Friday, May 30, 2014

அண்ணன் ஹிலால் முஸ்தபா அவர்கள் அன்புடன் எனக்கு(முகம்மதலி ஜின்னா) எழுதியது

   முகம்மதலி ஜின்னா அவர்களே! Mohamed Ali

முகம்மதலி ஜின்னாவின் ஆளுமையை அண்ணாந்து பார்க்கக் கூடியவர்களில் நானும் ஒருவன்.

முகம்மதலி ஜின்னாவோடு நேரடித் தொடர்பு கொண்ட தமிழக முஸ்லிம் குடும்பங்களில் உள்ள ஒரு குடும்பத்தின் வாரிசு நான்.

திருநெல்வேலி பேட்டை எம்.முகம்மது இஸ்மாயில் சுதந்திர இந்தியாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், காயிதே மில்லத் என்ற தகுதி பெற்றும் இருந்த தலைவர் எனக்கு தாதா முறை வேண்டும்.



முகம்மது அலி ஜின்னா அவர்களுக்கு முன்னர் அலி சகோதரர்கள் என வரலாறு சிறப்பித்துக் குறிப்பிடும் மௌலானா சௌகத்தலி, மௌலானா முகம்மதலி, இவர்களும் இவர்களின் தாயார் பீயம்மா அவர்களும் சுதந்திரப் போராட்டப் பிரச்சாரத்திற்குச் சென்னை வந்த காலத்தில் பெரம்பூரில் உள்ள எங்கள் பாட்டனார் ஆடுதுறை ஜமால் முகம்மது சாஹிபின் பங்களாவில் தங்கி இருந்தார்கள்.
திருநெல்வேலி முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு வந்த போது பீயம்மா அவர்களுக்கும் மௌலானா முகம்மதலி அவர்களுக்கும் தென்காசி எங்கள் பாட்டனார் இல்லத்தில் விருந்தளித்த பாக்கியம் கிடைத்தது.

இது மட்டும் அல்ல, மஹாத்மா காந்தி நிதி திரட்டி சென்னை ராஜ தானிக்கு வந்த போது ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) சென்னை தம்புச்செட்டித் தெருவில் இருந்த ஜமால் முகம்மத் அண்ட் கோ என்னும் தோல் பதனிடு ஏற்றுமதி அலுவலகத்திற்கு மகாத்மா காந்தியை அழைத்து வந்தார். ஜமால் முகம்மது சாஹிபிடம் காந்திஜி நிதி கேட்ட பொழுது, காந்திஜியிடம், ஜமால் முகம்மது சாஹிப் , “மஹாத்மா ஜி உங்கள் நிதி வசூல் தொகையினுடைய இலக்கு எவ்வளவு?” என்று கேட்டார்கள்.

அதற்குக் காந்திஜி ஒரு கோடி என்று பதில் தந்தார்.

ஜமால் முகம்மது சாஹிப் உடனே தன் செக் புக்கை எடுத்து செக்கில் தொகை குறிப்பிடாமல் கைய்யெழுத்துப் போட்டு மகாத்மாஜி நீங்கள் உங்கள் தேவைக்குரிய முழுத்தொகையையும் இதில் குறித்துக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜாஜியும் காந்திஜியும் பிரமித்து போனார்கள். ஜமால் முஹம்மது சாஹிப் கொடுத்த செக்கில் ஒரு லட்சம் குறித்துக் கொண்டார்.

“மிஸ்டர் ஜமால் முஹம்மது, இந்தியாவினுடைய அனைவர் பங்களிப்பும் இந்த நிதியில் இருக்க வேண்டும். ஏனவே உங்கள் பங்குக்கு இந்தத் தொகை எனக்குத் திருப்தியாக இருக்கிறது” என்று காந்திஜி ஜமால் முஹம்மது சாஹிபிடம் கூறிச் செக்கைப் பெற்றுக் கொண்டார்.

அந்த ஜமால் முஹம்மது சாஹிபின் மகள் வயிற்று பேரனாக இறைவன் எங்களைப் படைத்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்.

இந்தத் தம்பட்டம் இங்கே செய்து கொண்டதற்கு நான் சற்றுக் கூனிக் குறுகுகிறேன். அசூயைப் படுகிறேன்.

சில இடங்களில் இப்படிச் சொல்லிக் கொள்ளலாம் என்று தமிழ் இலக்கண நூலான நன்னூல் குறிப்பிடுகிறது.

“தன்னைப் புகழ்தல் தகும் புலவோர்க்கே..” எனவே மனம் பொருத்துக் கொள்ளுங்கள்.



Hilal Musthafa
--------------------------------------
இதில் காணும் செய்திகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றது .அண்ணன் நான் கேட்ட விளக்கத்திற்கு பதில் கொடுத்ததற்கு நான் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்கின்றேன் 
 Jazaakum'Allah Khairan.
நன்றி

"May Allâh reward you [with] goodness.".
 

No comments: