Sunday, June 9, 2013

"வரம்பு”

வாழ்வியல் வயலின்  வரப்பு

.....வகுத்திடும் கொள்கை வரம்பு

தாழ்விலா வாழ்வை நிரப்பும்

.....தகுதியின் வரம்பே நிலைக்கும்

ஏழ்மையை வறுமைக் கோட்டின்

... எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில்

ஏழ்மையின் வரம்பும் நீங்கா

....இழிநிலை என்றும் காண்பாய்!



அளவினை மீறும் வரம்பே

...அசைத்திடும் நாக்கின் நரம்பால்

பிளந்திடும் பகையும் திறக்கும்

....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும்

அளவிலா வரம்பு கடந்தால்

..அக்கறைக் கூட இடர்தான்

களவிலாக் கற்பைப் பேண

...காதலில் வரம்பைக் காண்பாய்!





நாடுமுன் ஆசை நரம்பை

.....நாணெனக் கட்டு வரம்பால்

கேடுள குரோதம் மிகுந்தால்

...கோடென வரம்பைப் போடு

பாடுமுன் பாட்டை யாப்பின்

.....பாதையில் வகுத்தல் வரம்பு

கூடுமே ஓசை அதனால்

....குவலயம் போற்றும் மரபே!

 "அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்”


கவியன்பன் கலாம் 

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


"வரம்பு” கவிதை இலண்டன் வானொலொலி ஒலிபரப்பு

1 comment:

Kavianban KALAM, Adirampattinam said...

என் பாடலைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்