வேண்டும் வேண்டும்
மனித நேயம்
நெஞ்சில் கொண்டால்
வாழும் தேசம்
வேண்டும் வேண்டும்
மனித நேயம்
மனிதம் மனிதம்
நமது கீதம்
உண்பது நம் உயிர்வரை செல்லும்
பண்பது நம் உயர்வினைச் சொல்லும்
அன்பது இவ் உலகினை வெல்லுமே
ஃ
அறியா மையினை
அழிக்கும் மழையாய்
அறிவிங்கே பொழியட்டுமே
கல்விப் பயிர்கள்
தேசம் முழுதும்
செழித்திங்கே வளரட்டுமே
கல்லாத ஆளில்லை என் றிங்கே ஆகட்டும்
சொல்லாமல் சோகங்கள் சாயட்டுமே
தேசத்தின் தேகத்தில் நேசங்கள் பாயட்டும்
அன்போடு கல்வியும் பூக்கட்டுமே
இணைவோம் கரம்தொடு
அறிவின் வரம் கொடு
இனிய இந்தியா இனியென்றும் ஒளிவிடுமே
ஃ
மனிதன் மனதில்
மனிதம் வாழும்
நிலமையும் நிலைக்கட்டுமே
உதவும் கரங்கள்
விரைவாய் நீளும்
உலகமும் விழிக்கட்டுமே
ஏழையின் சோகங்கள் உன்னாலே தீரட்டும்
வேற்றுமை எண்ணங்கள் சாகட்டுமே
அன்பெனும் மென்காற்று நில்லாமல் வீசட்டும்
வன்முறை போராட்டம் போகட்டுமே.
பெண்மையை மதித்திடு
முதியோரை வாழ்த்திடு
நமது இந்தியா மகிழ்வினில் திளைத்திடுமே
ஃ
சுரக்கும் பாலைத்
தனக்கே தனக்காய்
ஆவினம் வைப்பதில்லை
விளைக்கும் கனியை
தனக்கே தனக்காய்
தாவரம் சேர்ப்பதில்லை
தன்னல எண்ணங்கள் தன்னாலே தீரட்டும்
இன்னல்கள் இல்லாமல் வாழட்டுமே
தீமைக்குத் தீமையே தீர்வென ஆகாது
நன்மையே நெஞ்சோடு ஆளட்டுமே
மனிதம் மலரட்டும்
புனிதம் புலரட்டும்
புதிய இந்தியா புதிதென பிறந்திடுமே
Joseph Xavier Dasaian (சேவியர்)
No comments:
Post a Comment