1. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்த்த வேண்டியது ரொம்ப முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். “அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. குழந்தைகளை பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.
2. குழந்தையை அப்பா கண்டிக்கும் போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்ளவேண்டும். தப்பு செய்தால் இரண்டுபேருமே தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதே போல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அது தான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.
3. ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும் போதே தண்டிக்காதீர்கள். செய்தது தவறு என புரிய வையுங்கள். சொல்லுங்கள், சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள்.
4. “மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட்டே இருப்பாங்க” என குழந்தை நினைக்கக் கூடாது. சரியான நேரத்தில் தண்டனையும் கொடுங்கள். குறிப்பாக தவறு செய்யும் போது அந்த நேரத்திலேயே தண்டனை தருவது தான் நல்லது. அப்பா வரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட.
5. கொடுக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் கையால் வறியவருக்கு உதவிகள் செய்ய வைக்கலாம். அதற்கு முதல் கட்டமாக கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வது முக்கியம்.
6. குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து எதையாவது திருடிக் கொண்டு வருவது சகஜம். உண்மையில் குழந்தைகளுக்கு இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது என்பதே தெரியாது. அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.
7. காலம் தவறாமையை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். லேட்டாக வந்து பழகும் குழந்தைகளுக்கு அது ஒரு பழக்கமாகவே ஆகிவிடும். எனவே காலம் தவறாமையை கவனமாய் போதியுங்கள். குறிப்பாக நீங்களும் அதைக் கடை பிடியுங்கள். அரக்கப் பரக்க ஸ்கூலுக்கு குழந்தையை பத்து நிமிடம் லேட்டாய் கொண்டு விடுவதை நீங்கள் நிறுத்த வேண்டியது அதி முக்கியம்.
8. எந்தக் காரணம் கொண்டும் உங்களுடைய அலுவல் டென்ஷனையோ, யார்மேல் உள்ள கோபத்தையோ குழந்தைகளிடம் காட்டவே காட்டாதீர்கள். நீங்கள் அவசரத்திலோ, கோபத்திலோ சொல்லும் ஒற்றை வார்த்தை போதும் குழந்தையின் மனதை புரட்டிப் போட. குழந்தைகளுடம் பேசும்போது உலகிலுள்ள மற்ற அனைத்து பிரச்சினைகளையும் தூர எறிந்து விட்டு பேசுங்கள்.
3 comments:
பெற்றோர்கள் அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள்... நன்றி ஐயா...
சேவியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
சலாம்
பெற்றோர் பிள்ளைகளுக்கு தேவையான அறிவுரைகளை பருவம் தவறி சொல்வதால் பிள்ளைகள் கேட்கவில்லை என புலம்புவதில் அர்த்தமில்லை - நல்ல ஆக்கம்
சலாம்
பெற்றோர் பிள்ளைகளுக்கு தேவையான அறிவுரைகளை பருவம் தவறி சொல்வதால் பிள்ளைகள் கேட்கவில்லை என புலம்புவதில் அர்த்தமில்லை- நல்ல ஆக்கம்
Post a Comment