Wednesday, November 13, 2019

இசை முரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களின் ‘சாரட்’!

நாகூர் நானாவின் ‘சாரட்’!

– தாழை மதியவன்

‘எங்கள் நாடும் எங்கள் நலமும்

எந்நாளும் நிலை என்றே, சங்கே முழங்கு!

எந்த இனமும் எங்கள் இனமாம்

இதுவே அறிஞர்கள் காட்டும் நல்வழியாம்!

(எங்கள்)

பாடல் உச்சக்கட்டத்தில் ஒலிக்கிறது; ஏழரைக் கட்டையைத் தாண்டி எட்டை எட்டுகிறது. இலங்கை கண்டியின் இசைக் கச்சேரி மேடையில் இசை முரசு ஒலிக்கிறது.


1955 அளவில் இசைக் கச்சேரிகள் செய்ய இலங்கை சென்ற அந்த கறுப்புக் குயிலை ஈழ முஸ்லிம்களோடு ஈழத் தமிழர்களும் மார்போடு அணைத்துக் கொண்டனர். மன சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டனர்.

1950களிலேயே ‘சங்கே முழங்கு’ பாடல் ஏMஙயின் இசைத் தட்டாக வெளிவந்திருந்தது. அந்த இசைத்தட்டின் இன்னொரு பக்கப் பாடல்:

‘சின்னச் சின்ன பாலர்களே!

சிங்காரத் தோழர்களே!

ஒன்றாகக் கூடிவிளையாடுவீரே  நீவிர்

நன்றாகக் கல்வி நயம் தேடுவீரே!’

இந்த இரு பாடல்களையும் எழுதிய ‘இசைத்தேன்’ நூலாசிரியர் கி.மு. நல்லதம்பிப் பாவலர் (கிதுர் முஹம்மது) தான் இசைமுரசை இலங்கைக்கு அழைத்துச் சென்று பெரும் புகழிசைப் பயணத்தை தொடக்கி வைத்தவர். ஈழத்தின் ஆழத்திலிருந்து இமய உச்சிக்கு…

மணவிழாக்களிலும் கூட்டங்களிலும் தப்ஸாக ஒலித்த இசைக்குரல் நாளடைவில் பெரும் முரசமாக ஒலித்தது.

1939ல் நாகூர் சபாக்களில் பாடிய நாகூர் நானா இந்தி எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாக அன்றைய மதராஸ் ராஜதானி முதல்வர் ராஜாஜிக்கு கறுப்பு காட்டிய நால்வரில் ஒருவர். அன்றைய நீதிக் கட்சிக்காரராய் அரசியல் வாழ்வைத் துவக்கிய நாகூர் நானா கட்சியின் பிரச்சார பீரங்கியாக விளங்கிய பட்டுக்கோட்டை அழகிரியால் மேடைகளில் ஏற்றப்பட்டு பாடவைக்கப்பட்டார். அஞ்சா நெஞ்சன் என அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரி நானாவை ‘கறுப்பா’ என்றே செல்லமாக அழைப்பாராம்.

அஞ்சா நெஞ்சனுக்குப் பின் நானா கலைஞர் கருணாநிதியோடு திருவாரூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகப் பணிகள் ஆற்றினார். கட்சி மேடைகளில் ஒலித்த குரல் கனகச்சிதமாக இஸ்லாமிய மேடைகளிலும் ஒலித்தது.

ஹெச்.எம்.வி., கொலம்பியா இசைத்தட்டுகள் நானாவின் குரலை தமிழ்ப்பேசும் மக்களிருக்கும் இடமெல்லாம் கொண்டு சென்றன. தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா இசைத்தென்றல் புழங்கும் இடங்களாகின. சிங்கப்பூர் மஜீது பிரதர்ஸ் வெளியிட்ட ஒலி, ஒளிப் பேழைகள் உலகை வலம் வந்தன.

ஒரு கணக்கின்படி இஸ்லாமிய இசைத் தமிழ்வாணர்கள் நூற்றுக்கணக்கில் ஐம்பது ஆண்டுகளில் மேடைகளில் மெல்லியப் பூங்காற்றாய்த் தவழ்ந்துள்ளனர். இவர்களில் தனிச்சிறப்புமிக்கவர் நாகூர் நானா என்றால் எவரும் எதிர்வாதம் செய்ய முடியாது. அவர் குரலை முந்த எந்தப் பாடகராலும் இயலாது. எட்டை எட்ட முடியாது.

‘அதிகாலை நேரம் சுபுவுக்குப் பின்னே

அண்ணல் நபி நடந்தார்கள்’

என நானா பாடும்போது நெஞ்சை வருடும் குரல் வைகறை சூழலைக் கொண்டு வந்துவிடும்.

“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,

கொஞ்சம் நில்லு

எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு,

சலாம் சொல்லு.”

என நானா தென்றலிடம் பேசியபோது இசைஞானி இளையராஜா சகோதரர்கள் அன்று பாவலர் பிரதர்ஸ் எனும் பெயரில் இசைக் கோர்வை செய்தார்கள்.

‘திருமறையின் அருள்மொழியில்

விளைந்திருப்பது என்ன?  அறிவு!

இறைத்தூதர்நபி பொன்மொழியில்

குவிந்திருப்பது என்ன?  அன்பு!

அறிவில் உருவாகி

அன்பில் நிறைவதென்ன?  ஞானம்!

அந்த ஞானத்தை வழங்கிடும்

மூலப்பொருள் என்ன?  மௌனம்!’

இவ்வாறு கேள்வியும் பதிலுமாய் இறைத்தூதரையும் இஸ்லாத்தையும் பற்றிப் பாடிய நாகூர் நானா தமிழுலகில் ரெட்டைக்குதிரை பூட்டிய சாரட்டில் பவனி வந்தார்.

கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி என குதிரைகள் பூட்டிய சாரட் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தது. அதன் ஓட்டத்தில் ரெட்டைப் பணிகள் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

ஒன்று இஸ்லாமியப் பணி, மற்றொன்று அரசியல் பணி, அகமும் புறமும்!

எளிமையான மொழியில் வலிமையான குரலில் இஸ்லாத்தை பற்றி பாடிய நானாவின் முத்தாய்ப்பான பாடல் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ எனும் பாடல் என்றால் மிகையாகாது. இப்பாடலின் எதிரொலிகள் கேட்காத இடமே கிடையாது.

முந்தைய காலத்தில் தமிழகத்தில் முஸ்லிம் லீக் சõமான்யரைத் தொட முயற்சிக்காத சூழலில் திராவிட முன்னேற்றக் கழகமே முஸ்லிம் இளைஞர்களை வசீகரித்தது; வாரி அணைத்துக் கொண்டது.

அவ்வாறு வசீகரம் செய்தவர்களில் ஒருவராக நாகூர் நானா இருந்தார். அவருடைய குரலும் ஆர்வமும் நாகூர் சபாவில் குழுப்பாடலிலும் தனித்தே ஒலித்தது. அந்த தனிக்குரல் திராவிடக் கட்சி மேடைகளில் உரத்து ஒலித்து கண்ணியம் பெற்றது. ஒரு பாடல் இரு பாடல்களாகி கடைசியில் பல பாடல்களாகி தனிக் கச்சேரி கண்டது.

கச்சேரிகளிலும் ரெட்டைக் குதிரைகள் பவனி வந்தன. இஸ்லாமியப் பாடல்களோடு திராவிட இயக்கப் பாடல்கள் முழங்கின. ஓரிறை, ஓர்நிறை, சமரசம், சமநீதி, ஒன்றே குலம் எனப் பாடல்கள் உரத்து ஒலித்தன. காதை வருடி கருத்தில் பதிந்தன.

“வாழவாழ நல்ல வழிகளுண்டு  நபி

வழங்கிய நெறிகளிலே!

வாரி வாரித்தந்த வைரமுண்டு  அவர்

வாய்மலர் மொழிகளிலே!”

எனப் பாடிய நாகூர் நானா “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என அழைத்தபோது நல்ல தமிழ் நெஞ்சங்கள் அழைப்பை ஏற்றுப் புறப்பட்டன. 1967ல் புதிய அத்தியாயம்

படைத்தன.

“நீதிகேட்டு மனித வாழ்வு அழிவிலே

நீந்தும்போது கைகொடுத்துக் காத்தவர்!

வேதம்தந்து நேர்மைத்தாயின் மடியிலே

வையகத்தை தாங்கிச் சென்றுசேர்த்தவர்!”

எனப் பாடிய நாகூர் நானா “ஓடிவருகிறான் உதய சூரியன்” என இயக்கப் பாடல்களையும் இஸ்லாமியப் பாடல்களையும் பேரருவியாய்க் கொட்டிக் கொண்டேயிருந்தார். இரவுகளைப் பகலாக்கினார்.

அரபுலகைப் பற்றியும் தமிழுலகைப் பற்றியும் பாடிய நானா சில அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். அவற்றில் ஒன்று கீழ்க்கண்ட பாடல்:

“ஜனவரி ஆறு, பறந்து வந்தாரு

பயத்தாலே ஓடினார், அய்யா நேரு”

1957இல் பண்டிதர் ஜவஹர்லால் நேரு பெரியாரை ‘நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டிய கிழவர்’ என்றார். தமிழக எதிர்க்கட்சிக் காரர்களை ‘நான்சென்ஸ்’ எனக் கூறினார். இதற்காக 1958 ஜனவரி ஆறில் சென்னை மீனம்பாக்கம் வந்திறங்கிய நேருவுக்கு தி.மு.கழகத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள்.

அந்நிகழ்வைப் பற்றிய பாடலே ‘ஜனவரி ஆறு’. நாகூரார் பாடலை மட்டும் பாடவில்லை. அவர் கறுப்புக் கொடி போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார். 1939இல் ராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டியவர், 1958இல் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டினார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1957இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் கழக ஆட்சியின்போது சட்ட மேலவை உறுப்பினராக (Mஃஇ) பாடாற்றினார். அடுத்து வக்ஃப் போர்டு தலைவராக சேவையாற்றினார். அண்மையில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பிழந்தார்.

வெற்றியோ தோல்வியோ நானாவின் பயணம் தடைப்படவில்லை. முந்தியும் பிந்தியும் இவர்போல் எவரும் கிடையாது என சிலரை வரலாறு பதிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவராக நாகூர் நானா திகழ்கிறார்.

நாடெங்கும் பாடகர்கள் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் மக்களின் பாடகர்கள் மிகச் சிலரே! அவர்கள் கொள்கைப் பாடகர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் பிரதிநிதிகளாக விளங்குவார்கள், ஆந்திர பூமியின் மக்கள் யுத்தக் குழுப் பாடகர் கத்தார் போல. நாகூர் நானா ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் பிரதிநிதியாக இருந்தாலும் மாற்று முகாம்காரர்களாலும் மதிக்கத்தக்கவராய் விளங்கினார்.

கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் முதல் எத்தனையோ பெருமதிப்பு மிக்கவர்களால் பாராட்டப்பட்டவர் நாகூர் நானா.

திரைப்படத் துறையினர் தேடிவந்து நானாவைப் பாடவைத்தனர். நானா தேடிச்

சென்று பாடியிருப்பாராயின் கதையே வேறு.

இலக்கியத்தையும் இசையையும் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளும் சின்னஞ்சிறு குழுவினர் நாகூர் நானாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் பாலைவனத்தையே பார்ப்பவர்கள்!

நாகூர் நானாவின் சில பாடல்களில் இஸ்லாத்திற்கு முரணான கருத்துகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதிலும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனது குரல் வளத்தை கொண்டு மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்த்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த 08.04.2015 அன்று மரணமடைந்த நாகூர் நானாவின் மறுமைப் பேற்றுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

(மே 2015 இதழில் வெளியான கட்டுரை)
http://www.puthiyavidial.com


No comments: