Monday, May 26, 2014

அப்பனாவது விளையாட்டா ! பிரசவ நேரத்தில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக அலைந்துக் கொண்டிருப்பார்.

ஹீரோயினுக்கு பிரசவம் என்றால், லேபர் வார்டு வாசலில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக நகம் கடித்தபடி அலைந்துக் கொண்டிருப்பார்.

நிஜவாழ்க்கையில் இப்படியா நடக்கிறது, இன்னும் ஏன் இந்த இத்துப்போன சீனை எல்லா படத்திலும் வைக்கிறார்கள் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இதே நேரத்தில் நானும் அப்படிதான் அலைந்துக் கொண்டிருந்தேன். வயிற்றை தள்ளிக்கொண்டு, என் கையைப் பிடித்து அழுத்திவிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே பரிதாபமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த மனைவியின் முகம் பிரேம் போட்ட படமாய் நெஞ்சில் அப்படியே இன்னும் மாட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரைமணி நேர பரிதவிப்பு. கதவை திறந்துக் கொண்டு நர்ஸ் ஒருவர் டென்ஷனாய் வெளியே வந்தார். ஏதாவது சொல்வார் என்று எழுந்து நின்று அவரது முகத்தை பார்க்கிறேன். என்னை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்துச் சென்றார். “ஏதேனும் சிக்கல் ஆயிட்டிருக்குமோ?” என்று படபடவென மனசு அடித்துக் கொண்டது.

சரியாக 11.45க்கு இன்னொரு நர்ஸ் வெளியே வந்தார். “பொண்ணு பொறந்திருக்கு”

“பொண்ணுதான்னு தெரியும் சிஸ்டர்” என் பதிலை சட்டை செய்யாமல், “க்ளீன் பண்ணிக்கிட்டிருக்காங்க. வெளியே கொண்டுவந்து காட்டுவாங்க” என்றார்.

ஐந்து நிமிடத்தில் டாக்டர் வெளியே வந்தார். அவருக்கு பின்னால் வெளியே வந்த நர்ஸ் துணியில் தமிழ்மொழியை சுற்றி எடுத்துக்கொண்டு வந்து காட்டினார். நான், அம்மா, மாமியார் மூன்று பேர்தான் வெளியே இருந்தோம்.

செம்பருத்தி பூ மாதிரி செக்கச்செவேலென இருந்தாள். குளோஸப்பில் பார்த்தபோது அனிமேஷன் பொம்மை மாதிரி சட்டென்று கண் திறந்தாள். ‘க்கியாங்’ என்று விசித்திரமாக குரல் எழுப்பி அழுதாள்.

என் கையை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். வலித்தது. நான் அப்பனாகி விட்டேன்.

                                           Yuva Krishna

No comments: