அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்னாளின் செல்வமென எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!
தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!
முழுமைபெற்ற மாந்தர்களை முற்றுபெற்ற இலக்கியத்தை
பழுதின்றித் தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவின்றி வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்திங்கு தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!
அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?
அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்காய்
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?
தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?
-------------------------------------About இராஜ. தியாகராஜன்
பாவலன் என்றெண்ணிக் கொண்டு மரபுப்பாக்களை எழுதும் ஒரு மொழிப் பயிற்சியாளன். புதுச்சேரி அரசில் பணிபுரிகிறேன். இப்புவியில் இருக்கின்ற நல்லிதயங்களின் நட்பாயினும் சரி நேரடியான உறவுகளாயினும் சரி என்றுமே நம் தாய்மொழியே முதல் என்பதை உணர்ந்து செயல்படுகிறேன். நம்முடன் இருக்கும் ஒரு சில உறவுகளையே தாய் மொழியின் உயர்வை என்னால் உணரச் செய்ய இயலாத போது ஊருக்கு உபதேசம் செய்வது போலிருக்கிறது என் நிலை!! இருப்பினும் என்கடன் பணி செய்து கிடப்பதே!
by இராஜ. தியாகராஜன்
No comments:
Post a Comment