Saturday, February 9, 2013

'ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்.'

 கதிரின் வீச்சு, வேலையினால் வந்த களைப்பு உடலுக்கும் மனதுக்கும் மாறுதல் இடம் நாடியது. வியர்வைத் துளிகள் உடலில் வழிய வீடு செல்லாமல் கடற்கரை சென்று வருவோம் என அங்கு சென்றேன். இருள் கவ்வவில்லை சூரிய ஒளியின் வேகம் குறையவில்லை. கடலின் ஊடே வந்த காற்று வெப்பத்தை தணித்தது உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்வைத் தந்தது.
   அந்திமயங்கும் நேரம் நெருங்க என்னருகில் ஒரு பெண் குடைபிடித்துக் கொண்டு நடந்து சென்று சிறிது தொலைவில் அமர்ந்தாள். தாகம் வர அவளிடத்தில் சென்று அவள் வைத்திருந்த நீரைப் பருக கேட்டேன். அவள் எந்த தயக்கமும் மறுப்பும் சொல்லாமல் குடிநீர் கொடுத்தாள். நீரை நின்றுக் கொண்டே பருக 'நின்றவாறு குடிக்காதீர்கள் அமர்ந்து குடியுங்கள்' என சொல்ல அவ்வாரே செயல்பட்டேன்.  பேச்சினை அவள் தொடங்க நானும் அங்கேயே அமர்ந்து அவளோடு பேசிக்கொண்டிருக்கும் போது " கடற்கரையிலும் குடை பிடித்து வருவதனை இன்றுதான் நான் பார்த்தேன்" என்று சொல்ல

'ஏன் அதில் என்ன தவறு? சூரிய ஒளியின் வெப்பமிருந்தது மற்றும் சில ஒவ்வாமை எனக்கு உண்டு அதனால்  குடை பிடித்தேன்.என் உடல்நலத்தினைப் பற்றி எனக்குத் தெரியும்.மற்றவர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி  நான் நினைப்பதில்லை'
'நீங்கள் சொல்வது சரிதான் நேரமாகிவிட்டது நான் வருகிறேன்' என்று புறப்பட
 'நீங்கள் எதில் வந்துள்ளீர்கள் 'என அவள் கேட்க
'இரு சக்கர வண்டியில் வந்தேன்' என்றேன்
'என்னை போகும் வழியில்  பேருந்து நிலையத்தில் விட்டு விடுங்கள் நானும் வருகிறேன்' என்றாள்.
நாம் எப்படி அறியாத பெண்ணை வண்டியில்அழைத்துச் செல்வது என்ற அச்சத்தில் 
'இல்லை வந்து ..வந்து' வார்த்தைகள் வர முடியாமல் திணற
அதற்கு  அப்பெண் உடனே 'தெரியும் எப்படி அறியாத பெண்ணை வண்டியில்அழைத்துச் செல்வது  என்றுதானே யோசிக்கின்றீர்கள் .தெரியாத ஆணுக்கு உதவலாம் ஆனால் தெரியாத பெண்ணுக்கு உதவ மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு.  ஒரு பெண் நீங்கள் நினைப்பது போல் நினைத்தால் சரி, ஆனால் ஆண்களே இப்படி நினைப்பது இன்னும் நாம் நமக்காக வாழவில்லை
என்பதைத்தான் காட்டுகின்றது. நீங்கள் இப்படி ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில்  நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்.' என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் பேசியதில் நாக்கில் வறட்சி ஏற்பட்டு தாகம் வந்தது திரும்பவும் அவளிடம் எப்படி குடிக்க தண்ணீர் கேட்பது என்பதோடு தாகத்துடன்  நானும் வீட்டிற்கு கிளம்பினேன்.

No comments: