Friday, June 7, 2013

அவசரமாய்த் தொடர்பு கொள் !


அவசரமாய்த் தொடர்பு கொள் !
தகவல் வந்த திசைக்கும்
எனக்கும் இடையே
சில
மாநிலங்கள் இருந்தன.

நேற்று வரை
இம்மென்றால் இறக்கி வைத்த
இணையம்,
இன்று உம்மென்று இருந்தது.

என் மின்னஞ்சல்
அச்சு ஒடிந்து போன
ஒற்றைச் சக்கரத் தேராய்
மலையடிவாரத்தில் மண்டியிட்டது.

நைந்து போன வாழைநாராய்
என்
கணிப்பொறி இணைப்பு
இறுதி மூச்சை இழுத்துக்
கொண்டிருந்தது.

தொலை பேசியை
அவசரமாய் இழுத்து
பரபரப்பாய் அழுத்தினால்,
எதிர் பக்கத்தில் அது
நிதானமாய் அடித்து ஓய்ந்தது.


இன்னொரு முறை
நிதானமாய் இயக்கிய போது
அது
அவசர கதியில் இருந்தது.

கணிணிக்கும் தொலைபேசிக்குமாய்
ஓடி ஓடி
என் நிம்மதிப் பாதங்களில்
பதட்ட ஆணிகள் முளைத்தன.

காலைப் போராட்டம்
மாலை வரை தொடர்ந்தும்
என் தகவல்
என் கைகளிலேயே
பரிதாபமாய் கிடந்தது.

இரவில்
மனைவி கேட்டாள்.
"உலகம் சுருங்கி விட்டது" இல்லையா ?

முதல் முதலாய் மறுத்தேன்
இல்லை
இழை அறுந்த போது
இரண்டு மடங்கு தூரமாகி விட்டது.

Joseph Xavier Dasaian
எளிமையான நடையில் சிறந்த கவிதையை யாத்தவர்.

(சேவியர் )

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான நடை... அருமை...

Joseph Xavier Dasaian அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

mohamedali jinnah said...

மிக்க நன்றி உங்கள் கருத்துரைக்கு திண்டுக்கல் தனபாலன் அவர்களே