கொண்டாலும் சந்தைக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்கவில்லை என கருவாட்டு வியாபாரிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் இங்கு கருவாட்டுச் சந்தையில் பெண்கள் அதிகம் பேர் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஒதுங்க கூட எந்த வசதியும் இல்லை. முதல் நாள் இரவே சந்தைக்கு வரவேண்டி இடுப்பதால்  ரயில்வே நிலையத்தில் தான் படுத்திருகின்றனர்.  நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட மயிலாடு துறை கருவாட்டுச் சந்தையில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்பதே கருவாட்டு வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

பின் குறிப்பு: ஒரு காலத்தில் தரங்கம்பாடிக்கு ம்,  மயிலாடுதுறைக்கு ம் இடையே ஓடிய ரயில் கருவாட்டு எக்ஸ்பிரஸ் என்றே அழைக்கப் பட்டது!  இந்த ரயில்,  ஒரு தலை ராகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளது!

ராஜேந்தரும் அதே படத்தில்கூடையில கருவாடு, கூந்தலிலே பூக்காடு என்றொரு பாடல் எழுதி இருக்கிறார். கருவாடு ம், பூக்காடும் இரண்டுமே வாசம் நிறைந்தவை தான்!



Senthilkumar Deenadhayalan

No comments: