Friday, May 9, 2014

எந்நிலையும் அவன் வசமே!


சோகம் சூழ்ந்துவிட்டதே
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்

கருணையாளனே!
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?

இதழ்களை உதிரவிட்டு
இதயத்தையேன் வாட்டுகிறாய்!
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாயென
கவலையுற்றுபோது!

படைத்தவன்
பாடம் நடத்தினான்

புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்?
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்?

கண்ணீரை யொதிக்கி
புன்னகையை மட்டும் கேட்டு
கையேந்தி நிற்கும்
மானிடா

அரிசியில்லாமல்
சோறுண்ண எண்ணும்
அறிவாளியா நீ?

நீரில்லாமல்
பயிர் வளருமென்று நினைக்கும்
புத்திசாலியா நீ?

நீரில்லாமல்
அண்டமில்லை என்பதை அறிவாயா?
இவ்வுலகமே
நீரால்தான்
நிரப்பட்டுள்ளது என்பதை மறந்தாயா?

பனித்துளி
இயற்கையின் கண்ணீர்
மழைதுளி
வானின் கண்ணீர்
தேன்துளி
தேனியின் கண்ணீர்

கண்ணீருக்குள் பல
காவியங்கள் நிரம்பியிருக்கிறது
கண்ணீரின் விளிம்பில்தான்
புன்னகையும் ஒளிந்திருக்கிறது

கண்ணீரை தந்துவிட்டேன் என
கலங்காதே
கண்ணீருக்கு பின்
கலகமும் தீருமென்பதையும்
மறவாதே!

புன்னகையில்
ஈர்ப்பு மட்டுமே உள்ளது
ஆனால்
கண்ணீரில்
ஆளுமை உள்ளது
அதனை அறியத் தவறாதே!

புன்னகைகளை
இதழ்கள் நெடுநேரம்
தாங்காதே
புன்னகையில்
கண்ணீர்துளி தெளித்தால்
இதயமும் இதழும்
வாடாதே!

ஆகவே
கண்ணீர் உனக்கு
ஆகாததல்ல
ஆதலால்
நீ வருந்தாதேயென
படைததவன் பாடம் நடத்துகிறான்
பறை சாற்றும் மறையின் மூலம்...

                                                                                    Malikka Farook

No comments: