Tuesday, June 18, 2013

காவிரி உப்பு



இனத்தின் பெயரால்

மொழியின் பெயரால்

மண்ணைப் பிரித்தவர்கள்

இறுதியில்

மேகம் கொட்டிச் செல்லும்

மழையையும்

கொள்ளையடித்தார்கள் !

***

வானுக்கும் பூமிக்கும்

கதவு போட முடியாததால்

காற்று மட்டும்

வேலி தாண்டி வந்து

வருடிச் செல்கிறது!

***

ஜாதி மத வெறுப்பின்

அடுப்புக்கு

விறகாகாமல்

பசித்த வயிறுகளுக்கெல்லாம்

அமுத மழை பொழிபவர்கள்

ஏர் பிடித்து வாழ்பவர்கள்!
***

ஊர் வாய்க்கெல்லாம்

உணவுதர

வயல் காட்டில் வெந்தவர்கள்

ஒரு வாய் உணவுக்கும் வழியின்றி

சுடுகாட்டில் வேகின்றார்!

***

உண்ணுகின்ற சோற்றில்

உப்பை சேர்ப்பதற்கு

காவிரிக் கரையோரம்

கதறியழுபவர்

கண்ணீரை

பிடித்து வந்தாலே போதும்!

***

கரிந்த வயல்களாய் கிடக்கும்

கழனிவாழ் உழவரின்

காய்ந்த வயிறுகளுக்கு

உலகமே உவந்து வந்து

ஊட்டி விட்டாலும்

அவருடம்பு ஏற்காது...

செந்நெல் விளையாமல்

அவர் மண்ணும் மணக்காது!

***

கர்நாடகச் சிறை உடைத்து

காவிரித்தாய் எப்போதும் வரட்டும்

அதற்கு முன்னால்

வான் கருணை இறங்கி வரவேண்டும்!

வஞ்சமிலா கொடையைத் தரவேண்டும்!

***
 
அபூஹாஷிமா வாவர்
 
Abu Haashima Vaver

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை உண்மை வரிகள் உண்மை...

இயற்கையாவது காப்பாற்றட்டும்...

அபூஹாஷிமா வாவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...