Saturday, May 3, 2014

கடைசி காட்சியில் கலக்கும் கதாநாயகி

கரப்பான் பூச்சிக்கு அடுத்ததாக எந்த பேரழிவையும் தாங்கி நிற்கும் சக்தி கொண்டது எலி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உயிர் பிழைத்துக் கொள்ளும் அறிவு எலிக்கு உண்டு. சர்வைவல் இன்ஸ்டிங்க்ட். ஆனால், எதிர்பாராமல் ஒரு நில நடுக்கமோ, சுனாமி போன்ற வெள்ளப் பிரவாகமோ ஏற்படும்போது, அது என்னவென்று தெரியாத குழப்பத்தில் எலிகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும்.

பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.

இரண்டே தொகுதிகளில்தான் பிரியங்கா பிரசாரம் செய்கிறார். சோனியா போட்டியிடும் ரேபரேலி, ராகுல் நிற்கும் அமேதி. ஃபிரோஸ் காந்தி, இந்திரா, சஞ்சய், ராஜீவ் என்று நீண்டகாலமாக இவை நேரு குடும்ப தொகுதிகள். ஆங்கில ஊடகங்கள் வெள்ளைக்காரன் அணிவித்த கண்ணாடியை இன்னும் கழற்றாததால் காந்தி பரம்பரை என்று குறிப்பிட்டு மகாத்மாவை அசிங்கப்படுத்துகின்றன. இரண்டு வாரமாக அந்தப் பெண்மணி நடத்திய பிரசாரம் எவர் கண்களிலும் படவில்லை. திடீரென்று பத்து நாட்களாக எந்த பத்திரிகை, எந்த சேனலை திருப்பினாலும் கழுத்தில் மஞ்சள் மலர்கள் மாலையாக படர்ந்திருக்க, சுருண்ட கருமுடி காற்றில் அலைபாய, உள்ளங்கை விரித்துக் காட்டி, கன்னத்தில் குழிவிழ பிரியங்கா சிரிக்கிறார்.

பிரணாப் முகர்ஜி கையால் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் வரையில் ஊண், உறக்கம் தேவையில்லை என சபதம் எடுத்தது போல இயங்கிக் கொண்டிருந்த பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் இப்படி ஒரேயடியாக திசைமாறி ஓடும் என்பதை பிஜேபி எதிர்பார்க்கவில்லை. உலகத்திலேயே விலை உயர்ந்த காரை விளம்பரப்படுத்தக்கூட அழகான பெண் தேவைப்படும் சூழலில், அழகுடன் கம்பீரமும் கலந்த பிரபலமான முகத்தை எந்த ஊடகம்தான் நிராகரிக்க முடியும் என்று முதலில் சமாதானம் தேடிக் கொண்டார்கள். ஆனால் தோல்வி பயத்தில் மிரண்டோடும் எலிகள் என்று பிரியங்கா வர்ணித்ததை அவர்களால் தாங்கவே முடியவில்லை.

இதற்கு ஒரு பின்னணி உண்டு. அகமதாபாத் தவிர உத்தர பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட மோடி முடிவு எடுத்தபோது, ’அங்கே அவரை எதிர்த்து நான் நிற்கிறேன்’ என்று வாலன்டியராக குரல் கொடுத்தவர் பிரியங்கா. பிஜேபி மீது சோனியாவும் ராகுலும் வைத்திருக்கும் மரியாதை பிரியங்காவுக்கு கிடையாது. ஆர்எஸ்எஸ் என்ற மதச்சார்புள்ள அமைப்பின் முகமூடியாக விளங்கும் பிஜேபி முழுமையான அரசியல் கட்சியே அல்ல என்பது பிரியங்காவின் கருத்து. ’வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் இந்த நாட்டின் பாரம்பரியத்தை நன்றாக அறிந்தவர்கள் என்பதால், அதிகாரம் கையில் இருந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அரசு நிர்வாகத்தில் குறுக்கிடாமல் தடுத்துவிட்டார்கள். மோடி அப்படி இருக்க மாட்டார். ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை அரசின் திட்டங்களாக மாற்றுவார். அதனால் மக்கள் மத்தியில் பிளவுகள் உண்டாகும். நாடு அதை தாங்காது’ என்று அம்மாவிடமும் அண்ணனிடமும் அவர் வாதம் செய்திருக்கிறார்.

கோரக்பூரில் பிரசாரம் செய்த மோடி, உத்தர பிரதேச முதல்வரின் தந்தையும் சமாஜ்வாடி தலைவருமான முலாயம் சிங்கை சீண்டினார். ‘நேதாஜீ (அப்படித்தான் மோடி குறிப்பிடுகிறார்), உத்தர பிரதேசத்தை குஜராத்தாக மாற்றுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு 24 மணி நேரம் தடையில்லாத மின்சாரம் வேண்டும். உங்களால் முடியுமா? மின்சாரம் என்றால் சக்தி. அது உங்களிடம் கிடையாது. 56 அங்குல மார்பு வேண்டும். அது உங்களிடம் கிடையாது’ என்று பேசினார். முலாயம் மல்யுத்த வீரராக இருந்தவர். தொண்டர்களிடம் பேசும்போது, உடற்பயிற்சி செய்து மார்பை நிமிர்த்தி நட என்று அறிவுரை சொல்பவர். அதை மறைமுகமாக கிண்டலடித்தார் மோடி. முலாயம் அல்லது மகன் அகிலேஷ் பதில் அளிப்பார் என்று பிஜேபி எதிர்பார்த்தது. இருவருமே பதிலளிக்கவில்லை. பிரியங்கா அளித்தார்.

‘இந்த நாட்டை ஆள்வதற்கு 56 அங்குல மார்பு தேவையில்லை. அந்த மார்புக்குள் துடிக்கும் விசாலமான இதயம் தேவை. அந்த இதயத்தில் நல்ல எண்ணங்கள் தேவை. இந்த நாட்டு மக்கள் எல்லோருமே என் சகோதர சகோதரிகள் என்ற நேச உணர்வு தேவை. இவை எதுவும் இல்லாத ஒருவருக்கு 56 அங்குல மார்பு இருந்து என்ன ஆகப்போகிறது?’ என்று பிரியங்கா கேட்டது பிஜேபி முகாமில் வெப்பத்தை கூட்டியது.

அதோடு நிற்கவில்லை. ‘பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன். இரவிலும் பெண்கள் சுதந்திரமாக நடக்கும் சூழ்நிலையை உருவாக்குவேன் என்று மோடி மேடையில் பேசுகிறார். அவர் ஆட்சி செய்யும் குஜராத்தில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு இளம்பெண் எங்கே போகிறாள், யாருடன் பேசுகிறாள் என்றெல்லாம் 24 மணி நேரமும் உளவுபார்க்க போலீசை ஏவி, அரசு அதிகாரத்தை அந்தரங்க காரணங்களுக்காக துஷ்பிரயோகம் செய்பவர் பெண் சுதந்திரம் பற்றி பிரசங்கம் செய்வது நல்ல தமாஷ்’ என்று மோடியை போட்டுத் தாக்கினார் பிரியங்கா.

கோபத்தில் கொந்தளித்த அருண் ஜெட்லி, தேர்தல் பிரசாரத்தின் கண்ணியத்தையே குலைத்துவிட்டார் பிரியங்கா என்று பாய்ந்தார். ஆனால், தலித் வீடுகளுக்கு ராகுல் தேனிலவுக்கு செல்கிறார் என்று அவதூறு பேசிய பாபா ராம்தேவ், முஸ்லிம்களின் வீடுகளை ஆக்கிரமிக்க இந்து இளைஞர்களுக்கு உத்தரவிட்ட பிரவீண் டொகாடியா, மோடிக்கு ஓட்டு போடாதவர்கள் தேர்தலுக்கு பிறகு நாட்டைவிட்டு ஓட வேண்டும் என எச்சரித்த கிரிராஜ் சிங் ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டு அருண் ஜெட்லி எகிறியது எடுபடவில்லை. உண்மையில், தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதையே இத்தனை காலம் மறைத்த மோடியை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் என மேடையில் கேள்வி எழுப்பிய ராகுலை பிரியங்கா தடுத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரை விமர்சிக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியதை அடுத்து ராகுல் அந்த விவகாரத்தை கிளறவில்லை.

ஆனால் பிஜேபி விடுவதாக இல்லை. வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் கம்பெனி தொடங்கிய ராபர்ட் வட்ரா குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆனது எப்படி, ராஜஸ்தான் மற்றும் அரியானா அரசுகளை பயன்படுத்தி நிலங்களை அபகரித்தது எப்படி என்று சீடியும் துண்டுப் பிரசுரமும் வெளியிட்டது. அதைபற்றி கேட்டதற்கு பிரியங்கா சொன்னார்: ‘அதில் உள்ள எலாமே பழைய தகவல்கள். அப்போதே விளக்கம் சொல்லி முடிந்துபோன விஷயம். பிஜேபியையும் மோடியையும் நான் விமர்சனம் செய்தால், இப்படி என் குடும்பத்தை அசிங்கப்படுத்த ஏதாவது பொய்யை அவிழ்த்துவிடுவார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவர்கள் திட்டத் திட்ட எனக்கு வலிமை கூடும்’.

இந்திரா காந்தியிடம் இருந்த காந்த சக்தி பிரியங்காவுக்கு அப்படியே வாய்த்திருக்கிறது என்று அமேதி, ரேபரேலியில் அவரது பிரசாரத்தை கவர் செய்த செய்தியாளர்கள் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள். அறவே செயற்கைத்தன்மை இல்லாத அணுகுமுறை மக்களை பெரிதும் கவர்வதாக கூறுகின்றனர். அம்மாவையும் அண்ணனையும் விட மிகவும் சரளமாக அவர் பேசுவதும், விமர்சனங்களை நாகரிகம் குறையாமல் எடுத்து வைப்பதும், மக்கள் கூட்டத்தோடு கலந்து உறவாடும் துணிச்சலும் தமிழகத்தில் இருந்து சென்றிருந்த செய்தியாளர்களை பாராட்ட வைத்துள்ளது. சாலையில் நடந்து செல்லும்போது திடீரென்று வழிமறித்து கோஷம் போட்ட ஆம் ஆத்மி இளைஞர்களை பிரியங்கா புன்னகை மாறாமல் லாவகமாக சமாளித்ததை சிலாகிக்கிறார் முன்னணி நாளிதழின் பெண் செய்தியாளர். ‘பிரியங்கா அவர்களுடன் பேசி முடித்து, கைகுலுக்கி விடைபெற்று கிளம்பியபோது அந்த இளைஞர்கள் தொப்பியை கடாசிவிட்டு பிரியங்கா ஜிந்தாபாத் என கோஷமிட்டதை பார்த்து ஆடிப்போனேன்’ என்கிறார் அவர்.

ஒன்று தெளிவாக தெரிகிறது. நேரு குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பை தேர்தல்கள் பிரித்துவிடாது. பதவி, அதிகாரம் மீது பற்றில்லாத ராகுல் காந்தியால் காங்கிரசுக்கு பலனில்லை என்று கட்சியினர் புரிந்துகொள்ளும் வேளையில் பிரியங்காவுக்கு பொறுப்புகள் தேடிவரும். அவர் பற்றற்றவராக தோன்றவில்லை. தேர்தலில் 6 கட்டம் முடிந்த நிலையில், இறுதி முடிவை இனி மாற்ற முடியாது என தெரிந்தும், அவர் முன்வரிசைக்கு வந்திருப்பது எதேச்சையாக நடந்திருக்க முடியாது. கணவனை காப்பாற்ற விரும்பும் சராசரி மனைவியாக இப்போது பேசினாலும், கட்சிக்கும் குடும்பத்துக்கும் ராபர்ட் ஒரு சுமை என உணரும் சந்தர்ப்பம் வாய்த்தால், பாட்டியை போலவே துணிச்சலான முடிவு எடுப்பார் என நம்பலாம்.

(இழு தள்ளு 24/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 08.05.2014)


                                                    கதிர் வேல் Kathir Vel

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//'‘இந்த நாட்டை ஆள்வதற்கு 56 அங்குல மார்பு தேவையில்லை. அந்த மார்புக்குள் துடிக்கும் விசாலமான இதயம் தேவை. அந்த இதயத்தில் நல்ல எண்ணங்கள் தேவை. இந்த நாட்டு மக்கள் எல்லோருமே என் சகோதர சகோதரிகள் என்ற நேச உணர்வு தேவை. இவை எதுவும் இல்லாத ஒருவருக்கு 56 அங்குல மார்பு இருந்து என்ன ஆகப்போகிறது?’

கேள்வியைக் கேட்டார் , பிரியங்கா, நச்சுனு!

LinkWithin

Related Posts with Thumbnails