Thursday, May 1, 2014

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்
---------------------------------------------------------
’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.

தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த நாட்டில் வாழ லாயக்கில்லாதவன்.. என்று பலவகையில் தூண்டிவிட்டன. ஆனாலும் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 2009 தேர்தலில் பார்த்த அதே அளவுதான். வாய்கிழிய கத்தினாலும் 27 சதவீத மக்களை ஓட்டுப் போட வைக்க முடியவில்லை.

உயர் நடுத்தர மக்களும் மேல்தட்டு மக்களும்தான் ஓட்டு போட வராமல் வீட்டுக்குள் முடங்கி விட்டார்கள் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த விமர்சனம் வந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை. உதாரணமாக தென் சென்னை தொகுதியை சுட்டிக் காட்டுகின்றனர். 24 மணி நேரமும் ஏர்கண்டிஷனில் இருந்து பழக்கப்பட்ட பணக்காரர்கள் பலர் காரை பார்க் செய்துவிட்டு, கர்சீப்பால் முகத்தில் வியர்வையை துடைத்தவாறு, நடந்து சென்று ஓட்டு போட்டு திரும்பியதை இந்த தொகுதியின் நாலைந்து சாவடிகளில் பார்த்தேன்.

ஆட்டோமொபைல் ஷோரூம் அதிபர் ஒருவர் பெரிய குடும்பத்துடன் குடை பிடித்து வரிசையில் நின்றிருந்தார்.
‘இது நான் பங்கேற்கும் இரண்டாவது தேர்தல். போன பார்லிமென்ட் தேர்தலுக்கு மறுநாள் கிளப்பில் நண்பர்களை சந்தித்தபோது, சொல்லிவைத்த மாதிரி எல்லாரும் என் மையில்லாத விரலை பார்த்து விசாரித்தார்கள். மனசு உறுத்தியது. ஊழியர்களுக்கு லீவு கொடுத்து அனுப்பிவிட்டு நீங்களே ஓட்டு போடாவிட்டால் எப்படி என்று மகள் கேலி செய்தாள். அதனால் சட்டசபை தேர்தல் வந்தபோது முதல் தடவை ஓட்டு போட்டேன்’ என்று பெருமையாக சொன்னார். 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க அவசியம் இல்லாதபடி ஓட்டுச் சாவடிகள் பரவலாக அமைக்கப்பட்டது, எதற்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத மேல்தட்டு வாக்காளர்களுக்கு வசதியாக அமைந்தது.

ஓட்டு போடவில்லையே என்ற உறுத்தல் எல்லாருக்கும் இருக்காது. ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது, இந்த ஒரு ஓட்டில் என்ன மாறிவிடப் போகிறது என்று விரக்தியாக சிந்திக்கும் வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ’எந்த வேட்பாளரும் சரியில்லை; ஒரு கட்சியும் நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யப்போவதில்லை. பிறகு ஏன் நான் ஓட்டு போட வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ‘நோட்டா’ மூலம் தேர்தல் கமிஷன் ஒரு வழி காட்டிவிட்டது. தேர்தலை புறக்கணிப்பதற்கான காரணத்தை அதன் மூலம் தகர்த்துள்ளது. என்றாலும், ஒரு அரசை உருவாக்குவதிலும் ஒரு ஆளும் கட்சியை தண்டிப்பதிலும் எனக்கும் பங்கிருக்கிறது என்ற நம்பிக்கையை வாக்காளர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – மனதில் விதைக்க தேர்தல் கமிஷன் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்.

ஒரு வகையில் பார்த்தால், ஓட்டு சதவீதம் அப்படியொன்றும் மோசமாக தெரியாது. ஏனென்றால், 1952 முதல் நடந்து வரும் ஒவ்வொரு தேர்தலிலும் அது உயர்ந்தும் குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. ஒரே இடத்தில் நின்றுவிடவில்லை. 1952ல் நடந்த முதலாவது லோக்சபா தேர்தலில் 61 சதவீதம் பேர் வாக்களித்தனர். ஏறி இறங்கி ஏறி 1984ல் 64 சதவீதத்தை தொட்டது. பின்னர் 60, 58க்கு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் மிரட்டலாலும் மக்கள் அதிருப்தியாலும் ஓட்டு சதவீதம் பெருமளவு குறையும்போது தேசிய சராசரியை அது பாதிக்கிறது. அதே சமயம், திரிபுரா தவிர்த்த வடகிழக்கு மாநிலங்கள் தீவிரவாதத்தை மீறி ஒவ்வொரு தேர்தலிலும் சிறப்பான ஓட்டு சதவீதத்தை அளித்து வருகின்றன. திரிபுரா ஸ்டெடி கிடையாது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாக்காளர்கள்.

நமது 58 சதவீதம் மிகவும் குறைவு என கவலைப்படுபவர்கள் பாகிஸ்தானை பார்க்க வேண்டும். அமெரிக்காவில் 50க்கும் குறைவு ரொம்ப சகஜம். தென் அமெரிக்க நாடுகளில் அதைவிட கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஒட்டுப்பதிவு எப்போதுமே 75 சதவீதத்துக்கு மேல் இருப்பது மேற்கு ஐரோப்பிய நாடுகளில். இந்தியாவுடன் ஒப்பிடும்போது அங்கெல்லாம் மக்கள்தொகை மிகவும் குறைவு. ஏழைகள் அளவுக்கு செல்வந்தர்கள் ஆர்வமாக ஓட்டு போடுவது கிடையாது என்ற விமர்சனங்கள் மேலைநாடுகளிலும் எழுந்தன. அரசு ஆய்வு செய்ததில், அந்த கருத்து ஆதாரமற்றது என்று தெரிய வந்தது. படித்தவர்களை விட படிக்காதவர்கள் ஓட்டு போடுவதை கடமையாக செய்கிறார்கள் என்ற நம்பிக்கையும் கள ஆய்வில் அடிபட்டுப் போனது.

எனவே ஓட்டு சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை மாநில, மாவட்ட, வட்டார அடிப்படையில் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. தர்மபுரியில் வன்னியர் – தலித் மோதல்களுக்கு பிறகு ஜாதிவாரியாக நடந்த அணிசேர்ப்பு அங்கு ஓட்டுப்பதிவு சதவீதத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது என கூறப்படும் கருத்தை ஒதுக்கிவிட முடியாது. நல்லவேளை, இதுவரை நடந்த 6 கட்ட ஓட்டுப் பதிவிலும் வாக்காளர்களை நாடுதழுவிய அளவில் மதம் பிரித்து வைக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் ஓட்டுப்பதிவு எகிறியிருக்கும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டு போட முடியாமல் தவித்தவர்கள் ஏராளம். சென்ற வாரம் மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் நிறைய வாக்காளர்கள் ஓட்டு போடமுடியாமல் போனதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பை நகரில் மட்டும் 3 லட்சம் பேர் பட்டியலில் பெயர் இல்லாமல் திரும்ப நேர்ந்துள்ளது. மொத்த மொத்தமாக பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது சதியா, வடிகட்டிய அலட்சியமா என்பது விசாரணை நடத்தினால்தான் தெரியும். ராம் ஜெத்மலானி, அதுல் குல்கர்னி, தீபக் பரேக் போன்றவர்களின் பெயரும் காணாமல் போனது வியப்பு. ஆனால், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பல தடவை பார்வைக்கு வைக்கப்பட்து. ஆன்லைனில் சரி பார்க்கவும் வசதி இருந்தது. கவனிக்காமல் விட்டது யாருடைய தவறு? ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக செயல்படும் ஒரு பத்திரிகை நண்பர், ‘ஆவலோடு ஓட்டுச் சாவடிக்கு சென்றேன். அங்கே பட்டியலில் என் பெயர் இல்லை என்று சொல்லிவிட்ட்தால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்’ என்று ஸ்டேட்டஸ் போடுகிறார். என்ன பொறுப்புணர்ச்சி, பாருங்கள்.

உடல் நிலை, எதிர்பாராத பயணம், வேறு தடங்கல்களால் ஓட்டு போட முடியாதவர்கள் எப்படிப் பார்த்தாலும் 10 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்பில்லை. அப்படியானால், தமிழகத்தை பொருத்தவரை மீதி 17 சதவீதம் பேர் – அதாவது 93 லட்சம்+ வாக்காளர்கள் ஓட்டுப் போடும் கடமையில் இருந்து தவறியுள்ளனர். இவர்களை என்ன செய்வது, இனிவரும் தேர்தல்களில் இவர்களும் ஓட்டு போடுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை யோசிக்க வேண்டும்.

சில நாடுகளில் ஓட்டு போடாதிருப்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. பொலிவியாவில் ஓட்டு போடாதவர், மூன்று மாதம் தன் சம்பளத்தை பாங்கில் இருந்து எடுக்கமுடியாது. இங்கேயும் அதுபோல ரயில் டிக்கட் முன்பதிவு செய்ய முடியாது, போட்டிகளில் பங்கேற்க கூடாது, பதவி உயர்வு மறுப்பு போன்ற தண்டனைகளை பரிசீலிக்கலாம். அதற்கு முன் ஓட்டுப்பதிவு கட்டாயம் என சட்டம் இயற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவில் 1920ல் இருந்து அத்தகைய சட்டம் இருக்கிறது. நெதர்லாந்து, இத்தாலியில் இருக்கிறது. உரிய காரணம் இல்லாமல் ஓட்டு போடாமலிருப்பது நிச்சயமாக ஜனநாயக குற்றம். நம்மூரில் குறைந்தபட்சம் அந்த ஆசாமிகளின் பெயர், படம் வெளியிட்டு பகிரங்கப்படுத்தலாம்.

அரசாங்கத்தை தேர்வு செய்வதில் அக்கறை காட்டாதவர்கள், அரசின் சலுகைகளை பெற தகுதியற்றவர்கள். அரசியல் பேசக்கூட அவர்களுக்கு அருகதை கிடையாது.

(இழு தள்ளு 23/ கதிர் /குமுதம் ரிப்போர்ட்டர் 04.05.2014)


                                                          கதிர் வேல் Kathir Vel

No comments: